பாரதிய ஜனதாவில் இணையும் "ஆர்.எஸ்.எஸ்." ராம் மாதவ், ஷிவ் பிரகாஷ்

பாரதிய ஜனதா கட்சியின் தாய் அமைப்பானது ஆர்.எஸ்.எஸ். இயக்கம். அந்த இயக்கத்தில் பயிற்சி எடுத்துக் கொண்டவர்கள் குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர் பாரதிய ஜனதாவில் இணைந்து அரசியல் பணிகளில் ஈடுபடுவர்.
இப்படித்தான் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தின் இல. கணேசன் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தால் 'வழி அனுப்பி' வைக்கப்பட்டவர்கள்.
லோக்சபா தேர்தலுக்கு முன்பே மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தால் இந்துத்துவா கொள்கைகளை முழுமையாக செயல்படுத்தும் வகையில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளை பாஜகவின் முக்கிய பொறுப்பில் நியமிக்கும் பணிகளை அந்த அமைப்பு மேற்கொண்டது.
தற்போது பாரதிய ஜனதாவின் புதிய தலைவராக அமித்ஷாவை முன்னிறுத்தும் வேலைகளையும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். செய்தித் தொடர்பாளராக பொறுப்பு வகித்துவரும் ராம் மாதவ், பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து செயல்பட 'உத்தரவிட'ப்பட்டுள்ளது.
அடுத்த வாரம் முறைப்படி மூத்த தலைவர்கள் முன்னிலையில் பாஜகவில் அவர் இணைய இருக்கிறார். இதேபோல் ஷிவ் பிரகாஷ் என்ற மற்றொரு ஆர்.எஸ்.எஸ். தலைவரும் பாஜகவில் இணைய இருக்கிறார்.