For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மேகதாது பிரச்சினையில் பேச்சுவார்த்தையே தேவையில்லை - ராமதாஸ்

Google Oneindia Tamil News

டெல்லி: மேக்கேதாட்டு அணை பிரச்சினையில் பேச்சுவார்த்தை தேவை இல்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டும் கர்நாடகத்தின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கை பற்றி இரு மாநில அரசுகளிடமும் பேசித் தீர்வு காண முயல்வதாக பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இது உண்மையாக இருந்தால் காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்படும். என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Ramadoss released a statement about meketatu

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மேக்கேதாட்டு அணைப் பிரச்சினையைப் பொறுத்தவரை அதை தனித்துப் பார்க்க முடியாது. அதைக் காவிரிப் பிரச்சினையுடன் ஒருங்கிணைந்ததாகவே பார்க்க வேண்டும். காவிரிப் பிரச்சினையில் நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை செயல்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டிருந்தால், காவிரியின் குறுக்கே புதிதாக எந்த திட்டத்தை செயல்படுத்துவதாக இருந்தாலும் அதை அவ்வாரியமே கவனித்துக் கொண்டிருக்கும். அத்தகைய சூழ்நிலையில் மேகதாது பிரச்சினையே எழுந்திருக்காது.

எனவே, அவ்வணை உள்ளிட்ட காவிரி தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காவிரி மேலாண்மை வாரியம் ஒன்றே அருமருந்தாகும். எனவே, இதுதான் நமது இலக்காக இருக்க வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைப்பது தமிழகத்திற்கு காட்டப்படும் சலுகை அல்ல. அது தமிழகத்தின் உரிமை. 40 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் மன்றத்திலும், 17 ஆண்டுகள் நடுவர் மன்றத்திலும் போராடித் தான் அந்த உரிமையை பெற்றிருக்கிறோம். காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பான 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 5&ஆம் தேதி நடுவர் மன்றம் தீர்ப்பளித்த போதிலும், அந்தத் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்வதற்கு அப்போதிருந்த அரசு தவறிவிட்டது.

6 ஆண்டுகள் போராட்டத்திற்குப் பிறகு 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தான் நடுவர் மன்றத் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. அதன்பின் 2 ஆண்டுகள் ஆகியும் அத்தீர்ப்பை செயல்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை வாரியமும், காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழுவும் அமைக்கப்படவில்லை. இந்த இரு அமைப்புகளும் அமைக்கப்பட்டு விட்டால் காவிரிப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு விடும். மேக்கேதாட்டு அணை தொடர்பான பிரச்சினையை காவிரி மேலாண்மை வாரியமே கவனித்துக் கொள்ளும்.

இந்த நேரத்தில் பிரதமர் தெரிவித்ததாக கூறப்படுவது போன்று தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் பேச்சு நடத்தப்பட்டால் அது காவிரிப் பிரச்சினையை தொடங்கிய இடத்திற்கே மீண்டும் அழைத்துச் சென்றுவிடும். அதுமட்டுமின்றி, இப்பிரச்சினையில் இத்தனை ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடத்தி தமிழகம் பெற்ற வெற்றிகள் வீணாகி விடும். அதுமட்டுமின்றி, அப்பகுதியில் அணை கட்ட கர்நாடகத்துக்கு எந்த உரிமையும் இல்லாத நிலையில் அது குறித்து பேச்சு நடத்துவது தமிழகத்தின் நிலையை வலுவிழக்கச் செய்யும். இது தமிழகத்திற்கு செய்யும் தீமையாகும்.

எனவே, மேகதாது அணை உட்பட காவிரி தொடர்பான எந்தப் பிரச்சினை குறித்தும் கர்நாடகத்துடன் பேச்சு நடத்துவது தேவையற்றதாகும். காவிரிப் பிரச்சினை குறித்து 40 ஆண்டுகளாக எத்தனையோ முறை பேச்சு நடத்தியும் எந்த பயனும் ஏற்பட்டதில்லை என்பதையும், உச்சநீதிமன்றம் மற்றும் நடுவர் மன்றத்தின் மூலமாகவே அனைத்து நிவாரணங்களும் பெறப்பட்டன என்பதையும் தமிழகம் கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்த அணை பிரச்சினை, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் ஆகிய இரு பிரச்சினைகளுக்கும் உச்சநீதிமன்றத்தில் முறையிடுதல், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தல் ஆகிய வழிகளில் தான் தீர்வு காண முடியும். அதுதான் சரியான, பயனுள்ள வழிமுறையாக இருக்கும்.

ஆனால், இவற்றையெல்லாம் தமிழக அரசு செய்யத் தவறியதன் விளைவாகவே இந்தப் பிரச்சினை மேலும் மேலும் சிக்கலாகிக் கொண்டிருக்கிறது. எனவே, ஏற்கனவே பலமுறை வலியுறுத்தியவாறு, மேக்கேதாட்டு அணை, காவிரி மேலாண்மை வாரியம் ஆகியவை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப் பட்ட வழக்குகளை விரைவுபடுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல் மத்திய அரசுக்கு அழுத்தம் தரும் வகையில் தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அதில் மேக்கேதாட்டு அணை, காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக எடுக்கப்படும் முடிவை அனைத்துக் கட்சித் தலைவர்கள் குழுவுடன் சென்று பிரதமரை சந்தித்து முதல்வர் பன்னீர்செல்வம் வழங்க வேண்டும்" என கூறியுள்ளார்.

English summary
PMK Leader Ramadoss speaks about Meketatu dam controversy and released a statement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X