
"விசித்திரம்".. இரண்டு அங்குல நீள வாலுடன் பிறந்த குழந்தை.. அரிய நிகழ்வு.. மருத்துவர்கள் வியப்பு
மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் ஒரு குழந்தை இரண்டு அங்குல நீள வாலுடன் பிறந்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியம் அடையச் செய்துள்ளது.
இந்தக் குழந்தையின் வாலை பரிசோதித்த மருத்துவர்கள், இது உண்மையான வால் என்றும், இப்படி வாலுடன் ஒரு குழந்தை பிறப்பது அரிதிலும் அரிதான நிகழ்வு எனவும் தெரிவித்துள்ளனர்.
உலக அளவில் மிக சொற்ப எண்ணிக்கையிலான குழந்தைகளே இவ்வாறு வாலுடன் பிறந்திருப்பதாகவும், இதற்கான காரணத்தை இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
குழந்தை நாக்குக்கு பதில் பிறப்புறுப்பில் ஆபரேஷன் என்பது தவறான தகவல்! மதுரை மருத்துவமனை டீன் விளக்கம்

மருத்துவ உலகுக்கே சவால்
என்னதான் மருத்துவம் உச்சபட்ச வளர்ச்சியை அடைந்திருந்தாலும் அதற்கே சவால் விடும் வகையில் சில நிகழ்வுகள் நடக்கவே செய்கின்றன. அதில் ஒன்றுதான், விசித்திர தோற்றத்துடன் பிறக்கும் குழந்தைகள். உலக அளவில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது இப்படி சில விசித்திர குழந்தைகள் பிறக்கத்தான் செய்கின்றன. இரண்டு தலைகளுடன் பிறந்த குழந்தை, கொம்புகளுடன் பிறந்த குழந்தை போன்ற செய்திகளை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இப்படி குழந்தைகள் பிறப்பதற்கு என்ன காரணம் என இதுவரை மருத்துவ உலகத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படியொரு சம்பவம்தான் மெக்சிகோவில் நடந்துள்ளது.

வியப்பில் ஆழ்த்திய "வால்" குழந்தை
மெக்சிகோவில் உள்ள நியூவோலியோன் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சமீபத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. 10 மாதங்கள் முழுவதும் வயிற்றில் இருந்து சரியான எடையுடன் ஆரோக்கியமாக அந்தக் குழந்தை இருந்துள்ளது. ஆனால், அந்தக் குழந்தையின் முதுக்குக்கு கீழே உள்ள பகுதியில் 2 அங்குல நீளத்துடன் ஒரு வால் இருந்திருக்கிறது. இதை பார்த்த மருத்துவர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர். உலக அளவில் வால்களுடன் சில குழந்தைகள் பிறந்திருந்தாலும் மெக்சிரோவில் இவ்வாறு ஒரு குழந்தை பிறப்பது இதுவே முதன்முறை ஆகும்.

உணர்ச்சியுடன் இருந்த வால்
அந்த வாலானது சரியாக 5.7 சென்டமீட்டர் நீளமும், 3 மி.மீ. முதல் 5 மி.மீ. விட்டமும் கொண்டிருக்கிறது. மேலும், அந்த வால் மிருதுவான தோலால் மூடப்பட்டும் மெல்லிய முடிகளாலும் நிறைந்திருந்தது. தன்னிச்சையான அசைவு இல்லாத போதிலும் அந்த வாலில் உணர்ச்சிகள் இருந்தது. அதை ஊசியால் குத்திய போதும் குழந்தை அழுதிருக்கிறது. பார்ப்பதற்கு பூனைக் குட்டியின் வாலை ஒத்த தோற்றத்தில் அது இருந்திருக்கிறது. தாய் - சேய் இருவரும் நலமாக இருப்பதால் இது பெரிய பிரச்சினை இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். அதே சமயத்தில், குழந்தைக்கு 2 மாதங்கள் நிறைவடையும் போது அந்த வாலை அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் கூறினர்.

அகற்றிய மருத்துவர்கள்
அதன்படி, அந்தப் பெண் குழந்தைக்கு 2 மாதங்கள் நிறைவடைந்த நிலையில், கடந்த வாரம் அதற்கு வால் அகற்றப்பட்டது. அந்த வாலானது தசை, ரத்த நாளங்கள், நரம்புகளை கொண்ட உண்மையான வால் என்று அதை பகுப்பாய்வு செய்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், அந்த வாலில் எலும்புகள் இல்லை. கருப்பையில் உருவாகும் குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் வால் போன்ற அமைப்பு இருக்கும். பின்னர், அப்பகுதி உடலுக்குள் தானாக சென்றுவிடும். ஆனால், சில குழந்தைகளுக்கு அது உள்ளே செல்லாமல் வால் போன்று அந்த அமைப்பு இருந்து விடுகிறது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.