லூதியானா கோர்ட் குண்டு வெடிப்பில் 2 பேர் உயிரிழப்பு... பலர் கவலைக்கிடம் - பஞ்சாப்பில் உஷார் நிலை
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கோர்ட்டின் மூன்றாவது மாடியில் இன்று பயங்கர குண்டு வெடிப்பு ஏற்பட்டதில் 2 பேர் உயிரிழந்தனர் பலர் படுகாயமடைந்தனர்.
லூதியானா: பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கோர்ட்டில் மூன்றாவது மாடியில் உள்ள கழிவறையில் இன்று பயங்கர குண்டு வெடிப்பு ஏற்பட்டது. இதில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் நால்வர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. குண்டுவெடிப்பை அடுத்து பஞ்சாப் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
லூதியானாவில் மாவட்ட காவல்துறை ஆணையர் அலுவலம் அருகே உள்ள கீழமை நீதிமன்றத்தில் இன்று நண்பகல் 12.22 மணியளவில் பயங்கர சத்தத்துடன் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. நீதிமன்றத்தின் மூன்றாவது தளத்தில் உள்ள கழிவறையில் மர்ம பொருள் ஒன்று வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததால் நீதிமன்ற சுவர்கள் சேதமடைந்தன. கண்ணாடிகள் உடைந்து சிதறின. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.

குண்டு வெடிப்பு
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இதையடுத்து தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். நீதிமன்ற வளாகம் தற்போது போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.

பலர் படுகாயம்
இந்நிலையில் லூதியானா கீழமை நீதிமன்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு அதிகரிப்பு
நீதிமன்ற வளாகத்திற்குள் குண்டு வெடித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்கிடையில், பஞ்சாப் முழுவதும் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது மற்றும் பொது இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அப்பகுதியில் குண்டுவெடிப்புச் சத்தம் கேட்டதையடுத்து நீதிமன்றத்துக்கு வெளியே ஏராளமானோர் திரண்டனர். ஆறு மாடி கட்டிடத்தில் இருந்து புகை வெளியேறும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

அமரீந்தர் சிங் ட்வீட்
குண்டு வெடிப்பில் காயமடைந்த நான்கு பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங், லூதியானா நீதிமன்ற வளாகத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பலர் அதிர்ச்சி
அதில் சிலர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. காயமடைந்த நபர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து போலீசார் உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளியே கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். குண்டு வெடிப்பு சம்பவம் பொது மக்களை மட்டுமல்லாது நீதிபதிகள், வழக்கறிஞர்களையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.












Click it and Unblock the Notifications