For Daily Alerts
யஷ்வந்த் சின்ஹா மகன் உட்பட 12 பேர் மத்திய அமைச்சர்களாகின்றனர்?
டெல்லி: பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவின் மகன் உட்பட 12 பேரை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ள பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மோடி தலைமையில் மொத்தம் 44 பேர் மத்திய அமைச்சர்களாக உள்ளனர். இவர்களில் ஒரு சிலருக்கு கூடுதல் இலாகாக்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிவடைந்த பின்னர் மத்திய அமைச்சரவையை மாற்றி அமைக்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.

மத்திய அமைச்சராக வாய்ப்புள்ளவர்கள்:
- ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் தொகுதி எம்.பியும் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவின் மகனுமான ஜெயந்த் சின்ஹாவுக்கு நிதித்துறை இணை அமைச்சர் பதவி கிடைக்கலாம்.
- பாரதிய ஜனதாவின் தலைவர் பதவிக்கு அமித்ஷாவுடன் மல்லுக்கட்டிய ஜேபி நட்டாவுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
- ராஜஸ்தானின் அஜ்மீர் எம்.பி. சன்வார் லால் ஜாட், ராஜ்யசபா எம்.பி. பூபேந்திர யாதவ் ஆகியோரும் மத்திய அமைச்சர்களாகலாம்.
- உத்தர்காண்ட் மாநிலத்தின் பகத்சிங் கோசியாரி மற்றும் ரமேஷ் பொக்ரியால் ஆகியோரில் ஒருவருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கலாம்.
- மேற்கு வங்கத்தின் அசன்சோல் எம்.பி. பாபுல் சுப்ரியோவை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ள பாபா ராம்தேவ் பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.
- மகாராஷ்டிராவின் சந்திரபூர் எம்.பி ஹன்ஸ்ராஜ் கங்காராம் மற்றும் அகமது நகர் எம்.பி. திலீல் காந்தி ஆகியோரில் ஒருவர் அமைச்சராகலாம்.
- தெலுங்கானாவின் செகந்திராபாத் எம்.பி. பண்டாரு தத்தாத்ரேயாவுக்கும் அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளது.
- மோடி அமைச்சரவை பதவியேற்ற போது கூடுதல் அமைச்சர்கள் கேட்டு போர்க்கொடி தூக்கிய சிவசேனா கட்சிக்கு மேலும் ஒரு அமைச்சர் பதவி கிடைக்கக் கூடும்.
- மேலும் மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவ்தேகர், ரவிசங்கர் பிரசாத், பியூஸ் கோயல் உள்ளிட்டோர் வசம் உள்ள கூடுதல் இலாகாக்கள் பிரிக்கப்பட இருக்கிறது.