பிரதமரை அரை மணி நேரம் காக்க வைத்த மம்தா?.. 'திமிர்பிடித்தவர்'.. பாஜக கடுமையான விமர்சனம்!
கொல்கத்தா: பிரதமர் மோடியை மம்தா பானர்ஜி அரை மணி நேரம் காக்க வைத்து விட்டதாக வெளியான தகவல் தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மம்தா பானர்ஜியை கண்டித்துள்ளார்.
யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் ஆய்வு செய்தார்.

ஒடிசாவில் புயல் பாதிப்பு குறித்து ஆய்வு நடத்திய பிரதமர் மோடி முதல்வர் நவீன் பட்நாயக்குடன் ஆலோசனை நடத்தினார். இதேபோல் மேற்கு வங்கத்திலும் மோடி-மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இடையே ஆலோசனை நடைபெறவிருந்தது.
இதன்படி இந்த கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி திட்டமிட்டபடி வந்தபோது மம்தா பானர்ஜி அரை மணி நேரம் தாமதமாக வந்ததாக தெரிகிறது. மேலும் புயல் சேத விவரங்களை அறிக்கையாக பிரதமரிடம் ஒப்படைத்த மம்தா வேறு ஒரு இடத்தில் புயல் சேத நிலவரத்தை பார்வையிட வேண்டியதுள்ளது என்று கூறி உடனடியாக அங்கு இருந்து புறப்பட்டு சென்றார் என்று தகவல்கள் கூறுகின்றன.
மம்தா பிரதமரை அரை மணி நேரம் காக்க வைத்து விட்டதாகவும் அவர் திமிர்பிடித்தவர் என்றும் பாஜகவினர் குற்றம்சாட்டினார்கள். ஒரு முதல்வர் பிரதமருடனான சந்திப்பை தவிர்த்து விட்டு வெளியேறுவது இதுவே முதல் முறை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினார்கள். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் மம்தா பானர்ஜியை கண்டித்துள்ளளார்.
இது தொடர்பாக அவர் டுட்டரில் கூறுகையில், ' மேற்கு வங்கத்தில் நடந்த இன்றைய நிகழ்வுகள் அதிர்ச்சியளிக்கின்றன. முதலமைச்சரும், பிரதமரும் நிறுவனங்கள் அல்ல, மக்களும் அல்ல. இவர்கள் இருவரும் பொது சேவை மேற்கொள்வதற்காக அரசியலமைப்பு மீது சத்தியம் செய்துள்ளனர். பேரழிவு நேரத்தில் வங்காள மக்களுக்கு உதவி வழங்க வந்த பிரதமரை தவிர்க்கும் வகையிலான மம்தாவின் நடத்தை வேதனையானது என்று ராஜ்நாத் சிங் கூறினார்.
இந்த தகவலை மம்தாவின் நெருக்கமான வட்டாரங்கள் மருத்துள்ளன. இது தொடர்பாக அந்த வட்டாரங்கள் கூறுகையில், ' மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூட்டம் நடைபெறுவது தொடர்பான கால அட்டவணையில் இருந்து 20 நிமிடங்கள் கழித்து வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். மேலும் அவர் அங்கு 15 நிமிடங்கள் காத்து இருந்தார். மறுஆய்வுக் கூட்டம் ஏற்கனவே தொடங்கிவிட்டதால் மம்தா உள்ளே நுழைந்து பிரதமர் மோடியை வாழ்த்தினார். அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர். முதல்வர் மம்தா பிரதமரிடம் சேத விவர குறிப்புகளை ஒப்படைத்தார். பின்னர் பிரதமரின் அனுமதியை பெற்று திகாவுக்கு மம்தா சென்றார் என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications