நல்லா பாருங்க.. இதுதான் செவ்வாய் கிரகம்.. பளிச்சென்று போட்டோ எடுத்து அனுப்பிய சீன ரோவர்
பீஜிங்: செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய சீனா அனுப்பிய ரோவர், வெற்றிகரமாக அங்கு புகைப்படம் எடுத்துள்ளது. இந்த புகைப்படத்தை சீன விண்வெளி ஆய்வு அமைப்பு வெளியிட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய இந்தியா ஏற்கனவே மங்கள்யான் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்குஅனுப்பியது. செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப் பாதையில் இந்திய விண்கலம் நிலைநிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், சீனாவும் செவ்வாய் கிரக ஆய்வுகளில் தீவிரம் காட்டி வந்தது. இதன் ஒரு பகுதியாக, "தியான்வென்-1" என்ற விண்கலத்தை கடந்த ஆண்டு ஜூலை மாதம் சீனா ஏவியது.

செவ்வாய் கிரக ஆராய்ச்சி
சீன விஞ்ஞானிகள் திட்டமிட்டபடி, இநத் விண்கலம் கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தின், சுற்று வட்டப் பாதையை அடைந்தது.
விண்கலத்தில் இருந்து லேண்டர் கருவியை செவ்வாயில் தரையிறக்கும் பணி இதையடுத்து தொடங்கியது.

சாதனை
லேண்டரை தரையிறக்கும் போது, கடைசி 7 நிமிடங்கள் மிகவும் முக்கியமானது. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இத்தனை ஆண்டு கால முயற்சியின் மொத்த செயல்பாட்டையும் தீர்மானிக்கப்போவது அந்த 7 நிமிடங்கள்தான். ஆனால், அந்த நிலையை தாண்டி வெற்றிகரமாக தரையிறங்கியதாக சீன தேசிய விண்வெளி ஆய்வு மையம் அறிவித்தது.

தரையிறங்கிய லேண்டர்
நேற்றுஅதிகாலை பாராசூட் தொழில்நுட்பம் மூலம், சீனாவின் லேண்டர் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது. செவ்வாயின் வடக்கு பகுதியில் லேண்டர் பத்திரமாக தரையிறக்கப்பட்டதாக சீன அரசு தொலைக்காட்சி அறிவித்தது.

நெருப்பு கடவுள்
லேண்டரில் இருந்து 'ஸுராங்' அதாவது சீன மக்களின் நெருப்பு கடவுள் பெயர் சூட்டப்பட்ட ரோவர் ஊர்தி, நெருப்பு கிரகம், சிவப்பு கிரகம் என்று அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கியது. 6 சக்கரங்களுடன் 240 கிலோ எடை கொண்டது இந்த ரோவர். செவ்வாய் கிரகத்தில் 3 மாதங்கள் இருந்து போட்டோக்களையும், நில அமைப்பு உள்ளிட்ட தகவல்களையும் பூமிக்கு அனுப்பும் என்று சீன விஞ்ஞானிகள் கூறியிருந்தனர்.

இதுதான் செவ்வாய் கிரகம் போட்டோ
இந்த நிலையில்தான், ரோவர் எடுத்த புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. செவ்வாய்கிரகத்தில் ரோவர் வெற்றிகரமாக தரையிறங்கியதை உறுதி செய்யும் வகையில் இந்த புகைப்படம் அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications