
"நான் உன்னை விட அழகு.. உன்னை போய்.." கள்ளக்காதலனின் மனைவி கேள்வியால் ஆத்திரம்! ஆசிட் வீசிய இளம்பெண்
மும்பை: நாக்பூரில் திருமணம் தாண்டிய உறவில் கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. பெண் ஒருவர் தனது கள்ளக் காதலனின் மனைவி மீது ஆசிட்டை வீசி தாக்கியுள்ளார்.
திருமணத்திற்கு மீறிய உறவு காரணமாக ஏற்படும் குற்றங்கள் சமீப காலங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல நேரங்களில் இவை கொலையில் சென்றும் கூட முடிவடைகிறது.
அப்படித்தான் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் திருமணம் தாண்டிய உறவில் இருந்த பெண் ஒருவர், தனது காதலனின் மனைவியைப் பழிவாங்க நினைத்து கொடூர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.
கண்ணை மறைத்த கள்ளக் காதல்.. ஒரே ஊசியில் கணவனை காலி செய்த 'ஒத்தரோசா!'

கள்ள உறவு
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள யசோதா நகர் பகுதியில் வசித்து வருபவர் ப்ரீத்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 24 வயதான இவருக்குக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, புரங்கி வர்மா என்ற இளைஞருடன் திருமணம் நடந்துள்ளது. மேலும், இந்தத் தம்பதிக்கு 2 வயதில் ஒரு கைக்குழந்தையும் உள்ளது. இருப்பினும், கடந்த சில மாதங்களாகவே புரங்கி வர்மா அவரது மனைவி ப்ரீத்தி உடன் பெரும்பாலும் இருப்பதில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், ப்ரீத்தியுடன் பல்வேறு விஷயங்களில் அவர் தொடர்ந்து சண்டை போட்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

உன்னை விட அழகு
அப்போது தான் புரங்கி வர்மாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஜியா என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. புரங்கி வர்மா இந்த ஜியாவுடன் திருமணம் தாண்டிய உறவிலும் இருந்துள்ளார். இந்த விஷயம் எப்படியோ ப்ரீத்திக்கு தெரிந்துவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த ப்ரீத்தி, உடனடியாக ஜியாவை நேரில் பார்த்து சண்டை போட்டுள்ளார். தனது கணவனை விட்டுச் செல்லும்படியும் கூறியுள்ளார். வாக்குவாதத்தின் போது ப்ரீத்தி, "நான் உன்னை விட ரொம்பவே அழகா இருக்கிறேன். அப்படி இருக்கும் போது என் கணவர் எப்படி தான் உன்னை எல்லாம் காதலிக்கிறாரோ" என்று கேட்டதாகத் தெரிகிறது.

கொடூர திட்டம்
இதனால் ஆத்திரமடைந்த ஜியா எப்படியாவது ப்ரீத்தியை பழிவாங்க வேண்டும் எனத் துடித்துள்ளார். தன்னைவிட அழகாக இருப்பதாகக் கூறிய ப்ரீத்தியின் அழகைச் சிதைக்க வேண்டும் என கொடூர எண்ணம் ஜியாவுக்கு வந்துள்ளது. இதனால், அவர் தோழி ஒருவருடன் சேர்ந்து கொடூர திட்டம் ஒன்றை ஜியா போட்டுள்ளார். ப்ரீத்தி முகத்தில் ஆசிட் வீச ஜியா திட்டமிட, இதைத் தடுக்காமல் அவரது தோழியும் இதற்கு உடந்தையாக இருந்து உதவியுள்ளார்.

மர்ம போன்கால்
கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிய செல்போன் எண்ணில் இருந்து ப்ரீத்திக்கு கால் செய்துள்ளார் ஜியா. "உங்கள் கணவரின் கள்ள உறவு குறித்த ரகசியங்கள் எனக்குத் தெரியும். நீங்கள் என்னை குண்டலால் குப்தா நகருக்கு வந்து சந்தியுங்கள். மேலும், பல ரகசியங்களை நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்று யாரோ ஒருவர் பேசுவது போலப் பேசியுள்ளார். தனக்கு போன் செய்தது ஜியா தான் என்பதை அறியாத ப்ரீத்தியும் அவர் சொன்னதை நம்பி குண்டலால் குப்தா நகருக்குச் சென்றுள்ளார்.

ஆசிட் வீச்சு
வீட்டில் வேறு யாரும் இல்லை என்பதால் தனது 2 வயது மகனையும் தூக்கிக் கொண்டு வந்துள்ளார் ப்ரீத்தி. அங்கு புர்கா உடை அணிந்து தோழியுடன் ஜியா அவர்கள் பின் தொடர்ந்து வந்துள்ளார். அப்போது 2 வயது கைக்குழந்தை இருக்கிறது என்று கூட பார்க்காமல் புர்கா உடை அணிந்திருந்த ஜியா, அவர்களை வழிமறித்து ஆசிட் வீசிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். இதை ப்ரீத்தி சற்றும் எதிர்பார்க்காத நிலையில், அவர்கள் மீது ஆசிட் பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த இருவரும் வலியால் துடித்துள்ளனர்.

சிகிச்சை
அவர்களின் அலறல் சத்தத்தைக் கேட்டு அங்குத் திரண்ட அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மோசமான ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட இருவருக்கும் அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் தெளிவாகப் பதிவாகி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜியாவை கைது செய்தனர். அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அவருக்கு உடந்தையாக இருந்த மற்றொரு தோழியை அவர்கள் தேடி வருகின்றனர்.