For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உத்தர பிரதேச தேர்தல் 2022: நரேந்திர மோதியின் வாரணாசி தொகுதியில் மீண்டும் பாஜக வெற்றி பெறுமா?

By BBC News தமிழ்
|
மோடி
Getty Images
மோடி

புனிதப் பயணம் மேற்கொள்வோருக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் மாத்திரமல்லாமல், அரசியல் ரீதியாக பாரதிய ஜனதா கட்சிக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகிவிட்டது வாரணாசி. இந்திய பிரதமர் நரேந்திர மோதி இரண்டுமுறை போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி என்பது இதற்கு முதன்மையான காரணம்.

பிரதமரின் தொகுதி என்றாலும் குறுகலான சாலைகள், வாகன நெரிசல், மிகவும் சேதமடைந்த பழைய பேருந்துகள், சுகாதாரமற்ற திறந்தவெளி சாக்கடைகள், சாலையோரங்களில் மக்கள் வசிப்பதையும் காண முடிகிறது.

வாரணாசி மாத்திரமல்லாமல் உத்தரப் பிரதேசம் முழுவதுமே இளைஞர்கள் வேலைவாய்ப்புக் கிடைக்காமல் திண்டாடி வருவதாக சமாஜ்வாதி கட்சியின் செய்தித் தொடர்பாளர் வந்தனா சிங் பிபிசி தமிழிடம் கூறினார்.

ஆனால் இவையெல்லாம் 2014-க்கு முந்தைய நிலையைக் காட்டிலும் மேம்பட்டிருப்பதாகக் கூறுகிறார் வாரணாசி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட ரொஹானியா சட்டப் பேரவைத் தொகுதியின் பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ. சுரேந்திர நாராயண் சிங். புதிய மேம்பாலங்கள் கட்டப்படுவதாகவும், வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாகவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

பிரதமரின் தொகுதி என்றாலும் சுற்றுச்சூழல் சீர்கேடும் வேலைவாய்ப்பின்மையும் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருவதாக 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோதியை எதிர்த்து சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்ட ஷாலினி யாதவ் பிபிசி தமிழிடம் கூறினார்.

"அரசு மீதும் வாரணாசி சட்டப் பேரவை உறுப்பினர்கள் மீதும் மக்கள் கடுமையான கோபத்தில் இருக்கின்றனர்" என்றார் ஷாலினி யாதவ்.

நடைபாதியில் வசிப்பவர்கள்
BBC
நடைபாதியில் வசிப்பவர்கள்

முழுமையாக பாஜக வசமிருக்கும் வாரணாசி

வாரணாசி நாடாளுமன்றத் தொகுதியில் 5 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2017-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது இவற்றில் 4 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியும், ஒரு தொகுதியில் அதன் கூட்டணிக் கட்சியான அப்னா தளமும் வெற்றி பெற்றன. இவர்களில் இரண்டு பேர் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையிலும் இடம்பிடித்தனர்.

சேதமடைந்த பேருந்துகள்
BBC
சேதமடைந்த பேருந்துகள்

7 கட்டங்களாக நடைபெற இருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில் கடைசிக் கட்டமாக மார்ச் 7 ஆம் தேதி தேர்தலைச் சந்திக்க இருக்கிறது வாரணாசி. பாஜக, சமாஜவாதி உள்ளிட்ட கட்சிகள் இன்னும் முழுமையாக வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை. அதனால் பரப்புரையும் களைகட்டவில்லை.

கடந்த முறை 5 தொகுதிகளையும் கைப்பற்றியது போல இந்த முறையும் வெற்றிபெறுவோம் என உறுதியாக நம்புவதாகக் கூறுகிறார் சுரேந்திர நாராயண சிங்.

"வாரணாசியைப் பொறுத்தவரை தரமான சாலைகள் போடப்பட்டுள்ளன. குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட மக்களுக்கு தேவையான அனைத்தும் தடையில்லாமல் வழங்கப்பட்டு வருகின்றன. எனது தொகுதியில் மட்டும் 91 சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மருத்துவமனைகள் கட்டப்பட்டிருக்கின்றன. ஏறத்தாழ 4 கோடி ரூபாய் செலவில் அவசரகால ஊர்திகள் வாங்கப்பட்டிருக்கின்றன" என்றார் அவர்.

வாரணாசி
BBC
வாரணாசி

கங்கை ஆறு இன்னும் அசுத்தமடைந்து வருகிறதே என்று கேட்டபோது, அது தற்காலிகமானதுதான் என்று கூறிய சுரேந்திர நாராயண சிங், "கங்கை ஆற்றைச் சுத்தப்படுத்தும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. ஆற்றங்கரையில் சேதமடைந்த நிலையில் இருக்கும் கோயில்கள் சீரமைக்கப்படுகின்றன. முன்பு ஆயிரக்கணக்கானோர் வந்த இடத்தில் இப்போது லட்சக்கணக்கான மக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்" என்றார்.

கங்கை நதி
BBC
கங்கை நதி

வாரணாசியைப் பொறுத்தவரை பிரதமரின் கவனம் எந்த அளவுக்கு இருக்கிறது என்ற கேள்வியுடன் மூத்த பத்திரிகையாளர் பினய் சிங்கிடம் பேசினோம்.

"உள்ளூரில் பெரிய அளவில் பரப்புரைகள் இல்லாவிட்டாலும் பிரதமர் மோதி ஏற்கெனவே காணொளி மூலம் தனது பரப்புரையைத் தொடங்கிவிட்டார். தனது தொகுதி என்பதால் வளர்ச்சித் திட்டங்களில் அவர் கவனம் செலுத்தி வருகிறார்" என்று தெரிவித்தார்.

வாரணாசியில் இந்தியா - ஜப்பான் ஒத்துழைப்புடன் கூடிய ருத்ராக்ஷ் என்ற ஒரு மாநாட்டு மையத்தை பிரதமர் நரேந்திர மோதி கடந்த ஆண்டு திறந்து வைத்தார். சுமார் 186 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த மையம் பன்னாட்டு மாநாடுகள், கண்காட்சிகள் போன்றவை நடத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. 108 ருத்ராட்சங்களுடன் சிவலிங்கத்தின் வடிவில் இது அமைக்கப்பட்டிருக்கிறது.

ருத்ராக்ஷ் என்ற ஒரு மாநாட்டு மையம்
BBC
ருத்ராக்ஷ் என்ற ஒரு மாநாட்டு மையம்

இந்த மையமும் அத்துடன் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களும் பிரதமர் மோதி தனது தொகுதியில் கூடுதல் கவனம் செலுத்துவதையே காட்டுவதாக பினய் சிங் கூறினார்.

"பாஜக அரசு மக்களைப் பிரிக்கிறது"

ஆனால் வளர்ச்சித் திட்டங்களைவிட மக்களை மத ரீதியாகப் பிரிப்பதிலேயே பாரதிய ஜனதா கட்சி அதிக ஆர்வம் காட்டுவதாகவும் ஆட்சி செய்யாமல் முழு நேரமும் அரசியல் செய்து வருவதாகவும் சமாஜ்வாதி கட்சியின் செய்தித் தொடர்பாளர் வந்தனா சிங் குற்றம்சாட்டினார்.

"கட்டங்களைக் கட்டுவதாலும், நகரை வண்ண விளக்குகளால் அழகுபடுத்துவதிலும் மட்டுமே நகரம் வளர்ச்சியடைந்துவிடாது. மேம்பாலங்களைக் கட்டியும்கூட போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முடியவில்லை. மக்களுக்குரிய திட்டங்களை உருவாக்கி அவற்றைச் செயல்படுத்த வேண்டும். அது பாரதிய ஜனதா ஆட்சியில் நடக்கவில்லை. அதனால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்" என்று ஷாலினி கூறினார்.

இந்தக் குற்றச்சாட்டுகளை பாஜக எம்எல்ஏ சுரேந்திர நாராயண சிங் மறுத்தார். வளர்ச்சித் திட்டங்களில் பாரதிய ஜனதா அரசு கவனம் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.

" ஊரக மக்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த 50 ஆண்டுகளாக இல்லாத சாலைகள் இப்போது அமைக்கப்பட்டு வருகின்றன. பல மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. வாரணாசி மக்கள்தொகை அதிகரித்து வருகிறது. அதனால் சாலைகளை அகலப்படுத்தி வருகிறோம். அலாகாபாத், மிர்சாபூர் ஆகிய நகரங்களுக்குச் செல்லும் சாலைகள் அகலப்படுத்தப்பட்டு வருகின்றன. பிரதமரின் தொகுதி என்பதால் எங்களுக்கு கூடுதல் முன்னுரிமை கிடைக்கிறது. அதைப் பயன்படுத்திக் கொள்கிறோம்" என்றார்.

வளர்ச்சி பணி
BBC
வளர்ச்சி பணி

பிரதமரின் வீடு கட்டும் திட்டம் தீவிரமாகச் செயல்படுத்தப் படுவதாகவும் விவசாயிகளுக்கு பென்சன் உயர்த்தப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வெற்றி யாருக்கு?

வாரணாசியிலும் மாநில அளவிலும் கட்சியின் வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கேட்டபோது, "100 சதவிகிதம் வெற்றி உறுதி. பாரதிய ஜனதா கட்சி 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். வாரணாசியை முழுமையாகக் கைப்பற்றுவோம்" என்று சுரேந்திர நாராயண சிங் கூறினார்.

இதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறிய சமாஜ்வாதி கட்சியின் வந்தனா சிங், "பாரதிய ஜனதா கட்சி வாரணாசியிலும் மாநிலத்திலும் தோற்கடிக்கப்படுவது உறுதி. சமாஜ்வாதி கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்" என்று கூறினார்

குறைந்தபட்சம் வாரணாசி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட சட்டப் பேரவைத் தொகுதிகளில் மூன்றையாவது சமாஜ்வாதி கட்சி கைப்பற்றும் என்றார் ஷாலினி யாதவ்.

தேர்தல் முடிவுகளைத் தெரிந்து கொள்ள மார்ச் 10-ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
Will the BJP win Prime Minister Narendra Modi's Varanasi constituency again in the Uttar Pradesh elections? The question arises. Varanasi has become very important not only for pilgrims and tourists but also for the BJP politically
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X