For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிலிக்கான் வேலியில் ப்ளாஸ்டிக் பைகளை ஒழித்த தமிழர், துணை மேயர் அனு நடராஜன்!

By Shankar
Google Oneindia Tamil News

ஃப்ரீமாண்ட்(யு.எஸ்): கலிஃபோர்னியாவின் சிலிக்கான்வேலி - வளைகுடா பகுதியான ஃப்ரீமாண்ட் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் , கடைக்கு போனால் நம்ம ஊரு மஞ்சப்பைப் போல் கையில் ஷாப்பிங் பை கொண்டு செல்லவேண்டும்.

ஏனென்றால் கடையில் ப்ளாஸ்டிக் பை கொடுக்கமாட்டார்கள். சுற்றுச் சூழல் பாதுகாப்புக்காக இப்படி ஒரு சட்டத்தை அமல் படுத்தியவர் ஒரு தமிழர், அதுவும் பெண் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா!

ஆம்.. ஃப்ரீமாண்ட் துணை மேயர் அனு நடராஜனுடன் ஒரு நேர்முக சந்திப்பு...

மதுரை டூ ஃப்ரீமாண்ட்

மதுரை டூ ஃப்ரீமாண்ட்

கே: உங்களை ஒன் இந்தியா வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் அனு நடராஜன்...

ப : நான் மதுரையை பூர்வீகமாகக் கொண்டவள். மதுரையில் பிறந்து பெங்களூர் ஜெய நகரில் வளர்ந்தேன். எங்கள் அம்மா உஷா நடராஜன் சமூகப் பணிகளில் ஆர்வம் கொண்டவர். 8 வயது முதல் நானும் சிறுவர் சமூக அமைப்புகளில் பங்காற்றி வருகிறென். விஸ்வேஸ்வரய்யா பொறியியல் கல்லூரியில் ஆர்க்கிடெக் பயின்றேன். பெங்களூர் சிக்பேட், அவென்யு சாலை பகுதி சீரமைப்புக்கு திட்டவடிவம் கொடுத்து இருக்கிறேன். அமெரிக்காவில் ஸ்காலர்ஷிப் பெற்று மேல்படிப்புக்கு வந்ததேன்.. கட்டிடக்கலை மற்றும் நகர்ப்புற மேம்பாடு ஆகிய பிரிவுகளில் இரண்டு முதுகலை பட்டங்களை அமெரிக்காவில் பெற்றேன்.

கே: எப்போது கலிஃபோர்னியா ஃப்ரீமாண்டுக்கு வந்தீர்கள்...

ப: 1996 ஆம் ஆண்டு கணவர் சுந்தரத்தின் வேலை மாற்றத்தின் காரணமாக இங்கே மாற்றலாகி வந்தோம்.

சமூகப் பணி

சமூகப் பணி

கே: இங்கு வந்த உடனே முதலே சமூகப்பணி -அரசியலுக்கு வந்து விட்டீர்களா?

ப: நாங்கள் இங்கே வந்த போது எனது துறை சார்ந்த நகர்ப்புற திட்டப் பணிகளுக்கு அதிகம் வேலை இல்லை. ஃப்ரீமாண்ட் நகர்மன்றத்திற்கு சென்று தன்னார்வத்துடன் நகர்ப்புற திட்டப்பணிகளில் வேலை செய்கிறேன். ஊதியம் தேவையில்லை என்று டவுண்டவுன் (Downtown) கட்டமைப்பு பணிகளில் பங்கெடுத்தேன். தவிர சுற்று வட்டாரத்தில் உள்ள வேறு நகரங்களுக்கும் டவுண்டவுன் கட்டமைப்பு பணிகளில் பணியாற்றினே. ஃப்ரீமாண்ட் நகர்மன்றத்தில் .இரண்டு ஆண்டுகள் திட்டக்குழு அதிகாரியாக பணி புரிந்தேன்.

அமெரிக்காவின் முதல் இந்திய பெண் கவுன்சிலர்

கே: எப்போது ப்ரீமாண்ட் நகர் மன்றத்திற்குள் மக்கள் பிரதிநிதியாக அடியெடுத்து வைத்தது எப்போது?

ப : 2005 ஆம் ஆண்டு, கவுன்சில் மெம்பர் (நகர்மன்ற உறுப்பினர்)ஆக இருந்த பாப் வாஸர்மேன் மேயராக தேர்ந்தெடுக்கப் பட்டதால் அவ்ருடைய உறுப்பினர் பதவி காலியானது. இங்கு இடைத்தேர்தல் கிடையாது. மீதமுள்ள காலத்திற்கு மற்ற உறுப்பினர்களாக சேர்ந்து ஒருவரை தேர்ந்தெடுப்பார்கள். பதினேழு பேர் விண்ணப்பித்த நிலையில், அதில் ஒரே ஒரு பெண்ணாக இருந்த நான் சபை உறுப்பினராக மீதமுள்ள காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன். அமெரிக்காவின் முதல் இந்திய பெண் கவுன்சில் மெம்பர் என்ற பெருமையும் பெற்றேன்.

கே: தேர்தலை எப்போது சந்தித்தீர்கள்? இரண்டாவது தேர்தல் வெற்றி குறித்து?

ப: 2006 ம் ஆண்டு நியமனப் பதவிக்காலம் முடிந்து தேர்தலைச் சந்தித்து, வெற்றி பெற்று மீண்டும் கவுன்சில் மெம்பர் ஆனேன். 2010 ம் ஆண்டு மீண்டும் ஃப்ரீமாண்ட் நகர் மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். துணை மேயராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளேன்.

நகர கட்டமைப்பில் பசுமைத் திட்டம்

நகர கட்டமைப்பில் பசுமைத் திட்டம்

கே : பசுமை(Green) ஃப்ரீமாண்ட் என்பது உங்கள் கொள்கை முழக்கமாக தெரிகிறது. அது குறித்து சொல்லுங்களேன்...

ப : இயற்கையுடன் ஒன்றி வாழ்தல் (Harmony With Nature), கட்டிடங்கள் வடிவமைப்பு, வெளிப்புற புல்வெளி குறைப்பு, சைக்கிள், நடைபாதைக்கு பாதுகாப்பான சாலைத் திட்டம். மக்கள் குடியிருப்பு பகுதிகளில் கடைவீதிகள், சிறிய வீடுகள், வீட்டைச் சுற்றி கல்ஃபோர்னிய தட்பவெட்பத்திற்கேற்ற உள்ளூர் மரங்கள், செடிகள் வளர்ப்பு, இப்படி பல்வேறு வடிவம் கொண்டது. நகர்ப்புற திட்டமைப்பில் எனக்கு உள்ள அனுபவத்தை முழுவதும் பயன்படுத்தி இதை செயல்படுத்த விரும்புகிறேன். இது எனது லட்சியத் திட்டமாகும்,நகர சாலைகளின் அகலத்தை குறைப்பது என்பதுவும் அதில் ஒரு அங்கமாகும்.

கே: அமெரிக்காவில் வேகத்தை அதிகரிக்கும் வகையில் சாலை போடுவது தானே வழக்கம். நீங்கள் சொல்வது முற்றிலும் எதிர்மறையாக தெரிகிறதே. சற்று விளக்கமாக சொல்ல முடியுமா?

ப : நகர தெருக்களின் சாலை அகலமாக இருக்கும் போது, கார்களின் வேகம் அதிகரிக்கிறது. சைக்கிள் செல்பவர்கள், பாத சாரிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஆகி விடுகிறது. பக்கத்து கடைக்கு செல்ல வேண்டுமானால் கூட காரில் தான் செல்ல வேண்டும் என்ற நிலை ஏற்படுகிறது. சாலையின் அகலத்தை குறைக்கும் போது, கார்களின் வேகம் இயல்பாகவே குறைந்து விடும். வேகமாக ஓட்ட முடியாத நிலை ஏற்படும். பாதசாரிகளும், சைக்கிள்காரர்களும் தாராளமாக வெளியே வருவார்கள். பலவகைகளிலும் இயற்கையுடன் ஒன்றி வாழ வழி வகுக்கும்.

அமெரிக்காவில் ப்ளாஸ்டிக்கை ஒழித்தவர்

அமெரிக்காவில் ப்ளாஸ்டிக்கை ஒழித்தவர்

கே : இங்கே கடைகளில் ப்ளாஸ்டிக் பை கொடுப்பதில்லை. கடைக்கு போகும் போது மக்கள் கைகளில் பை கொண்டு செல்வதைப் பார்க்கிறேன். இதற்கும் உங்களுக்கும் ஏதாதவது தொடர்பு உண்டா?

ப: நிச்சயமாக. ஃப்ரீமாண்ட் நகரம் மற்றும் அல்மேடா கவுண்டிகளில் ப்ளாஸ்டிக் பைகள் ஒழிக்கப்பட்டுள்ளது. அதில் எனது பங்களிப்பு முக்கியமானது என்பதில் எனக்கு மகிழ்ச்சி தான். அதே சமயத்தில் இந்த திட்டத்தை அமல்படுத்தும்போது வர்த்தகர்கள் அனைவருக்கும் போதிய அவகாசம் கொடுத்தோம். அவர்களுடைய கருத்துக்களை கவனமாகக் கேட்டறிந்தோம். எங்கள் பகுதி வர்த்தகர்கள், வணிக நிறுவனங்களின் ஒத்துழைப்பால் தான் இது சாத்தியமாயிற்று. ஒரு வேளை பை கொண்டு வரவில்லை என்றால் பணம் கொடுத்து ஷாப்பிங் பை வாங்கிக் கொள்ளலாம். அது பல தடவை உபயோகிக்கக்கூடியது. இது மட்டுமல்ல, ஃப்ரீமாண்ட் ரெஸ்டாரண்ட்களில் ஸ்டைரஃபாம்(Styrofoam) உணவு டப்பாக்களையும் தடுத்து நிறுத்திவிட்டோம். தற்போது பேப்பர் கண்டெய்னர்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. ப்ளாஸ்டிக் மட்டுமல்ல, ஃப்ரீமாண்டில் பொது இடங்களில் புகைப் பிடிப்பதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க்ப்பட்டுள்ளது.

இந்திய அமெரிக்கர்களே தேர்தலில் வாக்களியுங்கள்

கே : உங்கள் மேயர் தேர்தல் அனுபவம் குறித்து...

கே : உங்கள் மேயர் தேர்தல் அனுபவம் குறித்து...

கே : உங்கள் மேயர் தேர்தல் அனுபவம் குறித்து...

ப : 2012 ல் நான் முதன் முதலில் ப்ரீமாண்ட் மேயர் தேர்தலுக்கு போட்டியிட்டேன். கலிஃபோர்னியா அட்டர்னி ஜெனரல் கமலா ஹாரிஸ் எனக்கு ஆதரவு அளித்திருந்தார். இந்திய அமெரிக்க சமுதாயம் மிகவும் அக்கறையுடன் ஒத்துழைப்பு கொடுத்தார்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் தன்னார்வத்துடன் தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர். எங்களால் இயன்ற அளவுக்கு முயற்சி எடுத்தோம். கடும் போட்டி இருந்ததால் குறைந்த வித்தியாசத்தில் வெற்றியை இழக்க வேண்டி ஏற்பட்டது. ஆனால் இதன் மூலம் அனைவருக்கும் நகர பணிகள், தேர்தல் குறித்து தெரிந்து கொண்டனர். அதிகளவில் பெண்களும் அரசியலில் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்திய அமெரிக்கர்கள் வாக்காளர்களாக பதிவு செய்ய வைக்க வேண்டும் என்பது நாங்கள் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம். நம்மவர்கள் தேர்தலில் வாக்காளர்களாகவாவது பங்கேற்க வேண்டும் என்பது எனது பணிவான வேண்டுகோள்.

கே: சம்மந்தப் பட்ட துறையில் படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்பதற்கு பெரிய முன் மாதிரியாக விளங்குகிறீர்கள்.2016 ம் ஆண்டு மேயர் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற வாழ்த்துக்கள். அமெரிக்காவின் முதல் இந்தியப் பெண் மேயர் பெருமை தங்களுக்கு கிடைக்கட்டும். நல்வாழ்த்துக்கள்.

ப: நன்றி. மக்கள் ஆதரவுடன் ஃப்ரீமாண்ட் மேயராக பணியாற்றி, பசுமைத் திட்டத்தை செயல்படுத்த ஆர்வமாக உள்ளேன். ஒன் இந்தியா வாசகர்களுக்கும் எனது வாழ்த்துகள்!

சந்திப்பு: இர. தினகர், டல்லாஸ்

English summary
Anu Nataraja, a Tamil Dty Mayor of Fremont banned plastic in Silicon Valley
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X