For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடகாவில் மீண்டும் தலைதூக்கும் ஹிஜாப் விவகாரம்: 6 மாணவிகள் இடைநீக்கம்

By BBC News தமிழ்
|
கர்நாடகாவில் தலைதூக்கும் ஹிஜாப் விவகாரம்
ANI
கர்நாடகாவில் தலைதூக்கும் ஹிஜாப் விவகாரம்

கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் மீண்டும் வெடித்துள்ளது. தக்ஷிண கன்னடா மாவட்டத்தில் உள்ள அரசு முதல்நிலை கல்லூரியில் பட்டப் படிப்பு பிரிவைச் சேர்ந்த 6 மாணவிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மற்றொரு கல்லூரியில், வகுப்பறைக்குள் நுழையும்போது ஹிஜாபை கழற்ற மறுத்த மாணவிகள் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

முதல்நிலை கல்லூரியில் படிக்கும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த 40 மாணவர்களில், 6 மாணவிகள் கல்லூரி முதல்வரின் எச்சரிக்கைகளை மீறி வகுப்பறையில் ஹிஜாப் அணிந்ததாகக் கூறப்படுகிறது.

கல்லூரி வளாகத்தில் ஹிஜாப் அனுமதிக்கப்பட்டாலும், வகுப்பறை, ஆய்வகம், நூலகம் ஆகியவற்றில் ஹிஜாப் அணிய அனுமதியில்லை.

"ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் அரசு பிறப்பித்த உத்தரவுகளை மீறுவதற்கு எதிராக மாணவிகள் இரண்டு, மூன்று முறை எச்சரிக்கப்பட்டனர். ஒரு வாரத்திற்கு இடைநீக்கம் செய்யப்படுவதற்கு முன்பு, அவர்கள் போதுமான அளவுக்கு எச்சரிக்கப்பட்டார்கள்," என்று புத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் கல்லூரி மேம்பாட்டுக் குழுவின் தலைவருமான சஞ்சீவ் மாதண்டூர் பிபிசி இந்தியிடம் கூறினார்.

ஹம்பனகட்டாவில் உள்ள மங்களூரு பல்கலைக்கழக கல்லூரியிலும் இதேபோன்ற பிரச்னை எழுந்தது. அங்கு மீண்டும் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்த 16 மாணவிகளை கல்லூரி முதல்வர் வீட்டிற்கு அனுப்பினார். இந்த மாணவிகள் மாவட்ட ஆட்சியரை முன்பு சந்தித்தனர். ஆனால், அரசாங்க விதிகளை மீற முடியாது என்று அவர்களிடம் கூறப்பட்டது.

பல்கலைக்கழக கல்லூரியில் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த 43 மாணவிகளில் 13 பேர் வகுப்புகளுக்குச் செல்லவில்லை. நேற்று காலை, மாவட்ட ஆட்சியர் தலைமையில், பல்கலைக்கழக துணை வேந்தர், கல்லூரி மற்றும் காவல்துறை அதிகாரிகளோடு நடந்த கூட்டத்தில், மாணவிகளுக்கு அறிவுரை வழங்குவது மற்றும் 'மெமோ' வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

"மாணவர்கள் தேர்வில் கலந்துகொள்வதற்கு வகுப்பில் குறைந்தபட்சம் 75 சதவீத வருகைப் பதிவு இருக்க வேண்டியது அவசியம் என்பதை எச்சரிக்க வேண்டியது எங்கள் கடமை. முதலில், அவர்களுக்கு ஆலோசனை வழங்க முடிவு செய்யப்பட்டது. பிறகும் விதிமுறைகளைக் கடைபிடிக்கத் தவறினால், அவர்களுக்கு மெமோ வழங்க முடிவு செய்யப்பட்டது. மாணவிகள் வராமல் போனால், கல்விச் சூழல் சீர்குலைந்துவிடும்," என்று மங்களூரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பி.எஸ்.யதபாதிதாயா பிபிசி இந்தியிடம் தெரிவித்தார்.

மார்ச் 15-ஆம் தேதியன்று, உயர்நீதிமன்ற உத்தரவை ஆய்வு செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், பட்டப் படிப்பு பயிலும் மாணவர்களுக்கும் அரசின் உத்தரவுகள் அமல்படுத்தப்படும் என்று பல்கலைக்கழக கூட்டமைப்பு கடந்த மாதம் முடிவெடுத்தது.

குற்றச்சாட்டில் தெளிவின்மை

தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, ஹிஜாப் இஸ்லாத்தின் ஓர் அங்கம் இல்லையென்று கூறியது. உடுப்பி மாவட்டத்தில் உள்ள பெண்களுக்கான அரசு பல்கலைக்கழக முதல்நிலை கல்லூரியின் 6 மாணவிகள் ஹிஜாப் அணிந்ததற்காக வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படாததால், மாநிலத்தின் பல பகுதிகளில் பல வாரங்களாக பதற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த நீதிமன்ற உத்தரவு வந்தது.

சில மாணவர்களுக்கும் கல்லூரி நிர்வாகக் குழுவுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் மற்றொரு பிரிவு மாணவர்கள் காவித் துண்டு மற்றும் தலைப்பாகை அணிந்து கல்லூரிகளுக்கு வந்தனர். மாநிலத்தின் சில பகுதிகளில், ஹிஜாபுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, வன்முறையை அடக்குவதற்கு காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளையும் லத்திகளையும் பயன்படுத்த வேண்டியிருந்தது.

உப்பினங்கடியில் மாணவர்களில் ஒரு பிரிவினர், மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எச்சரிக்கை மட்டுமே செய்வதாகக் கூறி, கல்லூரி முதல்வருக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினார்கள். அதைத் தொடர்ந்து அவர்களும் காவித் துண்டுகளை அணிந்து வரத் தொடங்கினர்.

கர்நாடகாவில் தலைதூக்கும் ஹிஜாப் விவகாரம்
Getty Images
கர்நாடகாவில் தலைதூக்கும் ஹிஜாப் விவகாரம்

ஆனால், முதலில் மாணவிகள் வகுப்பறையில் பாடம் கற்கும்போது ஹிஜாப் அணிந்து இருந்தார்களா அல்லது இடைவேளை நேரத்தின்போது அணிந்து இருந்தார்களா என்ற அடிப்படை குற்றச்சாட்டு தெளிவற்று உள்ளது.

கல்லூரி முதல்வர் ஷேகர் எம்.டி, பிபிசி இந்தியிடம், "மாணவிகள் இடைவேளை நேரத்தின்போது ஹிஜாப் அணிந்திருந்தார்கள்," என்று கூறினார்.

ஆனால், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பிரதிநிதி சாதிக் ஜரதர் பிபிசி இந்தியிடம் பேசும்போது, "அன்றைய வகுப்புகள் முடிந்த பிறகுதான் மாணவிகள் உடை மாற்றும் அறைக்குச் சென்றுவிட்டு, மீண்டும் வகுப்பறைக்கு தங்களுடைய பைகளை எடுக்கச் சென்றனர். அப்போதுதான் மற்ற மாணவர்கள் வந்து வகுப்பறையில் ஹிஜாப் அணிவதை எதிர்த்து அனைத்து பிரச்னைகளையும் உருவாக்கினார்கள்," என்று கூறினார்.

"ஏபிவிபி (பாஜகவுடன் தொடர்புடைய அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்) வளாகத்தில் மாணவர்கள் ஹிஜாப் அணிவதை அவர்கள் விரும்பாததால் இந்தப் பிரச்னையை எழுப்பியுள்ளனர். விரிவுரைகள் நடக்கும்போது வகுப்பறைக்குள் அணியக்கூடாது என்ற விதியை மாணவர்கள் பின்பற்றுகிறார்கள்," என்று கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் அதுவுல்லா புஞ்சல்கட்டே பிபிசி இந்தியிடம் தெரிவித்தார்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ஏபிவிபி கடுமையாக எதிர்த்துள்ளது. ஏபிவிபியின் முன்னாள் மாநிலச் செயலர் பிரதீக் மாலி, "ஆரம்பத்திலிருந்தே ஏபிவிபி இந்தப் பிரச்னையில் ஈடுபடவில்லை," என்கிறார்.

ஏபிவிபியின் மாநிலச் செயலாளர் மணிகண்ட கலசா பிபிசி இந்தியிடம், "வகுப்பறைகளில் ஹிஜாப் அணியக் கோருவதுதான், இங்குள்ள கல்லூரிகளில் நடக்கிறது. அதற்கு அனுமதியில்லை என்பதால், விரிவுரையாளர் விரிவுரையை முடித்துவிட்டுக் கிளம்பும் நிமிடத்தில் அவர்கள் ஹிஜாப் அணிந்து கொள்கிறார்கள். அடுத்த விரிவுரையாளர் வகுப்பறைக்குள் நுழைந்ததும் மீண்டும் அதை அகற்றிவிடுகிறார்கள்.

சில மாணவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிய அனுமதியில்லை என்ற பல்கலைக்கழக கூட்டமைப்பின் முடிவு தெளிவாக உள்ளது," என்றார்.

ஊடகங்கள் தாக்கப்பட்தாகக் குற்றச்சாட்டு

ஹிஜாப் விவகாரம் தொடங்கிய பிறகு, கடலோர மாவட்டங்களில் முதன்முறையாக, மாணவர்களின் ஒரு பிரிவினரால் ஊடகங்கள் தாக்கப்பட்டன. இரண்டு கன்னட தொலைக்காட்சி சேனல்களின் செய்தியாளர்கள் இருவர் தாக்கபட்டு, கல்லூரி அலுவலகத்திற்குள் தள்ளப்பட்டதாகவும் அவர்களுடைய கைபேசிகளில் இருந்த காணொளிகள் அழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

"நான் முதல்வரைச் சந்தித்து, அவருடைய விளக்கத்தைப் பதிவு செய்துவிட்டு, அவரது அறையிலிருந்து வெளியே வந்து, வளாகத்தில் மாணவர்களின் பொதுவான காட்சிகளை ஒளிப்பதிவு செய்துகொண்டிருந்தேன். திடீரென்று ஒரு கும்பல் சூழ்ந்துகொண்டு எங்களைத் தள்ளத் தொடங்கியது. முதல்வரிடம் அனுமதி பெற்றிருப்பதாக அவர்களிடம் கூறினேன். அதற்கு அவர்கள், 'இதை எப்படி செய்தியாக்குகிறீர்கள் என்று பார்க்கிறோம்,' என்றார்கள்," என்று தான் தாக்கப்பட்டது குறித்து பிபிசி இந்தியிடம் கூறுகிறார், தேசிய ஊடகத்தின் பிராந்திய சேனலைச் சேர்ந்த அஜித் குமார்.

"கல்லூரி அலுவலக அறைக்குள் என்னைத் தள்ளிவிட்டு, என் கைபேசியிலிருந்த அனைத்து காணொளிகளையும் வலுக்கட்டாயமாக அழித்துவிட்டனர். என்னுடன் இருந்த சக ஊழியரிடமும் அவர்கள் அதையே செய்தார்கள்," என்றார் அஜித். அவருடைய புகார், காவல்துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
Six students suspended and 12 sent back for wearing hijab in Karnataka
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X