உ.பி.யில் பயங்கரம்: 12 வயது சிறுவன் நரபலி - சாமியார் உட்பட 3 பேர் கைது
லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் 12 வயது சிறுவன் நரபலி கொடுக்கப் பட்ட சம்பவம் தொடர்பாக சாமியார் உட்பட மூவர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் பதோகி மாவட்டம் திலனுகா கிராமத்தை சேர்ந்த சுமித் என்ற 12 வயது சிறுவனைக் காணவில்லை என கடந்த சில நாட்களுக்கு முன்னர் அப்பகுதி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினார்கள்.
இதற்கிடையே அந்த கிராமத்துக்கு வெளியே சிறுவனின் உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சிறுவன் நரபலி கொடுக்கப் பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த சாமியார் உபேந்திரா மற்றும் அவரது உதவியாளர்கள் இருவர் சேர்ந்து சிறுவனை நரபலி கொடுத்து துண்டு துண்டாக வெட்டியது உறுதி செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக போலீஸ் சூப்பிரெண்டு சுபாஷ் சந்திர துபே செய்தியாளர்களிடம் கூறியதாவது :-
சிறுவனை முதலில் கழுத்தை நெறித்து கொன்று உள்ளனர். கண்களை தோண்டி வெளியே எடுத்தனர். பின்னர் தலை மற்றும் உடல் உறுப்புகளை துண்டு துண்டாக வெட்டி உள்ளனர். கோவில் அருகே யாகம் செய்து அவர்கள் சிறுவனை நரபலி கொடுத்து இருக்கிறார்கள்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நரபலி என்ற பெயரில் சிறுவன் கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.