For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக மின் வாரியம் ரூ. 35,000 கோடியை சேமிப்பது சாத்தியமா?

By BBC News தமிழ்
|
மின்சாரம்
Getty Images
மின்சாரம்

புதிய அனல் மின் நிலைய திட்டங்களை துவங்காமல் இருப்பதன் மூலமும் புதுப்பிக்க வேண்டிய நிலையில் உள்ள அனல் மின் நிலையங்களை மூடுவதன் மூலமும், தமிழ்நாடு மின் வாரியம் 35 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சேமிக்க முடியும் என்கிறது ஆய்வறிக்கை ஒன்று. இது சாத்தியமா?

கிளைமேட் ரிஸ்க் ஹொரைசான்ஸ் என்ற அமைப்பு வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கையின்படி, பழைய மின் நிலையங்களை மூடுவதன் மூலமும் கட்டுமானத்தில் உள்ள புதிய மின் நிலையத் திட்டங்களை நிறுத்துவதன் மூலமும் முதல் வருடத்தில் 34,100 கோடி ரூபாயும் ஐந்து ஆண்டுகளில் மொத்தமாக 57,766 கோடி ரூபாயையும் சேமிக்க முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தமிழக மின் வாரியத்தாலும் மத்திய அரசாலும் இயக்கப்பட்டு வரும் பல அனல் மின் நிலையங்கள் மிகவும் பழையவை என்றும், 2015ஆம் ஆண்டின் மாசு கட்டுப்பாட்டு விதிகளைப் பின்பற்றி இவற்றைப் புதுப்பிக்க வேண்டியிருக்கும் நிலையில், இதற்கென மின்வாரியங்கள் பெரும் தொகையைச் செலவழிக்க வேண்டுமென்றும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கிவரும் மின்வாரியம், இந்த புதுப்பிக்கும் செலவால் மேலும் இழப்பைச் சந்திக்கும். ஆகவே இதற்கான மாற்று வழிகளை பரிசீலிக்க வேண்டுமென்கிறது அறிக்கை.

தமிழ்நாடு தற்போது மின் மிகை மாநிலமாக இருந்துவருகிறது. ஆகவே, பழைய அனல் மின் நிலையங்களை புதுப்பிக்கச் செலவழிப்பதற்குப் பதிலாக அவற்றை மூடுவது மாசுபாட்டைக் குறைப்பதோடு, செலவையும் குறைக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

Click here to see the BBC interactive

தமிழ்நாட்டில் தற்போது 13,756 மெகா வாட் உற்பத்தித் திறனுள்ள அனல் மின் நிலையங்கள் இயங்கி வருகின்றன. ஆனால், மின்சார தேவை குறைந்திருப்பதாலும் வெளிச்சந்தையிலிருந்து மின்சாரத்தை வாங்க வேண்டிய ஒப்பந்தங்கள் இருப்பதாலும் இந்த மின் நிலையங்கள் முழுத் திறனுடன் இயக்கப்படுவதில்லை. 2018ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 58.69 சதவீதம் அளவுக்கே இயக்கப்பட்ட இந்த மின் நிலையங்கள், 2020ஆம் ஆண்டில் 56 சதவீத திறனுடன் மட்டுமே இயக்கப்பட்டன.

இந்த நிலையில், தமிழ்நாடு மின்வாரியம் 7,385 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட புதிய அனல் மின்நிலையங்களைக் கட்டி வருகிறது. இவற்றில் 3,145 மெகா வாட் உற்பத்தித் திறன் கொண்ட மின் நிலையங்கள் அடுத்த 12 மாதங்களில் உற்பத்தியைத் துவங்கக்கூடிய நிலையில் உள்ளன. கட்டுமானத் திட்டத்தின் துவக்க கட்டத்தில் உள்ள எண்ணூர் விரிவாக்கத் திட்டம், உப்பூர் 1 -1, உடன்குடி 1- 2 ஆகிய மின் நிலையங்களின் கட்டுமானப் பணிகளை நிறுத்தி விட்டால், 26,514 கோடி ரூபாய் அளவுக்கு பணத்தை மிச்சப்படுத்த முடியும் என்கிறது அறிக்கை.

ஏற்கெனவே செயல்பட்டு வரும் அனல் மின் நிலையங்களில் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் 1-5 யூனிட்டுகள், மேட்டூர் அனல் மின் நிலையத்தின் 1-4 யூனிட்கள், வடசென்னை அனல் மின் நிலையத்தின் 1-3 யூனிட்கள், நெய்வேலி மின் நிலையம் முதலாவது பிரிவின் 1-3 யூனிட்கள் ஆகியவற்றை சூழல் சட்டங்களின்படி புதுப்பிக்க வேண்டியிருக்கும். இதற்கு ரூ. 1,669.5கோடி தேவைப்படும். இவற்றின் மொத்த உற்பத்தித் திறன் 3,150 மெகா வாட். இதில் வடசென்னை அனல் மின்நிலையத்தைத் தவிர, பிற மின் நிலையங்களில் ஒரு யூனிட்டிற்கான மின் செலவு 4 ரூபாய்க்கு மேல் உள்ளது.

ஆனால், இந்த மின் நிலையங்களைப் புதுப்பிக்காமல் நிறுத்தி விட்டால்கூட, அடுத்த 12 மாதங்களில் இயங்கவுள்ள புதிய மின் நிலையங்களால் மாநிலத்தின் மின் உற்பத்தித் திறன் குறையாமல் இருக்கும் என்கிறது இந்த ஆய்வறிக்கை.

பழைய மின் நிலையங்களைச் செயலிழக்கச் செய்துவிட்ட பிறகும், மின் தேவை அதிகரிக்கும் தருணங்களில் மாநிலத்தால் மின்தேவையை ஈடுகட்ட முடியும் என்கிறது அறிக்கை. சமீப காலத்தை எடுத்துக்கொண்டால், 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி உச்சபட்சமாக மின்சாரம் தமிழ்நாட்டில் பயன்படுத்தப்பட்டது. அன்றைய தின மின் தேவை 16,151 மெகா வாட் ஆக இருந்தது. எந்தவித மின் தடை ஏதுமின்றி இந்தத் தேவை எட்டப்பட்டதோடு, 2,600 மெகா வாட் அளவுக்கு கூடுதல் உற்பத்தித் திறனும் இருந்தது.

தமிழ்நாட்டின் மின் தேவை என்பது ஆண்டுக்கு 2.87 சதவீதம் வளர்ந்து வருவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆகவே, 2025ஆம் ஆண்டுவாக்கில் தமிழகத்தின் மின் தேவை என்பது 18,908 மெகாவாட்டாக இருக்கும். இப்படி அதிகரிக்கும் மின் தேவையை மரபுசாரா எரிசக்தி ஆதாரங்களில் இருந்தும் வெளிச் சந்தையில் கிடைக்கும் மின்சாரத்தை வாங்குவதன் மூலமும் சமாளிக்க முடியும். இப்படிப் பெறப்படும் மின்சாரத்தின் விலையானது, அனல் மின் நிலையங்களில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தின் விலையைவிடக் குறைவானதாகவே இருக்கும் என்கிறது ஆய்வறிக்கை.

ஆனால், மின்வாரிய முன்னாள் அதிகாரிகள் இந்த தீர்வுகள் சாத்தியமானவையா என்பது குறித்து சந்தேகம் எழுப்புகிறார்கள். "தற்போது சில அனல் மின் நிலையங்களில் தயாரிப்புச் செல்வு அதிகம் என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால், வெளிச்சந்தையில் மின்சாரத்தை வாங்குவது என்பது நிரந்தரத் தீர்வாக இருக்க முடியாது. மின் தேவை அதிகரித்தால் திடீரென விலை அதிகரிக்கும். இப்போது மூன்று ரூபாய்க்குக் கொடுப்பவர்கள் எல்லா நேரத்திலும் அதைக் கொடுக்க மாட்டார்கள்" என்கிறார் மின்வாரியத்தின் முன்னாள் மூத்த அதிகாரி ஒருவர்.

ஆனால், மின்சாரத்தை வெளியிலிருந்து வாங்க வேண்டிய தேவை உடனடியாக ஏற்படாது என்கிறது ஆய்வறிக்கை. குறைந்த திறனுடன் செயல்படும் மின் நிலையங்களை முழுமையாகச் செயல்படுத்தினாலே, வெளியில் மின்சாரத்தை வாங்க வேண்டிய தேவை இருக்காது என்கிறது அந்த அறிக்கை.

"மின் பற்றாக்குறை இருந்த காலகட்டத்தில் போடப்பட்ட நீண்ட கால ஒப்பந்தங்களால் நாம் வெளியில் மின்சாரத்தை வாங்கிக்கொண்டிருக்கிறோம். மின்சாரத் தேவை குறையும்போது இதனால், நம் அனல் மின் நிலையங்கள் முழு சக்தியோடு இயங்குவதில்லை என்பதும் உண்மைதான். ஆனால், எக்ஸேஞ் மூலமாக மின்சாரம் எல்லா நேரத்திலும் குறைந்த கட்டணத்திற்குக் கிடைக்காது, அதனை நம்பியிருக்க முடியாது" என்கிறார் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஓய்வுபெற்ற உறுப்பினரான எஸ். நாகல்சாமி.

மரபுசாரா எரிசக்தியைப் பயன்படுத்துவதைப் பொறுத்தவரை, சேமிப்புக் கலன் தொழில்நுட்பத்தில் பெரிய முன்னேற்றம் ஏற்படும்வரை அவற்றை முழுமையாக நம்பியிருக்க முடியாது என்கிறஆர் அவர். பழைய அனல் மின் நிலையங்களை மூடவேண்டும் என்ற வாதத்தையும் அவர் ஏற்கவில்லை.

"புதிய அனல் மின்நிலையங்களில் முதலீட்டுச் செலவை மின் உற்பத்திச் செலவில் சேர்க்க வேண்டியிருக்கும். ஆனால், பழைய அனல் மின்நிலையங்களில் அந்தச் செலவு இல்லையென்பதால் குறைந்த விலைக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்" என்கிறார் நாகல்சாமி.

அனல் மின் நிலையங்களால் ஏற்படும் மாசுபாட்டைக் குறைக்க எல்லா அனல் மின் நிலையங்களிலும் Flue Gas Desulphurisers என்ற கட்டமைப்பைப் பொறுத்த உத்தரவிடப்பட்டிருக்கிறது. 2022ஆம் ஆண்டிற்குள் இவற்றைப் பொறுத்தவேண்டும். தற்போது கட்டப்படும் புதிய அனல் மின் நிலையங்கள் இந்தக் கட்டமைப்போடுதான் உருவாக்கப்படும். ஆனால், பழைய அனல் மின் நிலையங்களில் இவற்றைப் புதிதாகத்தான் பொறுத்த வேண்டியிருக்கும். அந்தச் செலவை எதிர்கொள்வதற்குப் பதிலாக அம்மாதிரி அனல் மின் நிலையங்களை மூடிவிடலாம் என்கிறது அறிக்கை.

"தற்போது இந்தியாவில் சுமார் 445 அனல் மின் நிலையங்கள் உள்ளன. இவற்றில் 21 சதவீத அனல் மின் நிலையங்களில் மட்டுமே Flue Gas Desulphurisers உள்ளது. 2022க்குள் இந்தியா முழுவதுமுள்ள அனல் மின் நிலையங்களில் அவற்றைப் பொருத்த முடியுமா என்பது சந்தேகம்தான். Flue Gas Desulphurisersஐப் பொருத்தினால் செலவு ஏற்படும் என்றாலும் அதன் உபபொருளாக உற்பத்தியாகும் அமோனியம் சல்பேட்டை விற்பதன் மூலம், உற்பத்திக்கு ஆகும் செலவில் பாதியை எட்ட முடியும்" என்கிறார் தமிழ்நாடு மின் பொறியாளர்கள் சங்கத் தலைவர் எஸ். காந்தி.

மின்சாரம்
Getty Images
மின்சாரம்

தவிர, தற்போது உள்நாட்டில் வளர்ச்சி குறைவாக இருப்பதால் மின்தேவை குறைவாக இருப்பதைச் சுட்டிக்காட்டும் காந்தி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீத வளர்ச்சி ஏற்பட்டால், மின்சாரத் தேவை இரண்டு சதவீதம் அதிகரிக்கும் எனச் சுட்டிக்காட்டுகிறார். ஜி.டி.பி. வளர்ச்சி 7 சதவீதமாக இருந்தால், மின்தேவை வளர்ச்சி 14 சதவீதமாக இருக்கும்; அம்மாதிரி சூழலில் வெளிச்சந்தையிலும் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கும் என்கிறார் அவர்.

தமிழக மின்வாரியம் தனியாரிடமிருந்து மின்சாரத்தை வாங்கும்போது ஒரு யூனிட் மின்சாரத்தை 4 ரூபாய்க்கு மேல் வாங்கக்கூடாது என்றும், படிப்படியாக அம்மாதிரி ஒப்பந்தங்களில் இருந்து மின்வாரியம் வெளியேவர வேண்டும் என்றும் இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

மேலும் சூரிய மின் சக்தி, காற்றாலை மின் உற்பத்தி போன்றவற்றில் ஏற்பட்டிருக்கும் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் காரணமாக, இவற்றிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தின் விலை தொடர்ந்து குறைந்துவருகிறது. ஆகவே, மாநிலத்தில் உற்பத்தியாகும் மரபுசாரா மின்சாரத்தை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்கிறது அறிக்கை.

"மனிதத் தலையீடு இல்லாமல் மின் உற்பத்தி நடந்தால், அவை திடீரென நிற்கும் சாத்தியங்கள் மிக அதிகம். அந்தத் தருணத்தில் பெரும் சிக்கலைச் சந்திக்க வேண்டியிருக்கும். ஆகவே குறிப்பிட்ட அளவில் அனல் மின் நிலையங்கள் செயல்பட்டே ஆக வேண்டும்" என்கிறார் காந்தி.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மொத்தக் கடன் தற்போது சுமார் 1,13,438 கோடி ரூபாயாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இதன் இழப்பும் அதிகரித்தே வருகிறது. இந்தக் கடன்களில் இருந்து விடுபடும் நோக்கில், மத்திய அரசின் உதய் திட்டத்தில் 2017ஆம் ஆண்டில் தமிழ் இணைந்தது. இருந்தபோதும், தமிழக மின்வாரியத்தின் கடன் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

BBC Indian sports woman of the year
BBC
BBC Indian sports woman of the year

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
Tamilnadu Electricity Board can save Rs 35000 crore? Is it possbile for it?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X