இந்தா ஆரம்பிச்சிட்டாங்கல்ல.. நீங்கல்லாம் "கொடுக்க கூடாது.." கிறிஸ்துமஸ் தாத்தா மீது தாக்குதல்
காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா (சான்டா கிளாஸ்) வேடமிட்டு பொதுமக்களுக்கு சாக்லேட் வழங்கிக்கொண்டிருந்த நபர் மர்ம நபர்களால் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
உலகம் முழுவதும் டிசம்பர் மாதம் 25ம் தேதி(நாளை) கிறிஸ்துமஸ் பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து இதற்கான தயாரிப்பு பணிகளில் கிறிஸ்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், குஜராத்தின் வதோதரா நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் நேற்று மாலை ஒருவர் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து மக்களுக்கு சாக்லேட் வழங்கி இருந்திருக்கிறார்.

சான்டா கிளாஸ்
அப்பகுதியில் இருந்த தங்களது உறவினர்களையும் சந்தித்து கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டிருக்கிறார். அப்போது அங்கு வந்த சிலர் ஏன் சாக்லேட் விநியோகிக்கிறீர்கள் என்று கேள்வியெழுப்பியுள்ளனர். கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த அந்த நபர் இவர்களுக்கும் சாக்லேட் கொடுத்து கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறியுள்ளார். இதனால் அந்த கும்பல் ஆத்திரமடைந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறது. இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றி அவர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்ட நபரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவர் படுகாயங்களுடன் சம்பவ இடத்திலேயே மயங்கி சரிந்துள்ளார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து சென்றுவிட்டது. இதனையடுத்து காயமடைந்த நபரை மீட்ட அப்பகுதி மக்கள் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

பாதுகாப்பு
அங்கு முதலுதவி செய்யப்பட்ட பின்னர் அங்கிருந்து மகர்புரா காவல்நிலையத்திற்கு சென்று இப்பிரச்னை தொடர்பாக முறையிட்டுள்ளனர். இது குறித்து அக்காவல்நிலைய ஆய்வாளர் ரஷ்மின் சோலங்கி கூறுகையில், "மகர்புரா பகுதியை சேர்ந்தவர்கள் சிலர் எங்களிடம் வந்து, கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்திருந்த நபரை கடுமையாக தாக்கியுள்ளனர். எனவே இனி இப்பகுதியில் நடக்கும் ஊர்வலத்திற்கு எங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று கூறினார்கள். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து எவ்வித புகாரையும் அவர்கள் கொடுக்கவில்லை. அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்" என்று கூறியுள்ளார்.

கிறிஸ்தவ மதம்
இதேபோல சில இடங்களில் கிறிஸ்துமஸ் தாத்தாவின் உருவத்தை இந்துத்துவா அமைப்பை சேர்ந்தவர்கள் சிலர் தீயிட்டு கொளுத்துவது போலவும், செருப்பை கொண்டு தாக்குவதைப் போலவும் வீடியோக்கள் டிவிட்டரில் வேகமாக பரவி வருகின்றன. குஜராத்தில் நிலைமை இப்படி எனில், சத்தீஸ்கரிலும் பழங்குடியின கிறிஸ்தவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இங்குள்ள நாராயண்பூர் மாவட்டத்தில் ஏராளமான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் இவர்கள் சமீபத்தில் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறினர். இது அங்குள்ள இந்துத்துவ அமைப்பினர் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனு
மீண்டும் இந்து மதம் திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். ஆனால் மக்கள் தங்கள் முடிவுகளில் உறுதியாக இருந்துள்ளனர். இதனையடுத்து இவர்கள் மீது மர்ம நபர்கள் சிலர் தாக்குதல் தொடுத்துள்ளனர். இவர்களது வீடுகள் சூறையாடப்பட்டிருக்கின்றன. எனவே கிராமத்தினர் அருகில் இருக்கும் மைதானத்திலும், தேவாலயத்திலும் தஞ்சமடைந்துள்ளனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என மாநில ஆளுநரிடம் 'சத்தீஸ்கர் கிறிஸ்டியன் ஃபோரம்' அமைப்பை சேர்ந்தவர்கள் மனு கொடுத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications