இலவு காத்த கிளிகளின் கனவுகளை தவிடுபொடியாக்கிய "வழக்குகள்"

Posted By: Paa
Subscribe to Oneindia Tamil

-பா. கிருஷ்ணன்

தேசிய அரசியலிலும் மாநில அரசியலிலும் ஒரே நாளில் நடைபெற்ற அதிரடி நிகழ்வுகள் இருவரது கனவுகளைத் தகர்த்துவிட்டன. பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தின் சதிப் பின்னணி தொடர்பான வழக்கு மீண்டும் வேதாளம் போல் முருங்கை மரத்தில் ஏறியிருப்பது பாஜகவின் மூத்த தலைவர்களுக்குப் பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது மட்டுமின்றி, மூத்த தலைவர்கள் அடுத்த குடியரசுத் தலைவராக வரவேண்டும் என்று கண்ட கனவையும் தகர்த்துவிட்டது.

மாநில அளவில் அண்ணா திமுக இரு அணிகளிலும் ஏற்பட்ட திடீர் நிகழ்வுகளால் அடுத்த முதல்வராகலாம் என்று எதிர்பார்த்திருந்த டிடிவி தினகரனின் கனவும் தகர்க்கப்பட்டுவிட்டது. பாஜகவின் மிக மூத்த தலைவர் லால் கிஷண் அத்வானி.

இவர் பாஜக 1980ம் ஆண்டு தொடங்கியதிலிருந்தே கட்சித் தலைவர் வாஜ்பாய்க்கு அடுத்த நிலையில் இருந்தார். எப்படி திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கியபோது அண்ணாவுக்கு அடுத்த நிலையில் நாவலர் நெடுஞ்செழியன் இருந்தாரோ அதைப் போலவே பாஜக தேசிய வரலாற்றில் கிட்டத்தட்ட அத்வானி இருந்து வருகிறார்.

Sc order to blow Advani

முதல் முறையாக தேசிய அளவில் காங்கிரஸ் அல்லாத ஜனதா கூட்டணி ஆட்சி பழைய காங்கிரஸ் தலைவரான மொரார்ஜி தேசாய் தலைமையில் உருவானபோது, அதில் இணைந்த பாரதீய ஜனசங்கத்தைச் சேர்ந்த வாஜ்பாய், அத்வானி ஆகியோருக்கு மத்திய அமைச்சரவையில் மிக முக்கிய பதவிகள் தரப்பட்டன. அன்று முதல் வாஜ்பாய்க்கு அடுத்த தலைவராக அவர் மதிக்கப்பட்டுவந்தார்.

மிக நீண்ட இடைவெளிக்குப் பின் 1996ல் வாஜ்பாய் ஆட்சி அமைத்து பெரும்பான்மை இல்லாமல் 13 நாளிலேயே கவிழ்ந்தபோதும், அத்வானி இரண்டாம் நிலையில் நீடித்தார்.

இதனிடையில், பாஜகவில் அதிக பிரபலம் பெற்றவராக அத்வானி விளங்கினார். அதற்கு முக்கிய காரணம், உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராம ஜென்ம பூமி கோயில் அமைப்பதற்காக நாடு முழுவதும் "ஏக்தா யாத்திரை" நடத்தினார். அத்துடன், அதன் தொடர் விளைவாக ராமர் கோயில் கட்டுவதாக அறிவித்து, பாபர் மசூதியை இடித்தபோது, அதன் சதிப் பின்னணியில் அவர் இருந்தார் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டப்பட்டது.

அந்த வழக்கு 1992ம் ஆண்டு தொடரப்பட்டாலும், இடையில் முன்னேற்றம் பெரிதும் இல்லை. காரணம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 1998 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் அமைந்தது. 1998ம் ஆண்டும் பிரதமராக வாஜ்பாய் பதவியேற்றார். பின்னர், அதிமுக ஆதரவை விலக்கிக் கொண்டதால் அவரது ஆட்சி கவிழ்ந்து 1999ல் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, தெலுங்கு தேசம் உள்ளிட்ட பல கட்சிகளின் ஆதரவுடன் வாஜ்பாய் பிரதமராகப் பொறுப்பேற்று, ஐந்தாண்டுகள் ஆட்சியை நடத்தினார். ஆனால், அதையடுத்து 2004ல் அவரால் ஆட்சி அமைக்க முடியவில்லை. அரசியலை விட்டு ஓய்வுபெற்றார்.

வாஜ்பாய்க்கு அடுத்த நிலையில் இருந்த மூத்த தலைவரான எல்.கே. அத்வானி பிரதமர் வேட்பாளராக 2009ம் ஆண்டு அறிவிக்கப்பட்டபோதும், அவரால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை.

இதனிடையில் பாஜகவின் மூத்த தலைவர்களான எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, விஎச்பி தலைவர்கள் மறைந்த அசோக் சிங்கால், விநய் கட்டியார் உள்ளிட்டோர் மீது பாபர் மசூதி இடிப்பு வழக்கு உயிருடன் இருந்தது. காங்கிரஸ் தலைமையில் இரு முறை நடைபெற்ற ஆட்சிகளிலும் இந்த வழக்கில் முன்னேற்றம் ஏதுமில்லை.

தற்போது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவினால், அந்த வழக்கை லக்னோ நீதிமன்றம் தினமும் விசாரித்து இரண்டு ஆண்டுகளில் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இது எல்.கே. அத்வானி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மீது தினமும் விசாரணை நடத்தப்படும் என்பது தெளிவாகிவிட்டது.

இதனிடையில், இந்த ஆண்டு ஜூலையில் நடைபெற இருக்கும் குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் அவரையோ முரளி மனோகர் ஜோஷியையோ முன்னிறுத்துவது இயலாது. வாஜ்பாய் ஓய்வுக்குப் பின் பிரதமராகலாம் என்ற அத்வானியின் கனவு நரேந்திர மோடியால் தகர்க்கப்பட்டது. அத்துடன், அவரது அமைச்சரவையில் கூட அவர்களுக்கு இடம் தரப்படவில்லை. கிட்டத்தட்ட ஒதுக்கப்பட்டே இருந்தனர். எனினும், குடியரசுத் தலைவர் பதவிக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற கனவையும் பாபர் மசூதி இடிப்பு வழக்கு தகர்த்துவிட்டது.

தமிழகத்தில் ஜெயலலிதாவின் மறைவை அடுத்து கட்சியின் பொதுச் செயலாளராக ஆக்கப்பட்டார் வி.கே. சசிகலா. முதல்வர் பதவியை ஓ. பன்னீர்செல்வம் ஏற்றார். அந்த சமயத்தில் ஜெயலலிதா தலைமையில் இருந்த கட்சி அப்படியே கொத்தாக சசிகலாவின் கைக்கு மாறப் போகிறது என்று எதிர்பார்க்கப்பட்டது. முதல்வராக இருந்தாலும் ஓ.பி.எஸ். சசிகலாவுக்கே விசுவாசமாக இருப்பார் என்ற நிலையும் இருந்தது.

இதனிடையில், சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்நோக்கி, தனது உறவினரான டிடிவி தினகரனை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொண்டதுடன் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராகவும் நியமித்தார். அப்போதும் கட்சியில் அவருக்கு எதிர்ப்பு எழவில்லை. சசிகலா முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டபோது, அதற்கும் பெரிதாக எதிர்ப்பு வரவில்லை.

ஆனால், திடீரென்று அமைச்சர்களின் அறிக்கைகள், சசிகலாவே முதல்வராக வேண்டும் என்ற குரல், வலுக்கட்டாயமாக ஓபிஎஸ் பதவியிலிருந்து இறங்கச் செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட தகவல் ஆகியவை கட்சியில் அதிருப்தி இருப்பதை வெளிப்படுத்தியது. கிளைமாக்ஸ் காட்சியைப் போல் ஜெயலலிதா சமாதியில் ஓ.பன்னீர்செல்வம் 45 நிமிடம் தியானம் இருந்து அளித்த பேட்டிதான் கட்சியின் பிளவையும் சசிகலா குடும்பம் மீதான அதிருப்தியையும் காட்டியது.

அதன் பின்னர் உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பினால், சசிகலா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார். எனினும், அவர் மீது விசுவாசம் கொண்டவர்கள் அந்த விசுவாசத்தை டிடிவி தினகரன் மீது காட்டினர். அதன் விளைவாகவே ஜெயலலிதா போட்டியிட்ட வென்ற ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் அவர் நிறுத்தப்பட்டார். அப்போது கட்சி இரண்டாகப் பிரிந்திருந்ததால், இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டு, தொப்பி சின்னம் அவரது அணிக்கு தரப்பட்டது. ஓபிஎஸ் அணிக்கு இரட்டை மின்விளக்கு சின்னம் கிடைத்து, அவைத் தலைவர் மதுசூதனன் களத்தில் இறக்கப்பட்டார்.

தினகரன் மீது ஏற்கெனவே இருந்த அன்னியச் செலாவணி வழக்கு மீண்டும் உயிர்பெற்றது. அது மட்டுமின்றி, இரட்டை இலைச் சின்னத்தை மத்திய தேர்தல் ஆணையத்திடமிருந்து பெறுவதற்காக சுகேஷ் என்பவருக்கு தினகரன் கையூட்டு கொடுத்தாக வந்த டெல்லி போலீசாரின் குற்றச்சாட்டு விவகாரத்தை விஸ்வரூபம் எடுக்கச் செய்தது.

இனி, தினகரன் தலைமை நமக்குப் பயன்தராது என்று இதுவரை அவர் பக்கம் இருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அமைச்சர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள், கட்சியின் மாவட்டச் செயலர்கள் எல்லோரும் அதிமுகவின் இரு அணிகளும் இணைவது பற்றி பேசத் தொடங்கினர்.

சசிகலா குடும்பம் கட்சி, ஆட்சி விவகாரத்திலிருந்து ஒதுக்கப்பட வேண்டும். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற இரு முக்கிய கோரிக்கைகளில் ஓ.பன்னீர்செல்வம் உறுதியாக இருந்தது, இணைப்பு சாத்தியமாகுமா என்ற கேள்வியை எழுப்பியது.

ஆனால், 24 மணி நேரத்தில் நாடகக் காட்சிகள் மாறுவதைப் போல், எல்லோரும் தன் பக்கமே இருப்பதாகக் கூறி புதன்கிழமை சட்டப் பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கொண்ட கூட்டத்தைக் கூட்டிய டிடிவி தினகரன் கடைசி நேரத்தில் ரத்து செய்தார். காரணம், அவர் மீது டெல்லி போலீசாரின் பிடி இறுகியதே. அன்னியச் செலாவணி மோசடி புகார் தொடர்பான விவகாரத்தினால், டிடிவி தினகரன் நாட்டைவிட்டே தப்பியோடக் கூடும் என்று நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு விடப்பட்ட எச்சரிக்கையும், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவும் நிலைமையைத் தலைகீழாக்கியது. அவரது ஆதரவாளர்கள் அனைவரும் ஓபிஎஸ் அணியுடன் இணைவதை ஆதரித்தனர். அது மட்டுமின்றி, தினகரனை வெளியேற்றவும் உறுதியாகக் குரல் கொடுத்தனர். வேறு வழியின்றி தினகரன், "கட்சியின் நலனுக்காக ஒதுங்கிக் கொள்ளவும் தயார்" என்று அறிவித்தது எல்லா திருப்பங்களுக்கும் முற்றுப் புள்ளி வைத்துவிட்டது.

ஆக, டெல்லியில் உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு எல்கே அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரின் குடியரசுத் தலைவர் பதவிக் கனவைத் தகர்த்துவிட்டது.

சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு, அன்னியச் செலாவணி வழக்கு, தேர்தல் சின்னத்துக்காகக் கையூட்டு புகார் விவகாரம் ஆகியவை சசிகலா, தினகரன் ஆகியோரின் முதலமைச்சர் கனவுகளைத் தகரத்துவிட்டது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Supreme Court’s decision to revive criminal conspiracy charges against LK Advani has serious implications for his political future.
Please Wait while comments are loading...