For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வேற்றுமையே இந்தியாவின் பலம்- 18,000 கிராமங்களுக்கு 1000 நாளில் மின்சாரம்: லண்டனில் பிரதமர் மோடி

By Mathi
Google Oneindia Tamil News

லண்டன்: இந்தியாவில் நிலவும் வேற்றுமைகள்தான் தேசத்தின் சிறப்பு பலம், பெருமையும் கூட; சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகாலமாகியும் மின்சாரம் கிடைக்காத 18,000 கிராமங்களுக்கு 1000 நாளில் மின்சாரம் அளிப்போம்; லண்டனில் இருந்து குஜராத்தின் அகமதாபாத்துக்கு நேரடி விமான சேவை இயக்கப்படும் என்று லண்டனில் இந்தியர்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

இங்கிலாந்து நாட்டுக்கு 3 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி லண்டன் வெம்பிளே மைதானத்தில் 60 ஆயிரம் இந்தியர்களிடையே சுமார் 2 மணிநேரம் உரையாற்றினார்.

Diversity India's pride and strength: PM Modi

பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை விவரம்:

இது வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். இந்த மைதானத்தில் கூடியுள்ள அனைவருக்கும் என் நன்றி. நீங்கள் அனைவரும் தீபாவளியை சிறப்பாக கொண்டாடி இருப்பீர்கள் என நம்புகிறேன்.

லண்டன் மிகவும் குளிராக இருக்கும் என்று என்னிடத்தில் கூறினார்கள். ஆனால் இந்த அளவுக்கு 8 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குளிர்ச்சியாக இருக்கும் என நினைக்கவில்லை.

உங்களது அன்பார்ந்த வரவேற்பு நம் சொந்த நாட்டில் இருப்பதைப் போன்ற உணர்வைத் தருகிறது. இங்கே உரையாற்றிய இங்கிலாந்து பிரதமர் கேமரூனுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

குஜராத் முதல்வராக 2003ஆம் ஆண்டு இங்கே நான் உங்களை சந்தித்தேன். அப்போது தேம்ஸ் நதிக்கரையில் வெள்ளம் கரை புரண்டோடியது. தற்போது 12 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் லண்டன் வந்துள்ளேன். இப்போது நான் கூடுதல் பொறுப்புடன் இங்கே வருகை தந்துள்ளேன்.

ஏழைகள் இருக்க தேவையில்லை

இந்தியா தன்னுடைய கனவுகளை முழுமையாக நிறைவேற்றிக் கொள்ள முடியும். இந்தியாவில் ஏழைகள் இருப்பதற்கு எந்த ஒரு காரணமும் இல்லை. இதைத்தான் கடந்த 18 மாத கால அனுபவத்தில் உணர்ந்துள்ளேன். இந்தியாவில் 65% பேர் 35 வயதுக்கும் குறைவானவர்கள். இந்தியா இளைஞர்கள் நிறைந்த நாடு.

இந்தியா ஒருபோதும் பின் தங்கிய நாடாகிவிட முடியாது. இந்தியாவின் முன்னேற்றத்தை எவர் ஒருவராலும் தடுத்துவிட முடியாது. இளைஞர்களைக் கொண்ட இந்தியா போன்ற ஒரு நாட்டால் வளர்ச்சியில் பின்தங்கிவிட முடியாது. நான் கேமரூனை சந்திக்கும் போதெல்லாம் இந்திய சமூகத்தினரைப் பற்றி பெருமிதம் தெரிவிப்பார்.

இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் முன்பாக நம்முடைய மகாத்மா காந்தி சிலை இருப்பதை பார்க்கிற எந்த ஒரு இந்தியனும் பெருமிதம் கொள்ளாமல் இருக்க முடியுமா? நாம் அதைப் பார்த்து பெருமிதம் கொள்கிறோம். 100 ஆண்டுகளுக்குப் பின்னர் சுதந்திரப் போராட்ட வீரர் ஷியாம்ஜி கிருஷ்ண வர்மாவுக்கு பாரிஸ்டர் பட்டம் திரும்ப கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கேமரூனுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

வேற்றுமையே பலம்

வேற்றுமைகள் கொண்ட இந்தியாவில் அனைவரும் நல்லிணக்கத்தோடு வாழ்வதைப் பார்த்து பலரும் ஆச்சரியப்படுகின்றனர். 100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் வேற்றுமைகளுக்கு நடுவே எப்படி அமைதியாக வாழ்கிறார்கள் என்று என்னிடம் கேட்கிறார்கள்.

இந்தியாவின் வேற்றுமைகள்தான் நமது சிறப்பம்சம்... இந்தியாவில் இருக்கும் வேற்றுமைகள்தான் நமது பெருமை.. பலம்.

சீக்கியர்கள்

சீக்கியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை இன்று சந்தித்து பேசினேன். பல்வேறு விஷயங்கள் தொடர்பாக கருத்துகளைப் பரிமாறிக் கொண்டேன். சில பிரச்சனைகளில் அவர்களது வலியை என்னால் உணர முடிகிறது.

கபீரும் ரஹீமும் ஒருவரை ஒருவர் மதிப்பதற்கான போதனைகளை நமக்கு கற்பித்திருக்கிறார்கள். இஸ்லாம் மதத்தில் சூபியிசத்தின் தாக்கத்துக்கு அதிக செல்வாக்கு அனுமதிக்கப்பட்டிருந்தால் நீங்கள் சூபி தத்துவத்தைப் புரிந்து கொண்டிருந்தீர்கள் எனில் ஒருபோதும் துப்பாக்கியை ஏந்தியிருக்க மாட்டீர்கள். உலகம் இந்தியாவை பல்வேறு சந்தர்ப்பங்களுக்காக உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவைப் பற்றிய உலகத்தின் பார்வை மாற வேண்டும் என்று நினைக்காதீர்கள்.

சார்பல்ல.. சமநிலை

நாம் உலகத்தின் தோளோடு தோள் நிற்க வேண்டும். நாம் இந்த உலக நாடுகளில் இருந்து நமக்கு சார்பான எதனையும் எதிர்பார்க்கவில்லை.. நாமும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதையே எதிர்பார்க்கிறோம்.

பயங்கரவாதம், குளோபல் வார்மிங்

பயங்கரவாதமும் குளோபல் வார்மிங்கும் உலகின் மிகப் பெரிய அச்சுறுத்தல்கள். உலக நாடுகளின் தலைவர்கள் சந்திக்கும் போதெல்லாம் இவைதான் விவாதிக்கப்படுகிறது.

இந்த இரண்டின் அபாயத்தில் இருந்தும் மனித உயிர்களைக் காப்பாற்றுவது என்பது இந்த உலகின் ஒவ்வொரு குடிமகன், ஒவ்வொரு நாட்டின் கடமையாகும்.

உலக நாடுகள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்தியா பங்களிக்க தயாராக இருக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் பயங்கரவாதம், குளோபல் வார்மிங் ஆகியவற்றை எதிர்த்துப் போராடுவதற்கான பாதையை உலகத்துக்கு காட்டியிருக்கிறோம்.... நாம் அந்த பாதையில் தொடர்ந்து பயணிப்போம்.

18,000 கிராமங்கள்

இந்தியா விடுதலை பெற்று பல ஆண்டுகளாகியும் மின்சாரம் கிடைக்காத கிராமங்கள் இந்தியாவில் உள்ளன. இதனை மாற்றுவதற்கு நான் பாடுபட வேண்டாமா?

இந்தியா விடுதலை பெற்று 70 ஆண்டுகாலமாகியும் இன்னமும் 18,000 கிராமங்களுக்கு மின்சாரம் கிடைக்கவில்லை. நாங்கள் அடுத்த 1000 நாளில் இந்த கிராமங்களுக்கு மின்சாரத்தை கிடைக்க செய்வோம். என் மீது நம்பிக்கை வையுங்கள்.

இந்தியாவில் விரைவான வளர்ச்சியை நீங்கள் வெகுவிரைவில் காணத்தான் போகிறீர்கள். டீ விற்கும் ஏழை இந்தியாவின் செங்கோட்டையில் கொடி ஏற்றுவார் என எவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். நானும் ஒருபோதும் அப்படி கனவு கண்டதில்லை.

தூய்மை இந்தியா

நான் செங்கோட்டையில் நின்ற போது சுத்தத்தைப் பற்றி பேசினேன். மக்கள் ஆச்சரியத்துடன் புருவத்தை உயர்த்திப் பார்த்தார்கள். என்னுடைய பாரத் மாதா இப்போது தூய்மையாக இருக்கிறார்... இதைக் கண்டு நாம் பெருமிதப்பட வேண்டாமா?

நமது இந்தியாவில் நிறைய இளம் பெண்கள் பள்ளிக்கூட படிப்பை பாதியில் நிறுத்திவிடுகிறார்கள்.. ஏனெனில் அவர்களுக்கு தனியான கழிப்பறை வசதிகள் இல்லை. நாங்கள் இந்தியாவின் ஒவ்வொரு பள்ளிக் கூடத்திலும் தற்போது மாணவிகளுக்கான கழிப்பறைகளை கட்டி முடித்திருக்கிறோம்.

இந்திய ரயில்வே துறையில் போதுமான முன்னேற்றம் ஏற்படவில்லை. ஆகையால் 100% அன்னிய நேரடி முதலீட்டை நாங்கள் ஏன் கொண்டுவரக் கூடாது? அதனால்தான் 100% அன்னிய முதலீட்டை நாங்கள் ரயில்வே துறையில் அறிவித்தோம்.

இந்தியாவில் 40% இந்தியர்களுக்கு வங்கிக் கணக்கு இல்லை. 100 நாட்களுக்குள் 19 கோடி இந்தியர்களுக்கு வங்கிக் கணக்கை உருவாக்கிக் கொடுத்தோம்.

லண்டன் பங்குச் சந்தையில் இந்திய ரயில்வேயின் பண பாண்டுகள் விநியோகிக்கப்படுகின்றன. "பாண்டுகள்" பற்றி பேசும்போது 2 பாண்டுகள் நினைவுக்கு வரும்.. ஒன்று ஜேம்ஸ்பாண்ட்.. மற்றொன்று இங்கிலாந்தின் ப்ரூக் பாண்ட் டீ. ஜேம்ஸ்பாண்ட் பொழுதுபோக்கு அம்சம்.... ப்ரூக் பாண்ட் டீ என்பது உற்சாகமளிப்பது.

2 எப்.டி.ஐகள்

எங்களைப் பொறுத்தவரை 2 எஃப்.பி.டி.ஐக்களை சமமாக பார்க்கிறோம். ஒன்று நேரடி அன்னிய முதலீடு; 2வது இந்தியாவின் வளர்ச்சி முதலில் என்பது.. (Foreign Direct Investment, First Develop India)

அன்னிய நேரடி முதலீட்டில் 40%- த்தை நாம அனுமதித்துள்ளோம். இது இந்தியா மீதான சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகும். பாதுகாப்புத் துறையில் நாம் சுய தயாரிப்பாளர்களாக இருக்க விரும்புகிறோம். உலகின் முன்னணி பாதுகாப்பு தளவாட நிறுவனங்கள் இந்தியாவின் கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

சூர்ய புத்திரர்கள்

நான் இந்தியாவை சூர்ய புத்திரர்களின் தேசமாக- சூரிய சக்தியின் தேசமாக மாற்ற வேண்டும் என விரும்புகிறேன். இதற்காக சர்வதேச அளவில் சூரிய சக்திக்கான ஒரு கூட்டணி உருவாக வேண்டும். எண்ணெய் உற்பத்தி நாடுகளையும் சூரிய சக்தி உற்பத்திக்கு நாம் கொண்டுவர வேண்டும்.

சூரிய சக்தியில் இந்தியாவை நாங்கள் முன்னணி நாடாக கொண்டுவருவோம். எனக்கு 2 கனவுகள் உண்டு. ஒன்று சுகாதாரத்தைப் பேணுவது; 24 மணிநேரமும் மின்சார விநியோகம் இருக்க வேண்டும் என்பது.. நம்மிடம் சூரிய சக்தி, காற்று சக்தி இருக்கிறது. 2019ஆம் ஆண்டுக்குள் இந்த 2 கனவுகளும் நிறைவேறும் என நம்புகிறேன். மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளில் இந்தியாவின் அனைத்து கிராமங்களுமே மின்சார வசதியைப் பெறுவதற்கான திட்டங்களைத் தீட்டியுள்ளோம். நாம் டிஜிட்டல் இந்தியா, க்ளீன் இந்தியா, ஸ்கில் இந்தியாவை உருவாக்க விரும்புகிறோம்.

டிவி, பத்திரிகை இந்தியா அல்ல

நீங்கள் தொலைக்காட்சிகளில் பார்க்கும் இந்தியாதான் இந்தியா அல்ல.. பத்திரிகைகளில் வருகிற தலைப்புச் செய்திகளை விட இந்தியா மிகப் பெரிய தேசம்.

50 ஆப்ஸ் இம்ரான்கான்

ராஜஸ்தானின் ஆல்வாரைச் சேர்ந்த இம்ரான்கான் 50 ஆப்ஸ்களை மாணவர்களுக்காக உருவாக்கியுள்ளார். இம்ரான்கானைப் போன்றவர்களும் இந்தியாவில் வாழ்கிறார்கள்.

செல்பி வித் டாட்டர் முயற்சி மூலம் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். லட்சக்கணக்கான மக்கள் பழங்குடி மக்களின் கல்வி, சுகாதாரத்துக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

வெளிநாடு வாழ் இந்தியர்களின் குடியுரிமை பிரச்சனை விரைவில் தீர்க்கப்பட்டு எளிதானதாக மாற்றப்படும். வெளிநாடு வாழ் இந்தியர்களின் விசா உள்ளிட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு காண டிஜிட்டல் மயமாக்கியுள்ளோம்.

நேரடி விமான சேவை

2003ஆம் ஆண்டு நான் இங்கே வந்த போது வாஜ்பாய் ஆட்சிக் காலத்தின் போது லண்டனில் இருந்து அகமதாபாத்துக்கு நேரடி விமான சேவைக்கான முயற்சிகளை மேற்கொண்டேன். இப்போது அது சாத்தியமாகியுள்ளது. வரும் டிசம்பர் மாதம் முதல் லண்டன் - அகமதாபாத் இடையே நேரடியாக ஏர் இந்தியா விமான சேவை இயக்கப்பட உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

English summary
Prime Minister Narendra Modi said on Friday, the second day of his three-day visit to Britain, that diversity is the pride and strength of India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X