For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜல்லிக்கட்டும், காளை சண்டையும் ஒன்றல்ல-தடை கூடாது: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு, தமிழக அரசு வாதம்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: ஜல்லிக்கட்டு என்பது காளை சண்டையில் இருந்து வேறுபட்ட தமிழர் பாரம்பரிய விளையாட்டு என்பதால் தடை விதிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு, தமிழக அரசு வழக்கறிஞர்கள் ஒரே குரலில் வாதிட்டனர்.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்து அண்மையில் மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது. இதை எதிர்த்து இந்திய விலங்குகள் நல வாரியம், இந்திய விலங்குகள் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட 4 அமைப்புகளும், 9 தனி நபர்களுமாக மொத்தம் 13 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இம் மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கே.கே.வேணுகோபால், அரிமா சுந்தரம், ஆனந்த் குரோவர், சித்தார்த் லுத்ரா ஆகியோர் ஆஜராகி தங்களது வாதத்தை முன்வைத்தனர்.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அலட்சியம்

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அலட்சியம்

அவர்கள் முன்வைத்த வாதம்: 21-ம் நூற்றாண்டில் நம்முடைய பாரம்பரியம், கலாசாரத்தின் பெயரில் மிருகங்களை வதைக்கும் ஜல்லிக்கட்டு போன்ற விளையாட்டுக்களை அனுமதிக்கக் கூடாது. இதில் காளைகளை பங்கேற்க அனுமதிக்க கூடாது. இது மிருகவதை தடை சட்டத்துக்கு எதிரானது. ஜல்லிக்கட்டு நடத்துவதை அனுமதித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கை, உச்சநீதிமன்றத்தின் 2014-ம் ஆண்டு மே மாதம் 7-ந் தேதி வழங்கிய தீர்ப்பை முற்றிலும் அலட்சியம் செய்வதாக இருக்கிறது.

உச்சநீதிமன்ற தீர்ப்பை இது போன்ற அறிவிக்கையின் மூலம் மீறுவது சட்ட விரோதமானது. ஆகையால் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் வாதிட்டனர்.

காளை சண்டை அல்ல

காளை சண்டை அல்ல

மத்திய அரசு தரப்பில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி முன்வைத்த வாதம்:

மத்திய அரசின் அறிவிக்கைக்கு எதிராக மனுத் தாக்கல் செய்துள்ள அமைப்பினரின் அடிப்படை உரிமைகளும் மத்திய அரசின் உத்தரவில், மீறப்படவில்லை. ஜல்லிக்கட்டின்போது, காளைகள் எந்தவிதமான வதைகளுக்கும் உட்படுத்தக்கூடாது என்பதை உறுதி செய்வதற்கு அறிவிக்கையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு என்பது வேறு காளைமாடு சண்டை அல்ல. இதில் எந்த ஒரு சண்டையும் கிடையாது. சில வகையான காளை மாடுகள் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காகவே வளர்க்கப்படுகின்றன. அவை அடக்கப்படுகின்றன. அதற்காக அந்த விளையாட்டில் ஈடுபடும் யாரும் எந்த விதமான கருவிகளையோ, ஆயுதங்களையோ பயன்படுத்துவது இல்லை. இதில் எந்தவிதமான வன்முறையும் கொடுமையும் நிகழ்த்தப்படுவது இல்லை. ஜல்லிக்கட்டு ஸ்பெயினில் நடப்பது போன்று கிடையாது.

தமிழர் கலாசார அடையாளம்

தமிழர் கலாசார அடையாளம்

ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாசார அடையாளம். ஜல்லிக்கட்டை மாவட்ட ஆட்சியரைக் கொண்டோ, ஆணையர்களை நியமித்தோ மேற்பார்வையிட்டு, இந்த நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்குமாறு செய்யலாம். ஜல்லிக்கட்டு விளையாட்டில் ஏதேனும் தவறு இருந்தால், தடை செய்வதற்கு பதிலாக தவறுகளை திருத்திக்கொள்ள அனுமதிக்கலாம். ஆகையால் தடை விதிக்கக் கூடாது.

இவ்வாறு ரோத்தகி வாதிட்டார்.

பாரம்பரிய விளையாட்டு- தமிழக அரசு

பாரம்பரிய விளையாட்டு- தமிழக அரசு

தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் சேகர் நாப்டே, ராகேஷ் த்விவேதி, நாகேஸ்வர ராவ் ஆகியோர் ஆஜராகி முன்வைத்த வாதம்: ஜல்லிக்கட்டு போட்டிகளில் மிருகங்களுக்கு கொடுமைகள் நிகழ்த்தப்படுகின்றன என்பதன் அடிப்படையில் அதனை தடை செய்து தீர்ப்பு வழங்கப்பட்டது. மத்திய அரசின் அறிவிக்கையில் மிருகங்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு நேரக்கூடாது என்ற நோக்கில் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிபந்தனைகள் அனைத்தையும் முறையாக கடைப்பிடிக்க மாநில அரசு முயற்சிகளை தொடங்கி விட்டது.

நீதிமன்றத்தின் உத்தரவை மாநில அரசு எப்போதும் முறையாக கடைப்பிடித்துள்ளது. கடந்த ஆண்டு நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்த போது ஒரு சில இடங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயன்றவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த மாநில அரசு அனுமதிக்கவில்லை. ஆனால் மத்திய அரசு சில நிபந்தனைகளுடன் நடத்த அனுமதி வழங்கியதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியரின் கண்காணிப்பில் அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற தொடங்கி உள்ளன.

துன்புறுத்தலே அல்ல..

துன்புறுத்தலே அல்ல..

காளைகள் எந்த வகையிலும் துன்புறுத்தப்படுவதை தடுக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டு பாரம்பரிய விளையாட்டு. இது காளை சண்டை அல்ல. காளைகளுக்கு எந்த வகையிலும் துன்பம் நேராத வண்ணம் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். ஆகையால் மத்திய அரசின் அறிவிக்கை மீது தடை விதிக்கக் கூடாது.

இவ்வாறு மூவரும் வாதிட்டனர்.

இடைக்கால தடை

இடைக்கால தடை

இந்த வாதங்களைக் கேட்ட பின்னர் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் மத்திய, மாநில அரசுகள் 4 வார காலத்துக்குள் பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனால் தமிழகத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறுமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

English summary
The Supreme Court stayed the Centre's notification lifting ban on Jallikattu during the festival of Pongal Festival in TN.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X