For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அஷ்ரப் கனி: முன்னாள் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி தலிபான்களிடமிருந்து தப்பி ஓடிய தருணம்

By BBC News தமிழ்
|
அஷ்ரஃப் கனி
Getty Images
அஷ்ரஃப் கனி

ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபர், இந்த ஆண்டின் தொடக்கத்தில் தாலிபன்கள் நாட்டைக் கைப்பற்றிய பிறகு அங்கிருந்து வெளியேறும் முடிவை எடுத்தார். காபூல் அழிக்கப்படுவதைத் தடுப்பதற்காக அந்த முடிவை தான் எடுத்ததாகத் தற்போது கூறியுள்ளார்.

ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானின் தலைநகரைக் கைப்பற்றிய பின்னர் தாலிபன்கள் ஆட்சியைக் கைப்பற்றினார்கள்.

ஆகஸ்ட் 15 அன்று தான் விழித்தபோது, ஆப்கானிஸ்தானில் அதுதான் தன்னுடைய கடைசி நாளாக இருக்குமென்ற எந்தக் குறிப்பும் தனக்கு இல்லையென்று அஷ்ரஃப் கனி தெரிவித்தார்.

காபூலில் இருந்து அவருடைய விமானம் புறப்பட்டபோதுதான் தான் செல்வதை உணர்ந்ததாக பிபிசி ரேடியோ 4-ன் டுடே நிகழ்ச்சியில் கனி கூறினார்.

அந்த நேரத்தில் நாட்டைக் கைவிட்டுவிட்டதாக அவர் கடுமையான விமர்சனங்களுக்கும் குற்றச்சாட்டுக்கும் உள்ளானார். அவர் இப்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருக்கிறார்.

வியாழன் அன்று பிபிசி ரேடியோ 4-ன் டுடே நிகழ்ச்சியை விருந்தினராகத் தொகுத்துக் கொண்டிருந்த இங்கிலாந்தின் முன்னாள் பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் சர் நிக் கார்டருடன் உரையாடியபோது அஷ்ரஃப் கனி இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.

"நாள் தொடங்கியதும் தாலிபன் போராளிகள் காபூலுக்குள் நுழைவதில்லை என்று ஒப்புக் கொண்டிருந்தனர். ஆனால், இரண்டு மணிநேரம் கழித்து அப்படி நடக்கவில்லை," என அன்று நடந்ததை நினைவுகூர்ந்தார் அஷ்ரஃப் கனி.

மேலும், "இருவேறு திசைகளில் தாலிபன்களின் இரண்டு வெவ்வேறு பிரிவுகள் நெருங்கினர். அவர்களுக்கு இடையில் ஐம்பது லட்சம் மக்களைக் கொண்ட நகரத்திற்கு அழிவைக் கொண்டுவரக்கூடிய ஒரு பெரிய மோதலுக்கான சாத்தியம் பெரியளவில் இருந்தது," என்று அன்றைய நிலையை விளக்கினார்.

தன்னுடைய மனைவியையும் தேசிய பாதுகாப்பு ஆலோசகரையும் காபூலை விட்டு வெளியேற அப்போது கனி அனுமதித்தார். பின்னர், அவரை பாதுகாப்பு அமைச்சகத்திற்கு அழைத்துச் செல்வதற்கான காருக்காகக் காத்திருந்தார்.

ஆனால் கார் வரவே இல்லை. அதற்கு மாறாக, அதிபருடைய பாதுகாப்புத் தலைவர் அவரிடம் சென்று, அஷ்ரஃப் கனி ஒரு நிலைப்பாட்டை எடுத்தால், "அவர்கள் அனைவரும் கொல்லப்படுவார்கள்," என்று கூறியுள்ளார்.

அதுகுறித்துப் பேசியயபோது, "அவர் எனக்கு இரண்டு நிமிடங்களுக்கு மேல் கொடுக்கவில்லை. கொஸ்ட் நகரத்திற்குப் புறப்படுமாறு என்னுடைய அறிவுறுத்தல்கள் இருந்தன. ஆனால், கொஸ்ட் நகரம் விழுந்துவிட்டதாகவும் ஜலாலாபாத்தும் விழுந்துவிட்டதாகவும் அவர் என்னிடம் கூறினார்.

நாங்கள் எங்கு செல்வோம் என்று எனக்குத் தெரியவில்லை. அங்கிருந்து புறப்பட்டபோதுதான், நாங்கள் ஆப்கனை விட்டு வெளியேறுகிறோம் என்பது தெளிவாகத் தெரிந்தது. எனவே இது உண்மையில் திடீரென நடந்ததுதான்," என்று அஷ்ரஃப் கனி கூறினார்.

அவர் ஆப்கனை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து, கனியை ஆப்கானிஸ்தானில் உள்ள அவருடைய துணைத் தலைவர் அம்ருல்லா சாலே உட்படப் பலர் கடுமையாக விமர்சித்தனர். அம்ருல்லா சாலே அதை "அவமானகரமானது," என்று அழைத்தார்.

லூசி டெளசெட்

பிபிசியின் சர்வதேச தலைமை செய்தியாளர்

தாலிபன்களின் இந்தக் கைப்பற்றும் நடவடிக்கை ஒரே நாளில் முடிந்துவிடவில்லை. ஆனால் ஆகஸ்ட் 15 அன்று அஷ்ரஃப் கனியின் திடீர் ரகசியப் புறப்பாடு ஓர் ஒப்பந்தத்தை முறியடித்துவிட்டதாகப் பலர் வலியுறுத்துகின்றனர்.

எப்படியிருந்தாலும், தாலிபன்கள் ஆதிக்கம் செலுத்துவது உறுதி. ஆனால், "சாகும் வரை போராடுவேன்," என்று மீண்டும் மீண்டும் சபதம் செய்த மனிதரால் உருவாக்கப்பட்ட வெற்றிடம் குழப்பத்தை அதிகப்படுத்தியது. ஆகஸ்ட் 15-ம் தேதியன்று அவர் செய்ததைவிட, முந்தைய ஆண்டுகளில் செய்யாதவற்றுக்காகப் பலர் அவரைக் குறை கூறுகின்றனர்.

அமெரிக்கர்களால், அவர் பலவீனமானவராகக் கையாளப்பட்டார் என்பது உண்மைதான், ஆனால், அவர் அதில் மோசமாகச் செயல்பட்டார்.

அவர் தற்போது அரசியல்வாதியாகத் தெரிவதைவிட, பேராசிரியராகவே பரவலாகக் காணப்படுகிறார். அமெரிக்க அரசியலையும் தாலிபன்களைவிட வேகமாகக் களத்தில் மாறிவந்த சூழ்நிலையையும் அவர் தவறாகப் புரிந்துகொண்டார்.

அவருடைய சமீபத்திய கணக்கு துண்டிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு, நீண்ட காலத்திற்கு நிராகரிக்கப்படும்.

அஷ்ரஃப் கனி பெருமளவிலான பணத்தை எடுத்தார் என்ற குற்றச்சாட்டுகளும் வெளிப்பட்டன். அவர் அதை உறுதியாக மறுத்துள்ளார். சர்வதேச விசாரணையையும் வரவேற்கிறார்.

"நான் திட்டவட்டமாகக் கூற விரும்புகிறேன். நான் நாட்டிலிருந்து எந்தப் பணத்தையும் எடுக்கவில்லை. என்னுடைய வாழ்க்கை முறை அனைவருக்கும் தெரியும். பணத்தை வைத்து நான் என்ன செய்வேன்?" என்று கூறுகிறார்.

மேலும், "சர்வதேச சமூகத்தின் பொறுமை நீடிக்கும் என்று கருதுவது," உட்பட தவறுகள் செய்யப்பட்டிருப்பதை கனி ஒப்புக்கொண்டார்.

எப்படியிருப்பினும், அப்போதைய அதிபர் டொனால்ட் டிரம்பின் கீழ் தாலிபன்களுக்கும் அமெரிக்காவுக்கு இடையில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை அவர் சுட்டிக்காட்டினார். அது ஆகஸ்ட் 15-ம் தேதி நடந்ததற்கு வழிவகுக்கும் நிகழ்வுகளுக்கு வழிவகுத்தது.

"அமைதி நடவடிக்கைக்குப் பதிலாக, நாங்கள் பின்வாங்கும் செயல்முறையைப் பெற்றுள்ளோம். ஒப்பந்தம் செய்யப்பட்ட விதம் எங்களை அழித்துவிட்டது," என்று கனி கூறினார்.

காபூல்
Getty Images
காபூல்

ஒப்பந்த விதிமுறைகளின் கீழ், அமெரிக்கா தன்னுடைய படைகளையும் அதன் கூட்டாளிகளின் படைகளையும் குறைக்க ஒப்புக்கொண்டது. அதோடு, கைதிகளை மாற்றுவதற்கும் ஒப்புக்கொண்டது. அதன் பிறகு, போராளிகளின் குழு ஆப்கன் அரசோடு பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டது.

பேச்சுவார்த்தைகள் பலனளிக்கவில்லை: 2021 கோடையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செப்டம்பர் 11-ம் தேதிக்குள் கடைசி படைகளைத் திரும்பப் பெறுவதாக உறுதியளித்தார். தாலிபன்கள் ஆப்கானிஸ்தான் முழுவதுமாகப் பரவி, நகரத்திற்குப் பிறகு நகரமாக எடுத்துக் கொண்டனர்.

இறுதியில் நடந்தது, "ஒரு வன்முறை சதி. அரசியல் ஒப்பந்தமோ அல்லது மக்கள் ஈடுபட்டுள்ள அரசியல் செயல்முறையோ அல்ல," என்று அஷ்ரஃப் கனி கூறினார்.

கனி காபூலை விட்டு வெளியேறி அதே நாளி, தாலிபன்கள் அதைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தார்கள். அப்போதிருந்து, நாடு ஒரு மனிதாபிமான நெருக்கடியிலும் பொருளாதார நெருக்கடியிலும் தள்ளப்பட்டுள்ளது. அவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் சர்வதேச ஆதரவு அகற்றப்பட்டது நிலைமையை மேலும் மோசமாக்கிவிட்டது.

"சர்வதேச கூட்டாண்மையில்," நம்பிக்கை வைப்பதைப் போல, 3 மாதங்களுக்குப் பிறகு காபூலின் வீழ்ச்சிக்கு வழிவகுத்த சில விஷயங்களுக்குப் பழியைச் சுமக்கத் தயாராக இருப்பதாக கனி கூறுகிறார்.

மேலும், "இருப்பினும் எனது வாழ்க்கைப் பணி அழிக்கப்பட்டது. என்னுடைய மதிப்புகள் மிதிக்கப்பட்டன. இவற்றோடு நான் பலிகடா ஆக்கப்பட்டேன்," என்று கூறினார் அஷ்ரஃப் கனி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
Afghanistan's former president Ashraf Ghani has defended his decision to flee the country. Ashraf Ghani says he flee to prevent the destruction of Kabul.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X