குறிவைக்கப்படும் இந்துக்கள்? வங்கதேசத்தில் மேலும் இரு துறவிகள் கைது! என்ன தான் நடக்கிறது!
டாக்கா: வங்கதேசத்தில் இப்போது மீண்டும் மிகப் பெரியளவில் வன்முறை வெடித்துள்ளது. அங்குள்ள இந்துக்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அங்கு ஏற்கனவே ஒரு இந்து மத துறவி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை பார்க்கச் சென்ற மேலும் இரு இந்து மத துறவிகள் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
வங்கதேசத்தில் சிறுபான்மை சமூகத்தின் மீதான தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், இப்போது அங்கு மேலும் இரண்டு இந்து துறவிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டோகிராம் பெருநகர காவல்துறை இந்த கைது நடவடிக்கையை எடுத்துள்ளது..

ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு தேசத்துரோக குற்றச்சாட்டில் மற்றொரு துறவியான சின்மோய் கிருஷ்ண தாஸ் என்பவர் கைது செய்யப்பட்டு இருந்தார். இதற்கு அங்குள்ள இந்துக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மேலும் இப்போது இரு இந்து துறவிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது: கைது செய்யப்பட்டுள்ள துறவிகள் ருத்ரப்ரோட்டி கேசப் தாஸ் மற்றும் ரங்கநாத் சியாமா சுந்தர் தாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சின்மோய் தாஸுக்கு உணவு, மருந்து மற்றும் பணத்தை வழங்கச் சென்றபோது இவர்களும் கைது செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக வங்கதேசத்தில் உள்ள ப்ரோபோர்டக் சங்கத்தின் தலைவர் சுதந்திர கவுரங்கா தாஸ் கூறுகையில், "சிறையில் உள்ள சின்மோய் கிருஷ்ணாவுக்கு உணவு வழங்கச் சென்ற போது எங்கள் துறவிகள் இருவரைக் கைது செய்துள்ளனர். கோட்வாலி போலீசார் எங்கள் துறவிகளைக் கைது செய்துள்ளனர்" என்றார்.
வங்கதேச போலீசார்: மேலும் இரு இந்து துறவிகள் கைது செய்யப்பட்டுள்ளதை வங்கதேச போலீசாரும் உறுதி செய்துள்ளனர். சில வழக்குகள் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் இதன் காரணமாகவே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வங்கதேச போலீசார் தெரிவித்தனர். அதேநேரம் என்ன வழக்கு, இதில் இந்து துறவிகளுக்கு என்ன தொடர்பு என்பது குறித்த விவரங்களைப் பகிர அவர்கள் மறுத்துவிட்டனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் மிகப் பெரிய வன்முறை ஏற்பட்டது. அப்போது பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக வன்முறை வெடித்தது. இதனால் வேறு வழியின்றி ஷேக் ஹசீனா இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார். அப்போது முதலே வங்கதேசத்தில் உள்ள இந்து சமூகத்தினருக்கு எதிராகக் கடுமையான ஒடுக்குமுறை ஏற்பட்டுள்ளது.. சுமார் 200க்கும் மேற்பட்ட கோயில்களை குறிவைத்து தாக்குதல் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இஸ்கான் நிறுவனத்துடன் தொடர்புடைய 17 பேரின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னணி: வங்கதேசத்தில் சின்மோய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி எனப்படும் இஸ்கான் துறவி கடந்த நவம்பர் 25ஆம் தேதி டாக்கா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். கடந்த அக்டோபரில் அங்கு நடந்த பேரணி ஒன்றில் வங்கதேச தேசியக் கொடிக்கு மேல் காவிக் கொடியை ஏற்றியதாக அவர் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது கைதை தொடர்ந்து பல இடங்களில் போராட்டம் நடந்த நிலையில், அப்போது வெடித்த வன்முறையில் ஒருவர் கொல்லப்பட்டார்.












Click it and Unblock the Notifications