
நாங்க “சாஃப்ட் இந்துத்துவா” இல்ல.. 2024ல் மோடியை வீழ்த்த காங்கிரஸ் தலைவர் தேர்தல் உதவும் - சசி தரூர்
காந்திநகர்: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் கேரள எம்.பி. சசி தரூர் தங்களுடைய கொள்கை மென்மையான இந்துத்துவா அல்ல என்றும் அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து செயல்படுவதே தனது நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்து வந்த ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்ததை தொடர்ந்து பதவி விலகினார். அதன் பின்னர் புதிய தலைவராக யாரும் தேர்வு செய்யப்படவில்லை.
காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த சோனியா காந்தியே இடைக்கால தலைவராக பதவியேற்று கட்சியை வழிநடத்தி சென்று கொண்டிருக்கிறார். ஆனால், அடுத்தடுத்த தேர்தல்களில் படுதோல்வியடைந்ததால் அக்கட்சிக்குள் பூசல்கள் வெடித்தன.
ஒற்றுமை யாத்திரை..குழந்தைகளுடன் ராகுல் செல்பி! தேர்தல் ஆணையத்துக்கு பறந்த புகார் -காங்கிரஸ் விளக்கம்

தலைவர் தேர்தல்
இந்த நிலையில் அக்டோபர் 17 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அக்டோபர் 19 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 24 தேதி தொடங்கி கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி நிறைவடைந்தது.

வேட்பாளர் பட்டியல்
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளார் பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் தலைமை வெளியிட்டது. இதில் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசி தரூர் ஆகியோர் நேருக்கு நேர் மோதுகின்றனர். சசி தரூருக்கு கேரள காங்கிரஸ் மற்றும் அகில இந்திய காங்கிரஸில் எதிர்ப்பலை இருப்பதால் கார்கேவுக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது.

சசி தரூர் பிரச்சாரம்
இந்த தேர்தலுக்காக தீவிர பிரச்சாரம் செய்து வரும் சசி தரூர், கடந்த 7 ஆம் தேதி 10 வாக்குறுதிகளை கொண்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். கட்சியை மறுசீரமைப்பு செய்வது, தொண்டர்களை வலுப்படுத்துவது, அதிகாரத்தை பகிர்ந்தளிப்பது என்று பல்வேறு வாக்குறுதிகளை அவர் தனது தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டு இந்தார்.

குஜராத்தில் பிரச்சாரம்
இந்த நிலையில் குஜராத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த சசி தரூர் பேசுகையில், "நான் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் நாம் மென்மையான இந்துத்துவா இல்லை என்பதை தெளிவுபடுத்துவேன். அனைத்து தரப்பு, அனைத்து பகுதிகளை சேர்ந்தவர்களையும் வரவேற்பேன். இந்த தேர்தல் 2024 தேர்தலில் மோடியையும் பாஜகவை வீழ்த்த காங்கிரஸுக்கு உதவும்." என்றார்.