தெலுங்கு மக்களை இழிவுபடுத்துவதா? நடிகை கஸ்தூரி மன்னிப்பு கேட்க பாஜக சுதாகர் ரெட்டி வலியுறுத்தல்
அமராவதி: தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து நடிகை கஸ்தூரி இழிவாக பேசியதற்கு பாஜக மூத்த தலைவர் சுதாகர் ரெட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பாஜகவின் மேலிடப் பொறுப்பாளரான சுதாகர் ரெட்டி இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு, தெலுங்கு பேசும் மக்களை இழிவுபடுத்தி பேசிய கருத்துகளை நடிகை கஸ்தூரி திரும்பப் பெற்று தெலுங்கு மொழி பேசும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
சென்னையில் பிராமணர்கள் நேற்று பாதுகாப்பு வழங்க கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகை கஸ்தூரி, தெரியாமத்தான் கேட்கிறேன்.. 300 வருஷம் முன்னாடி ஒரு ராஜாவுக்கு கூட சேர்த்துகிட்ட அந்தப்புர மகளிரோ சேவைகள் செய்ய வந்தவர்கள் எல்லாம் தெலுங்கு பேசுகிறவர்கள் எல்லாம் இன்னைக்கு வந்து தமிழர்கள் இனம் அப்படின்னு சொல்லும்போது எப்பவோ வந்த பிராமணர்களை நீங்கள் தமிழர்கள் இல்லை என்று சொல்ல நீங்கள் யார்? நீங்கள் யார் தமிழர்கள்? என கேள்வி எழுப்பி இருந்தார்.

கஸ்தூரி பேச்சால் சர்ச்சை: நடிகையின் கஸ்தூரியின் இந்த பேச்சு மிகப் பெரும் சர்சையானது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஊடகங்களில் நடிகை கஸ்தூரியின் பேச்சு அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
கஸ்தூரி தொடர் விளக்கம்: இதனையடுத்து தாம் தெலுங்கு மொழி பேசும் மக்களை அப்படி பேசவில்லை; திமுக ஆதரவாளர்கள்தான் திரித்து பரப்புகின்றனர்; அத்தனையும் பொய்யாக பரப்புகின்றனர். எனக்கு தெலுங்கு மொழி பேசும் மக்கள் மீது அன்பும் மதிப்பும் உண்டு என அடுத்தடுத்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து விளக்கம் அளித்து பதிவிட்டும் வருகிறார் நடிகை கஸ்தூரி.
சுதாகர் ரெட்டி கண்டனம்: இந்த பின்னணியில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா பாஜகவின் டெல்லி மேலிட இணை பொறுப்பாளரான சுதாகர் ரெட்டி சற்று முன்னர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் நடிகை கஸ்தூரியின் இழிவான விமர்சனங்களுக்கு கடு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் நடிகை கஸ்தூரி தமது கருத்தை திரும்பப் பெற வேண்டும்; தமது கருத்துகளுக்காக நடிகை கஸ்தூரி தெலுங்கு மொழி பேசும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்; அண்ணன் தம்பியாக பாசத்துடன் பழகிவரும் தமிழர்களுக்கும் தெலுங்கு மொழி பேசும் மக்களுக்கும் இடையேயான ஒற்றுமையை நடிகை கஸ்தூரியின் இத்தகைய பேச்சுகள் பாதிக்கும் என்றும் சுதாகர் ரெட்டி அந்த வீடியோவில் சுட்டிக்காட்டி உள்ளார்.












Click it and Unblock the Notifications