2014-க்கு பிறகு பெரும் மோதல்.. சீறிப் பாய்ந்த ராக்கெட் குண்டுகள்.. காஸாவில் 35, இஸ்ரேலில் 5 பேர் பலி
டெல் அவிவ்: இஸ்ரேலுக்கும், ஹமாஸ் போராளிகளுக்கும் இடையிலான மோதல் திடீரென அதிகரித்துள்ளது. இரு தரப்பும் நடத்திய வான்வெளி தாக்குதல்களில் பாலஸ்தீனத்தின், காசாவில் குறைந்தது 35 பேரும், இஸ்ரேலில் 5 பேரும் கொல்லப்பட்டனர்.
Recommended Video
இஸ்லாமிய குழு மற்றும் பிற பாலஸ்தீனிய போராளிகள் டெல் அவிவ் மற்றும் பீர்ஷெபா மீது பல ராக்கெட் குண்டுகளை புதன்கிழமை அதிகாலை வீசியுள்ளன. இதையடுத்து இஸ்ரேல் காசாவில் நூற்றுக்கணக்கான குண்டுகளை வீசி தாக்குதல்களை நடத்தியது.

இஸ்ரேலிய வான் தாக்குதல்களால் பலமுறை தாக்கப்பட்ட ஒரு பல மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததை பார்த்ததாக காசாவைச் சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் தனது ஜெட் விமானங்கள் மூலம், பல ஹமாஸ் உளவுத்துறை தலைவர்களை குறிவைத்து கொன்றதாக கூறியுள்ளது. ராக்கெட் ஏவுதளங்கள் மற்றும் ஹமாஸ் அலுவலகங்களை குறி வைத்து தாக்கியதாகவும், இஸ்ரேல் கூறியுள்ளது.
2014 காசாவில் நடந்த போருக்குப் பின்னர் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் நடைபெற்ற மிகப் பெரிய மோதல் இதுதான். நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் செல்லக்கூடும் என்ற சர்வதேச நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின், மத்திய கிழக்கு அமைதி தூதர் டோர் வென்னஸ்லேண்ட் ட்வீட் செய்ததாவது: உடனடியாக மோதலை நிறுத்துங்கள், ஒரு முழு அளவிலான போரை நோக்கி சென்று கொண்டிருக்கிறீர்கள். தலைவர்கள் பொறுப்பு ஏற்க வேண்டும். அமைதியை மீட்டெடுக்க ஐ.நா. அனைத்து முயற்சிகளையும் செய்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
காசா நகரில் உள்ள கட்டிடங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக பீர்ஷெபா மற்றும் டெல் அவிவ் நோக்கி 210 ராக்கெட்டுகளை வீசியதாக ஹமாஸின் ஆயுதப் பிரிவு தெரிவித்துள்ளது. இஸ்ரேலைப் பொறுத்தவரையில், அதன் வணிகத் தலைநகரான டெல் அவிவை எதிரிகள் குறிவைப்பது ஒரு சவாலாக மாறியுள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் வன்முறை வெடித்துள்ளது. அங்கு 26 வயதான பாலஸ்தீனியர் இஸ்ரேலிய படைகளின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார். இதுவரை கிடைத்த தகவல்கள்படி, காசாவில் 35, இஸ்ரேலில் 5 பேர் இந்த தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications