மே.வங்க இடைத்தேர்தல்: மீண்டும் 'அதே' யுக்தியை கையிலெடுத்த திரிணாமுல்.. மம்தா தலை தப்புமா?
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் பபானிபூர் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், "பபானிபூருக்கு அதன் சொந்த மகள் தான் தேவை" என்ற போஸ்டர்கள் தொகுதி முழுத்த ஒட்டப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, கேரள ஆகிய மாநிலங்களுடன் மேற்கு வங்கத்திற்கும் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடத்தப்பட்டது. மேற்கு வங்கத்திற்கு அதிகபட்சமாக எட்டு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்பட்டது.
கொரோனா காலத்தில் எட்டு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்பட்டது பெரும் சர்ச்சையானது. ஆனாலும், இதில் திரிணாமுல் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது.

மேற்கு வங்கம்
மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியை அமைத்தே தீர வேண்டும் என்ற முனைப்பில் பாஜக தலைவர்கள் இறங்கி வேலை செய்தனர். பிரதமர் மோடி மேற்கு வங்கத்தில் பல கட்டங்களாகச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அதேபோல அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட அனைத்து முக்கிய அமைச்சர்களும் மேற்கு வங்கத்தில் முகாமிட்டு இருந்தனர். இருந்தாலும் கூட பாஜகவால் அங்கு ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. அங்கு 3ஆவது முறையாக திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க, அக்கட்சியின் தலைவர் மம்தா மீண்டும் மேற்கு வங்க முதல்வராகப் பதவியேற்றார்.

மம்தா பானர்ஜி
அதேநேரம் திரிணாமுல் தொண்டர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா தோல்வியடைந்தாக அறிவிக்கப்பட்டார். வாக்கு எண்ணிக்கையில் அவருக்கும் சுவேந்து அதிகாரிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. நள்ளிரவு வரை சென்ற வாக்கு எண்ணிக்கையில் சுமார் 1900 வாக்குகள் வித்தியாசத்தில் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இருப்பினும், இந்த வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டி மம்தா வழக்கு தொடர்ந்துள்ளது தனிக் கதை.

மீண்டும் பபானிபூர்
இதனால், எம்எல்ஏ-ஆக இல்லாமலேயே மம்தா மேற்கு வங்க முதல்வராகப் பொறுப்பேற்றார். சட்டப்படி எம்எல்ஏ-ஆக இல்லாத ஒருவர் முதல்வராக பதவியேற்றால், அடுத்த 6 மாதங்களுக்குள் ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட வேண்டும். மம்தா போட்டியிட ஏதுவாக பபானிபூர் தொகுதியில் வென்ற திரிணாமுல் அமைச்சர் ஷோவன்தேவ் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். கடந்த 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் மம்தா, பபானிபூர் தொகுதியில் தான் போட்டியிட்டு வென்றிருந்தார். இதனால் பபானிபூர் தொகுதியில் எளிதாக அவர் வெல்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இடைத்தேர்தல் அறிவிப்பு
மேற்கு வங்கத்தின் பபானிபூர், சம்சர்கஞ்ச், ஜங்கிபூர் மற்றும் ஒடிசாவின் பிப்லி ஆகிய நான்கு தொகுதிகளுக்கு வரும் செப்டம்பர் 30ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக இதர மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்குப் பின்னர் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய செப்டம்பர் 13ஆம் தேதி கடைசி நாளாகும்.

பிரசாரம்
இது மம்தாவுக்கு மிகவும் முக்கியமான தேர்தல் என்பதால், இப்போதே தேர்தல் பிரசார நடவடிக்கைகளை திரிணாமுல் தொடங்கிவிட்டது. பபானிபூர் தொகுதி முழுக்க '"பபானிபூருக்கு அதன் சொந்த மகள் தான் தேவை" என்ற போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. முன்னதாக சட்டசபைத் தேர்தலின் போதும், 'வங்கத்திற்கு அதன் சொந்த மகள் தான் தேவை' என்ற பிரசாரத்தை திரிணாமுல் முன்னெடுத்திருந்தது. பாஜகவுக்கு எதிராக இந்தப் பிரசார யுக்தி பல இடங்களில் வேலை செய்த நிலையில், இப்போது மீண்டும் அதே யுக்தியை திரிணாமுல் கையில் எடுத்துள்ளது.

ராஜினாமா
ராஜினாமா செய்த பபானிபூர் எம்எல்ஏ ஷோபொண்டேவ் சட்டர்ஜி கூறுகையில், "பபானிபூரையும் மம்தாவையும் பிரிக்க முடியாது. அழர் இங்கு தான் பிறந்து வளர்ந்தார். இங்குள்ள ஒவ்வொருவரும் மம்தாவை தங்கள் சொந்த மகளாகவே கருதுகின்றனர்" என்றார். அதேநேரம் தேர்தல் இவ்வளவு சீக்கிரம் அறிவிக்கப்பட்டது பாஜகவுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை என்றே கூறப்படுகிறது. இது பற்றி பாஜகவின் செய்தித் தொடர்பாளர் ஜெய்பிரகாஷ் மஜும்தர் கூறுகையில், "இப்போது வங்காளத்தில் நிலவும் சூழல் திரிணாமுலுக்கு சாதகமாக உள்ளது. ஆனால் இதே மம்தாவை தான் நாங்கள் நந்திகிராமில் தோற்கடித்தோம் என்பதை மறக்கக் கூடாது. வரும் தேர்தலிலும் அதையே செய்ய முயல்வோம்" என்றார்.












Click it and Unblock the Notifications