For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

239 பேருடன் மாயமாக மறைந்த.. எம்எச் 370 விமானம்.. 3,105 நாட்களாக விலகாத "மர்மம்".. நடந்தது என்ன?

Google Oneindia Tamil News

கோலாலம்பூர்: ஒரு காலத்தில் உலகத்தையே உலுக்கிய சம்பவம்தான் எம்எச் 370 விமானம் காணாமல் போன நிகழ்வு. எங்கே போனது.. எப்படி மாயமானது.. விமானத்தில் சென்ற 239 உயிர்களுக்கு என்ன ஆனது போன்ற கேள்விகள் உலகத்தையே ஆட்டிப்படைத்தன.

பல நாடுகள் சேர்ந்து கிட்டத்தட்ட 4 வருடங்கள் இந்த காணாமல் போன விமானத்தை தேடுவதற்கான தேடுதல் வேட்டையை நடத்தின. அதன்பின் தனியார் நிறுவனம் ஒன்று 1 வருடம் இந்த விமானத்தை தேடுவதற்காக தேடுதல் வேட்டையை நடத்தியது. அந்த விமானம் காணாமல் போய் இன்றோடு 3,105 நாட்கள் ஆகிவிட்டன.

பல நாட்டு ராணுவனங்கள், விமான படைகள் இணைந்து தேடியும் இந்த மலேசிய விமானத்தை கண்டுபிடிக்கவே முடியவில்லை. உலகத்திலேயே இந்த விமானத்தை தேடுவதற்குதான் மிக அதிக அளவில் பணம் செலவழிக்கப்பட்டது. அப்படி அந்த விமானத்திற்கு என்னதான் ஆனது? வாருங்கள் பார்க்கலாம்.

 ரபேல் போர் விமான ஒப்பந்தம்.. மீண்டும் விசாரிக்க கோரி பொதுநல மனு.. தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் ரபேல் போர் விமான ஒப்பந்தம்.. மீண்டும் விசாரிக்க கோரி பொதுநல மனு.. தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

என்ன விமானம்?

என்ன விமானம்?

மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து போயிங் 777 வகையை சேர்ந்த மலேசியா ஏர்லைன்ஸுக்கு சொந்தமான எம்எச் 370 விமானம் கடந்த 2014 மார்ச் 8ம் தேதி புறப்பட்டது. இது மலேசியா - பெய்ஜிங் சீனா இடையே தினமும் செல்லும் விமானம் ஆகும். சரியாக இரவு 12. 42 மணிக்கு இந்த விமானம் புறப்படுவதற்காக கோலாலம்பூரில் உள்ள "ஏடிசி" அனுமதி கொடுத்தது. "நீங்கள் டேக் ஆப் செய்யலாம்".. என்று அனுமதி கிடைக்கிறது. கிளியரன்ஸ் கிடைத்தவுடன் பைலட்.. "நன்றி.. குட்நைட்" என்று சொல்லிவிட்டு விமானத்தில் பிளாப்களை இறக்கி.. விமானத்தை டேக் ஆப் செய்கிறார்.

விமானத்தின் முதல் கேப்டன் சஹாரி அப்துல் ஷா, துணை கேப்டன் பரீக் அப்துல் அஹமது இருவரும்.. விமானத்தை டேக் ஆப் செய்கிறார்கள். அந்த விமானத்தில் 10 கேபின் க்ரூ உறுப்பினர்கள் இருந்தனர். அதோடு 227 பயணிகள் விமானத்தில் இருந்தனர். விமானம் புறப்பட்டு சரியாக 1 மணி நேரம் கழித்து.. தென் சீனாவின் கடல் மேலே அந்த விமானம் சீறிப்பாய்ந்து கொண்டு இருந்தது. 35 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டு இருந்தது. வானிலை நன்றாக இருந்தது.. மழை, மேகமூட்டம் இல்லை.

வியட்நாம் வான் எல்லை

வியட்நாம் வான் எல்லை

அந்த விமானம் அப்போது வியட்நாம் வான் எல்லையை நெருங்கியது. இதனால் "வியட்நாம் வான் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு நீங்கள் நுழைவதை தெரிவித்துவிடுங்கள்" என்று மலேசிய விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் சென்றுள்ளது. அதோடு மலேசிய வான் கட்டுப்பட்டு அறையில் இருந்து "குட்நைட்" சொல்லிவிட்டு, சைன் ஆப் செய்கிறார்கள். ஆனால் மலேசிய அதிகாரிகளுக்கு அப்போது தெரியாது.. அவர்கள் சொல்லும் அந்த குட்நைட்தான் கடைசி குட்நைட் என்று. அந்த குட்நைட் சொல்லப்பட்டு சரியாக 1 நிமிடம் 43 வினாடி கழித்து விமானம் மாயமானது. ஆம் அப்படியே மாயமானது...

மாயமானது என்றால் அந்த விமானம் மலேசியாவின் ரேடாரில் இல்லை. அதை தொடர்பு கொண்ட போதும் விமானம் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. உடனே மலேசிய விமான கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் பதறுகிறார்கள். அறை உள்ளே ஒரு பதற்றம் தொற்றிக்கொள்கிறது.. எல்லோர் முகத்திலும் ஒரு அச்சம் குடிகொள்கிறது. உடனே வியட்நாம், பாங்காக் உள்ளிட்ட மற்ற வான்வெளி கட்டுப்பாட்டு அலுவலகங்களை கோலாலம்பூர் அலுவலக அதிகாரிகள் தொடர்பு கொண்டு.. "உங்களுக்கு விமானம் ரேடாரில் தெரிகிறதா" என்று கேட்டுள்ளனர். அவர்கள் எல்லோரும் சொன்ன ஒரே பதில்.. "எங்கள் ரேடார் ஸ்கிரீனில் விமானம் மறைந்துவிட்டது" என்பதுதான்!

டிரான்ஸ்பாண்டர்கள்

டிரான்ஸ்பாண்டர்கள்

போர் விமானம் போல அல்லாமல் பயணிகள் விமானத்தில் பொதுவாக இரண்டு டிரான்ஸ்பாண்டர்கள் இருக்கும். இந்த டிரான்ஸ்பாண்டர்கள்தான் சிக்னலை கீழே அனுப்பும். அதை மற்ற ரேடார்கள் கண்டுபிடிக்கும். இவற்றில் ஒன்று செயல் இழந்தால் கூட மற்றவை தொடர்ந்து செயல்படும். இரண்டும் செயல் இழந்தால் கூட, விமானிகள் தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலம் அந்த தகவலை தெரிவிப்பார்கள். சமயங்களில் விமானத்தில் உள்ளே இருக்கும் யாராவது இந்த டிரான்ஸ்பாண்டர்களை செயற்கையாக செயல் இழக்க செய்தாலும் விமானம் ரேடாரில் இருந்து மறைந்து போக வாய்ப்புகள் உள்ளன. அப்படிதான் இந்த விமானமும் ரேடாரில் இருந்து மாயமாக மறைந்து உள்ளது. அதன்பின் 4 மணி நேரம் தொடர்ந்து அந்த விமானத்தை ரேடார்கள் மூலம் தேடினார்கள்.

ஏனென்றால் அந்த விமானம் 4 மணி நேரத்தில் தரையிறங்க வேண்டும். எப்படியாவது பெய்ஜிங்கில் விமானம் இறங்கி விடாதா என்று பல்லை கடித்துக்கொண்டு பார்த்தனர். ஆனால் விமானம் பெய்ஜிங் வான் எல்லைக்கே வரவில்லை. 4 மணி நேரம் கழித்து விமானம் எங்கே இருக்கிறது என்று தெரியாததால்.. மலேசியா ஏர்லைன்ஸ் அந்த அறிவிப்பை வெளியிட்டது . "227 பயணிகள் மற்றும் 12 ஊழியர்களுடன் சென்ற எம்.எச் 370 விமானத்தை காணவில்லை. அதை தேட போகிறோம்" என்று அதிகார்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டது. அவர்கள் அப்போது வெளியிடும் போது அவர்களுக்கே தெரியாது.. அந்த தேடுதல்தான் உலகத்திலேயே மிகப்பெரிய விமான தேடுதலாகவும், அதிக செலவு பிடிக்க போகும் விமான தேடுதலாகவும் இருக்கும் என்று!

விமான தேடுதல்

விமான தேடுதல்

முதலில் விமானத்தை தேடும் பணி.. அது கடைசியாக சிக்னல் கொடுத்த இடத்தில் இருந்து தொடங்கியது. அதாவது தென் சீன கடல் பகுதி மற்றும் தாய்லாந்து இடையே உள்ள கடல் பகுதியில்தான் தேடுதல் தொடங்கியது. ஆனால் அதன்பின் மலேசிய ராணுவம் கொடுத்த தகவலின் அடிப்படையில், தேடுதல் வேட்டை மாற்றப்பட்டது. ராணுவ ரேடார்கள் ஒரு விமானத்தை கண்டுபிடிக்க டிரான்ஸ்பாண்டர் தேவை இல்லை. மாறாக இவர் ரேடார் கதிர்கள் மூலம் டிரான்ஸ்பாண்டர் இல்லாமலே விமானத்தை கண்டுபிடிக்க முடியும். அதாவது விமானத்தில் இருந்து வரும் ரிப்லக்ஷன் மூலமே இதை கண்டுபிடிக்க முடியும். அந்த வகையில் மலேசிய ராணுவம் ரேடாரில் கண்டுபிடித்த தகவலை பகிர்ந்தது.

அவர்கள் பகிர்ந்து டேட்டாவை பார்த்த மலேசிய ஏர்லைன்ஸ் அதிகாரிகளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி.. ஒரு நிமிடம் டேட்டாவை பார்த்து அப்படியே மலேசிய அதிகாரிகள் திகைத்து நின்றனர். அப்போது அவர்கள் சொன்ன வார்த்தை.. "நோ வே சான்ஸே இல்லை" என்பதுதான். காரணம் அந்த விமானம் தான் செல்ல வேண்டிய திசையில் செல்லாமல் திடீரென வலது பக்கம் திரும்பி சென்றது டேட்டாவில் தெரிந்தது. பின்னர் திடீரென இடது பக்கம் மொத்தமாக திரும்பி யூ டர்ன் அடித்து.. மலேசியா நோக்கி சென்று அங்கிருந்து வளைந்து அப்படியே பெனாங் என்ற தீவு நோக்கி சென்று அதன்பின் அந்தமான் கடலை நோக்கி சென்று.. இந்திய கடல் எல்லைக்கு அருகே வந்து.. பின்னர் அப்படியே ரேடாரில் இருந்து காணாமல் போய் உள்ளது.

தேடுதல் வேட்டை

தேடுதல் வேட்டை

இதையடுத்து அடுத்த சில நாட்களுக்கு பல நாட்டு ராணுவ கப்பல்கள், தனியார் கப்பல்கள், ராணுவ விமானங்கள் எல்லாம் அந்தமான் கடல், வங்காள விரிகுடா கடல் என்று பல பகுதிகளில் இந்த விமானத்தை தேடியும்.. விமானத்திற்கான சின்ன அடையாளம் கூட தெரியவில்லை. பொதுவாக விமானங்கள் அனைத்தும் சாட்டிலைட் உடன் தொடர்பு கொண்ட படியே இருக்கும். ஏனென்றால் இந்த சாட்டிலைட் வழியாகவே அவர்கள் விமான கட்டுப்பாட்டு அறையுடன் பேசிக்கொண்டே இருப்பார்கள். அதாவது விமானி பேசும் விஷயங்கள் சிக்னலாக மாறி சாட்டிலைட் வழியாக சென்று விமான கட்டுப்பாட்டு அறைக்கு செல்லும். இப்படிப்பட்ட செயற்கைகோள்கள் அனைத்திற்கும் கிரவுண்ட் ஸ்டேஷன் இருக்கும். அதில் எல்லா டேட்டாவும் இருக்கும். அந்த விமானம் தொடர்பு கொண்ட செயற்கைகோளின் கிரவுண்ட் ஸ்டேஷன் ஆஸ்திரேலியாவில் சேர்ந்த பெர்த்தில் இருக்கிறது.

இந்த ஸ்டேஷனுக்கு சென்ற அதிகாரிகள், அந்த விமானம் சாட்டிலைட் வழியாக வேறு யாரிடமும் பேசி உள்ளதா என்று சோதித்து உள்ளனர். அவர்கள் தெரிவித்த தகவலின்படி.. விமானம் தென் சீன கடல் எல்லை வரை நன்றாகவே இருந்துள்ளது. தொடர்ந்து சாட்டிலைட்டுடன் தொடர்பில் இருந்த விமானம் அந்தமான் கடலை நோக்கி திரும்பி சென்றதும், தொடர்பு துண்டிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இயற்கையாக அல்ல.. செயற்கையாக எதோ ஒரு தொழில்நுட்பம் மூலம் தொடர்பு துண்டிக்கப்பட்டு உள்ளது.

சில நிமிடங்கள் கழித்து விமானம் மீண்டும் இதே சாட்டிலைட்டுடன் தொடர்பு பெற்றுள்ளது. தொடர்ந்து 6 மணி நேரம் அந்தமான் கடலின் மேலே விமானம் பறந்ததற்கான சிக்னல் கிடைத்துள்ளது.

பதில்

பதில்

சாட்டிலைட் மூலம் அந்த 6 மணி நேரம் அனுப்பட்ட சிக்னல்கள் எதற்கும் காக்பிட்டில் இருந்து பதில் வரவே இல்லை. புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், விமானத்தை ஒரு செல்போன் என்று வைத்துக்கொள்ளுங்கள்.. நீங்கள் அவர்களுக்கு போன் செய்கிறார்கள்.. அவர்களும் போனை எடுத்துவிட்டனர், ஆனால் யாருமே பேசவில்லை.

அப்படிதான் அந்த விமானமும் தொடர்பில் இருந்தாலும், கடைசி 6 மணி நேரம் யாரும் எதுவோ பேசவில்லை. பொதுவாக விமானிகள் பதில் அளிக்காத நேரத்தில் விமானத்தில் இருக்கும் டிரான்ஸ்பாண்டர்கள்.. ஒரு சிக்னலை சாட்டிலைட்டுக்கு அனுப்பும். அதாவது விமானம் செயல்பாட்டில்தான் இருக்கிறது என்ற சிக்னலை அனுப்பும். இந்த சிக்னலை வைத்து அந்த விமானம்.. சாட்டிலைட்டின் கிரவுண்ட் ஸ்டேஷனில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருந்தது என்று குத்துமதிப்பாக கண்டுபிடிக்க முடியும். இதை டேட்டாவை வைத்து குத்து மதிப்பாக அந்த விமானம் எங்கே பறந்து சென்று இருக்கும் என்று யூகித்து உள்ளனர். இதை வைத்து தென் இந்திய கடல் அருகே மொத்தம் 7 வட்டங்களை மேப்பில் அதிகாரிகள் போட்டுள்ளனர். அதாவத எம்எச் விமானம் காணாமல் போனதாக கருதப்படும் இடங்கள் என்று 7 இடங்களை சந்தேகித்து அதை சுற்றி வட்டம் போட்டுள்ளனர்.

இதில் கடைசி சிக்னல் எங்கிருந்து வந்து என்ற ஆய்வுகளை செய்து கடைசியில்.. அந்த விமானம் தென் இந்தியாவின் கடல் எல்லைக்கு வெளியே விழுந்து இருக்கலாம் என்று யூகித்து உள்ளனர். இந்த பகுதி ஆஸ்திரேலிய கடல் எல்லையில் வரும். இதனால் இங்கு தேடுதல் வேட்டையை ஆஸ்திரேலியா தொடங்கியது. ஆனால் அங்கு கப்பல்கள் தேடுதல் வேட்டைக்கு செல்வதற்கே 6 நாட்கள் ஆனது. அதன்பின் அங்கு நடத்திய சோதனையிலும், விமானம் கண்டுபிடிக்கப்படவில்லை.

ஹைட்ரோபோன்ஸ்

ஹைட்ரோபோன்ஸ்

பொதுவாக கடலுக்கு அடியில் ஹைட்ரோபோன்ஸ் என்ற சாதனங்கள் கடற்படை பாதுகாப்பிற்காக இருக்கும். இந்த சாதனங்கள் கடலில் குண்டு போடுவது, வெடிப்பு ஏற்படுவது போன்ற மாற்றங்களை கண்டுபிடிக்க, சுனாமி உள்ளிட்ட பல ஆராய்ச்சிகளை செய்ய வைக்கப்பட்டு இருக்கும். அந்த பகுதியில் மொத்தம் 4 ஹைட்ரோபோன்ஸ் இருந்துள்ளன. அங்கு விமானம் சென்றதாக கருதப்படும் அதே நேரத்தில் 4 ஹைட்ரோபோன்ஸ்களிலும் ஒரு விசித்திரமான சத்தம் பதிவாகி உள்ளது. இந்த சத்தம் விமானம் விழுந்ததால் ஏற்பட்ட சந்தேகமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டாலும்.. அதை சுற்றிய பகுதிகள் எதிலும் விமானம் கிடைக்கவே இல்லை.

இந்த விமானத்தில் ஒரு பீகன் இருந்தது. அது விமானம் கடலில் விழுந்தால் சிக்னல் கொடுக்கும் பீகன். இது எல்லா விமானத்திலும் இருக்கும். இது கடலில் விழுந்து 40 நாட்கள் ஆனாலும் சிக்னல் கிடைக்கும். இதை ஸ்கேன் செய்ய சிறிய அளவிலான நீர் மூழ்கி கப்பல் அனுப்பப்பட்டது. ஆனாலும் பீகன் கண்டுபிடிக்கப்படவில்லை. மலேசிய அரசு, ஏர்லைன்ஸ் எல்லோரும் தேடியும் ஒரு சின்ன துரும்பு கூட இந்த விமானத்தில் இருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. 1 மாதம் சென்றது.. 2 மாதம் சென்றது.. 3 மாதம் சென்றது.. 10 மாதம் சென்றது.. 15 மாதம் சென்றது.. சரியாக 16வது மாதத்தில் ஒரு சிக்னல் கிடைத்தது.. ஆனால் இது வேறு மாதிரியான சிக்னல்.

சிக்னல்

சிக்னல்

மடகாஸ்கரில் உள்ளே ரீயூனியன் தீவில் கடற்கரையை சுத்தம் செய்து கொண்டு இருந்த பயணிகள் சிலர் அங்கே விமானத்தின் இறக்கை பகுதி இருப்பதை பார்த்து உள்ளனர். இது ஒருவேளை அந்த விமானமாக இருக்குமோ என்று சந்தேகித்து போலீசில் தெரிவித்து உள்ளனர். அங்கு சிறிய பாகம் மட்டும் இருந்துள்ளது. விசாரணையில் விமானத்தின் "பிளாப்" என்று கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. அதில் இருக்கும் மார்க்ஸ், குறியீடுகள் வைத்து.. அது எம்எச் 370 விமானத்திற்கு சொந்தமானதுதான் என்று கண்டுபிடித்து உள்ளனர். அதன்பின் டேட்டாவை வைத்து சோதனை செய்ததில்.. விமானத்தின் பாகங்கள் சிதறி இருக்கலாம் என்று கருதப்பட்டு இடங்களில் அந்த தீவும் ஒன்று என்று தெரிய வந்துள்ளது. அதாவது வானத்திலேயே ஒருவேளை விமானத்தில் உடைப்புகள் ஏற்பட்டு இருந்தால் அதன் பாகங்கள் எங்கெல்லாம் போகிற வழியில் விழுந்திருக்கும் என்று கணிக்கப்பட்டு இருந்தது. அதில் பாகம் கண்டுபிடிக்கப்பட்ட அந்த தீவும் ஒன்று ஆகும்.

இதன் மூலம் அந்த விமானம் அந்த கடல் பக்கத்திற்கு அருகில் ஊழல் மற்ற கடல் சுற்றுவட்டாரத்தில் எங்காவதுதான் விழுந்திருக்க வேண்டும் என்று யூகிக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு கடற்கரைகளில் சுற்றி சுற்றி தேடியதில்.. 30 விதமான சிறிய சிறிய விமான பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. எஞ்சின் பாகங்கள் கூட கண்டுபிடிக்கப்பட்டன. இதில் 18 பாகங்கள் எம்எச் 370 பாகங்கள் என்று சந்தேகிக்கப்பட்டன. அதில் 3 எம்எச் 370 பாகங்கள் என்று உறுதி செய்யப்பட்டன. அதன்பின் சாட்டிலைட் மூலம் செய்யப்பட்ட ஸ்கேனிங்கில் கடலில் சில பாகங்கள் அங்கங்கே சிறிது சிறிதாக மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டாலும், அவற்றை மீட்க முடியவில்லை.

சோதனைகள்

சோதனைகள்

இந்த சோதனைகள், தேடுதல்கள் எல்லாம் தொடர்ந்து செய்யப்பட்டது. தொடர்ந்து என்றால் 4 வருடங்கள் செய்யப்பட்டு 2017ல் மார்ச்சில்தான்.. விமானத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கைவிடப்பட்டது. நாங்கள் தேடிவிட்டோம்.. எங்களால் முடியவில்லை.. பயணிகளின் குடும்பங்கள் எங்களை மன்னிக்க வேண்டும் என்று மலேசிய ஏர்லைன்ஸ் மன்னிப்பும் கேட்டதும். மொத்தம் 1.20 லட்சம் சதுர கிலோ மீட்டர் பகுதிக்கு கடலில் இந்த ஆய்வுகள் செய்யப்பட்டன. இந்த சோதனை கைவிடப்பட்டதும், அமெரிக்காவை சேர்ந்த ஓசன் இன்பினிட்டி என்ற தனியார் நிறுவனம் எம்எச் 370 தேடுதல் வேட்டையை தொடங்கியது. 1 வருடம் "செர்லாக் ஹோம்ஸ்" போல தேடிய இவர்களும்.. கடைசியில் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று திரும்பி வந்தனர்.

அப்படியே விமானத்தின் சில பாகங்களை ஆங்காங்கே கண்டுபிடித்தாலும்.. விமானம் எப்படி விழுந்தது என்பது மட்டும் தெரியவே இல்லை. இதற்கு பல தியரிகள் சொல்லப்பட்டன.

 தியரிகள் என்னென்ன?

தியரிகள் என்னென்ன?

தியரி 1 - அந்த விமானத்தில் பயணம் செய்த 2 பேர் திருடப்பட்ட பொய்யான பாஸ்போர்ட் மூலம் பயணித்தது தெரிய வந்தது. அவர்கள் தீவிரவாதிகளா என்று ஆய்வு செய்ததிலும் இல்லை என்றே பதில் கிடைத்தது. இவர்கள் சீனாவின் தஞ்சம் கேட்பதற்காக இப்படி பொய்யான பாஸ்போர்ட்டில் பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தியரி 2 - விமானத்தில் இன்னொரு நபர் மெத்தப்படித்த விமான ஆராய்ச்சியாளர். இவர் ஏதாவது செய்து விமானத்தை கடத்தி, அதை வெடிக்க செய்து இருப்பாரோ என்று சந்தேகிக்கப்பட்டது.

தியரி 3 - இது போக விமானத்தில் இருந்த கார்கோவில் 2 மெட்ரிக் டன் லித்தியம் அயர்ன் பேட்டரி இருந்தது. இப்போது இ பைக்குகள் வெடிப்பது போல் இந்த பேட்டரி வெடித்து விபத்து ஏற்பட்டு இருக்கலாமோ என்று சந்தேகிக்கப்பட்டது. விமானத்தில் ஏற்பட்ட தீ காரணமாக, விமானத்தை வேகமாக தரையிறக்க விமானிகள் முயன்று திரும்பி இருக்கலாமோ என்று சந்தேகிக்கப்பட்டது.

தியரி 4 - இது போக விமானத்தை கடைசியாக தொடர்பு கொள்ள முயன்ற போது அது ரேடாரில் இருந்தும் விமானிகள் பேசாததால்.. உள்ளே எல்லோரும் மயங்கி இருக்கலாம் என்றும் சந்தேகம் வந்தது. கேபின் பிரஷர் குறைந்து அதனால் இவர்கள் மயங்கி, அதுவே விமானம் விபத்துக்கு உள்ளாகவும் காரணமாக இருந்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டது. அதாவது விமானம் அதுபாட்டுக்கு பறந்து இருக்கும், விமானிகள் மயக்கத்தில் இருந்திருப்பர். கேபின் பிரஷரில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இதற்கு முன்பே சில விமானங்கள் விபத்துக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது. ஆனால் அப்படியே இருந்தாலும் இவர்களுக்கு ஆக்சிஜன் மாஸ்க் உடனே விழுந்து இருக்கும். விழவில்லை என்றால்.. ஏன் விழவில்லை?

தியரி 5 - இந்த விமானம் பெரும்பாலும் மேனுவல் கண்ட்ரோலில் இருந்துள்ளது. அதாவது உள்ளே இருந்து விமானத்தை யாரோ திருப்பி உள்ளனர். ஆட்டோ பைலட்டில் இல்லை. இதன் அர்த்தம் விமானம் தானாக பறக்கவில்லை. யாரோ உள்ளே பறக்க செய்துள்ளனர். விமானம் முதலில் யு டர்ன் போட்டதெல்லாம் மேனுவல் கண்ட்ரோல்தான். அப்படி என்றால் தியரி 4 அடிபட்டு போகிறது. அதாவது யாரும் மயங்கவில்லை.

தியரி 6 - அதோடு மலேசிய ராணுவ ரேடார் தகவல் படி ஒரு கட்டத்தில் அந்த விமானம் திடீரென 50 அடி உயரத்திற்கு சென்றதும் பின்னர் டைவ் அடித்து திடீரென 15 ஆயிரம் அடி உயரத்திற்கு வந்ததும், மீண்டும் 30 ஆயிரம் அடி உயரத்திற்கு சென்றதும் என்று மாறி மாறி மேலே, கீழே சென்று வந்துள்ளது. இதுவும் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

தியரி 7 - இந்த நிலையில்தான் 2014ல் ஒரு செய்தி வந்தது. அந்த செய்தியால் விமானத்தில் முதல் பைலட் சஹாரி அப்துல் ஷா மீது கவனம் திரும்பியது. அந்த செய்தி - பைலட் அப்துல் ஷா வீட்டில் சோதனை செய்யப்பட்ட போது, அங்கே விமான சிமுலேட்டர் இருந்துள்ளது. அதாவது வீட்டிலேயே விமானம் ஓட்டி பழகும் சிமுலேட்டர். இதில் இருந்த லொகேஷன்தான் அதிர்ச்சி அளித்தது. ஏனென்றால் விமானம் காணாமல் போனதாக கருதப்படும் அதே இடம்தான் இந்த சிமுலேட்டரில் இருந்தது. இது சந்தேகத்தை அதிகப்படுத்தியது. அதாவது அந்த விமானம் சென்றதாக கருதப்படும் அதே ரூட்டில் இவரும் வீட்டில் விமானம் ஓட்டி பழகி உள்ளார். சரியாக விமான விபத்திற்கு 1 மாதத்திற்கு முன் இவர் அந்த பயிற்சியை செய்துள்ளார். அப்படி என்றால் அது திட்டமிட்டதா?

தியரி 8 - ஆனாலும் அவர் வேறு சில ரூட்களிலும் இந்த சிமுலேட்டர் பயிற்சிகளை செய்து இருந்ததால், அதுவும் சந்தேகத்தை அதிகப்படுத்தியது. இந்த சிமுலேட்டர் அடிப்படையில் செய்யப்பட்ட சோதனையிலும், எந்த முடிவுகளும் எட்டப்படவில்லை. விமானி சஹாரி அப்துல் ஷா ஒருவேளை விமானத்தை கடத்தி இருந்தாலும் அதற்கான காரணம் எதுவும் பிடிபடவில்லை. விமானி சஹாரி அப்துல் ஷா ஏற்கனவே பல முறை இதே விமானத்தை ஓட்டி இருக்கிறார். இவருக்கு மனைவி, 3 குழந்தைகள் உள்ளனர். இவருக்கு 18 ஆயிரம் மணி நேர விமானம் ஓட்டிய அனுபவம் உள்ளது. அவரின் வங்கி கணக்கு, குடும்ப வாழ்க்கை எல்லாம் சரியாக இருந்துள்ளது. இவரின் சமூக வலைதள கணக்குகள் எதிலும் எந்த தவறும் இல்லை.

தியரி 9 - இவர்களின் விமானம் கடைசியாக திரும்பிய பெனாங் தீவில்தான் சஹாரி அப்துல் ஷா பிறந்து வளர்ந்தவர் என்பதால் அதுவும் சில சந்தேகங்களை எழுப்பியது.

தியரி 10 - இவரின் துணை பைலட் பரீக் அப்துல் குறித்து சில சந்தேகங்கள் எழுந்தன. இவருக்கு 27 வயதுதான். ஆனால் இவர் ஒருவேளை மெயின் பைலட் கழிப்பறை சென்ற நேரத்தில் காக்பிட்டை மூடிவிட்டு விமானத்தை கடத்தி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. அப்போதுதான் விமானம் பெனாங் தீவு அருகே தாழ்வாக சென்ற போது துணை விமானியின் ஐபோனில் இருந்து ஒரு சிக்னல் சென்றதும் உறுதி செய்யப்பட்டது. அங்கு இருந்த டவரில் இந்த சிக்னல் பதிவாகி உள்ளது. ஆனால் இது போன் சென்ற சிக்னல் அல்ல வெறுமனே.. போனின் ஜிபிஎஸ் ஆன் செய்யப்பட்ட சிக்னல். இதுவும் ஏன் என்று தெரியவில்லை.

பல தியரிகள்

பல தியரிகள்

இப்படி பல தியரிகள் இருந்தும் எதற்கும் உறுதியாக முடிவுகள் இல்லை.

பொதுவாக விமானத்தில் பைலட்டுகள் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளும் போது.. அதன் அலைக்கற்றை எண்களை குறிப்பிடுவார்கள். 136 அலைக்கற்றையில் பேசுகிறோம் என்று கட்டுப்பாட்டு அறையில் சொன்னால் , அதை பைலட் திருப்பி சொல்வார்கள். ஆனால் பைலட் சஹாரி அப்துல் ஷா கடைசியாக "குட் நைட்" சொன்ன போது இந்த நம்பரை திருப்பி சொல்லவில்லை. அதற்கு 1 நிமிடம் முன்பு பேசிய போது கூட அவர் நம்பரை சொல்லி இருக்கிறார். ஆனால் கடைசியில் பேசிய போது அவர் நம்பரை சொல்லவில்லை.. இதற்கு ஏதாவது காரணம் இருக்கலாமோ என்றும் சந்தேகிக்கப்பட்டது. ஆனால் அதற்கும் பதில் இல்லை.

விமானம் எங்கே சென்றது என்று உறுதியாக தெரியவில்லை.. பாகங்கள் கிடைத்தாலும் விமானம் வெடித்ததா, விபத்திற்கு உள்ளானதா என்றும் தெரியவில்லை.. விமானிகள் விமானத்தை ஏன் திசை திருப்பினார்கள் என்று தெரியவில்லை.. விமானம் ஏன் மேலே, கீழே சென்றுவிட்டு வந்தது என்றும் தெரியவில்லை.. விமானத்தின் சாட்டிலைட்டை உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் செயற்கையாக நிறுத்தப்பட்டதால், இதை யார் நிறுத்தியது என்றும் தெரியவில்லை, ஐபோன் சிக்னல் வந்தது ஏன் என்று தெரியவில்லை.. அந்த தீவிற்கு விமானம் ஏன் சென்றது என்று தெரியவில்லை.. சரி விமானம் விபத்துக்கு உள்ளானது என்றாலும், எப்படி விமானம் அப்படியே காணாமல் போகும் என்றும் தெரியவில்லை!

அதாவது எப்படி உலகில் இருக்கும் எந்த ரேடாரில், போர் கப்பலிலும் பதிவாகாமல் விமானம் அப்படியே மாயமாகி மறைந்து இருக்கும்?

இந்த விமானத்தின் தேடுதல் வேட்டைகள் மொத்தமாக கைவிடப்பட்ட நிலையில் 3,105 நாட்கள் ஆகும் இப்போது வரை இந்த கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை.. 239 உயிர்களுக்கு என்ன ஆனது என்றும் தெரியவில்லை!

English summary
3,105 Days, 239 People: What did really happen to the MH 370 flight? - FULL HISTORY.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X