• search

விம்பிள்டன் 2018 : நீங்கள் ஏன் கண்டிப்பாக பார்க்கவேண்டும்? - 5 காரணங்கள்

By Bbc Tamil
FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

  நேற்றைய தினம் (திங்கள் கிழமை) உலகின் பழம்பெரும் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான விம்பிள்டன் சாம்பியன்ஷிப் 2018 போட்டி தொடங்கியது.

  இத்தொடரை கவனிப்பதற்கு டென்னிஸ் ரசிகர்களுக்கு எந்தவொரு ஊக்கப்படுத்துதலும் தேவை இல்லைதான். ஆனால் புல் தரையில் நடக்கும் இப்போட்டித் தொடரில் அப்படி என்னதான் சிறப்பு இருக்கிறது என நீங்கள் கேட்பீர்களே ஆயின், ஐந்து காரணங்களை அடுக்கமுடியும். அவற்றை பார்ப்போமா?

  ரோஜர் ஃபெடரரின் 15-வது வருடம்

  கடந்த 2003-ம் ஆண்டு விம்பிள்டனில் முதன் முறையாக சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் ஃபெடரர் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார். ஆண்கள் டென்னிஸில் புது சகாப்தத்தின் துவக்கமாக அது அமைந்தது.

  பதினைந்து வருடங்களுக்கு பிறகு ஃபெடரர் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுக்கு சொந்தக்காரராக இருக்கிறார். இதில் எட்டு பட்டங்கள் விம்பிள்டனின் பச்சை பசேல் புல் தரையில் வந்தது. ஆண்கள் டென்னிஸில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற சாதனையும், விம்பிள்டன் தொடரில் ஆண்கள் பிரிவில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவர் எனும் சாதனையும் வைத்திருக்கிறார்.

  ரோஜர் ஃபெடரரின் பயணத்துக்கு விம்பிள்டன் ஒரு பாராட்டுரை காணொளியை வெளியிட்டு கௌரவித்திருக்கிறது. இந்த காணொளியை ஃபெடரரின் பேஸ்புக் பக்கத்தில் காணலாம்.

  தொழில்முறை டென்னிஸ் பயணத்தில் இருபதாவது வருடத்தை நிறைவுசெய்ய இருக்கிறார் ஃபெடரர். அவருக்கு 37 வயதாகிவிட்டாலும் விம்பிள்டன் பட்டத்தை ஜெயிக்க நினைக்கும் வீரர்களுக்கு மிகப்பெரும் போட்டியாளராக விளங்குகிறார்.

  விம்பிள்டன்
  BBC
  விம்பிள்டன்

  2. பெரும் ஜாம்பவான்களின் மோதல்

  ரோஜர் ஃபெடரருக்கும் ரஃபெல் நடாலுக்கும் விம்பிள்டன் 2008-ல் டைட்டிலை வெல்ல நடந்த மாபெரும் யுத்தத்தை யாரால் மறக்க முடியும்?

  இவ்விருவரும் மோதிய காவியப் போட்டி நடந்துமுடிந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது என்பதை நம்புவது மிகக்கடினம். அப்போட்டியை ஜான் மேக்கன்ரோ ''உலகில் விளையாடப்பட்ட அதிச்சிறந்த டென்னிஸ் போட்டி'' என விவரித்திருந்தார்.

  மழை காரணமாக விட்டுவிட்டு நடந்த அப்போட்டி ஏழு மணிநேரம் நீண்டது. ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றிருந்த ஃபெடரரை 6-4, 6-4, 6-7(5-7), 6-7(8-10), 9-7 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார் ரஃபெல் நடால்.

  பத்து வருடத்துக்கு பிறகு தனது டென்னிஸ் வாழ்க்கையில் ''மிகவும் உணர்ச்சிவயப்பட்ட போட்டிகளில் முக்கியமான போட்டி அது '' என நடால் குறிப்பிட்டார். நடாலின் டென்னிஸ் வாழக்கை மற்றும் அவரது சொந்த வாழ்க்கையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய போட்டி அது.

  2017-லிருந்து இதுவரை இவ்விருவரும் விளையாடியுள்ள ஆறு கிராண்ட்ஸ்லாம் தொடரில் ஃபெடரரும் நடாலும் தலா மூன்றில் வென்றுள்ளனர். இவ்வருடம் இவ்விருவரும் ஆண்கள் டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தை பிடிக்க தொடர்ச்சியாக கடும்போட்டி போடுகிறார்கள். தற்போது நடால் நம்பர் 1 வீரராக இருக்கிறார்.

  சந்தேகமே வேண்டாம். டென்னிஸ் ரசிகர்களை பொறுத்தவரையில், இவ்வருடம் விம்பிள்டன் இறுதியில் இவ்விருவரையும் பார்க்க வேண்டும் என்பது பெரும் விருப்பமாக இருக்கக்கூடும்.

  3. ஒலிம்பியாவின் அம்மா

  அலெக்சிஸ் ஒலிம்பியா ஒஹானியனை பெற்றெடுத்த பின்னர் ஆல் இங்கிலாந்து கிளப்பில் புல்தரையில் விளையாடத் தயாராகிவிட்டார் செரீனா வில்லியம்ஸ்.

  ஏழுமுறை விம்பிள்டன் பட்டம் வென்ற செரீனா இம்முறை மீண்டும் பிரெஞ்சு ஓபனில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்ல களமிறங்கினார். ஆனால் மார்புத்தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக நான்காவது சுற்றோடு வெளியேறினார்.

  இப்போது போதுமான ஓய்வுக்கு பிறகு செரீனா மீண்டும் கடும் சவால் கொடுக்கத் தயாராகிவிட்டார். ஒலிம்பியாவுடன் டென்னிஸ் களத்தில் நின்றவாறு அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட ஒரு காணொளியில் தனது கனவு குறித்து அவர் பேசியுள்ளார்.

  23 கிராண்ட்ஸ்லாம் வைத்திருக்கும் செரீனா ஏற்கனவே பெண்கள் டென்னிஸில் மார்கரெட் கோர்ட்டின் உலக சாதனையான 24 ஒற்றையர் பட்டங்களை சமன்செய்யும் முயற்சியில் இருக்கிறார்.

  4. பெண்கள் டென்னிஸில் நடக்கும் கடும்போட்டி

  உலக டென்னிஸ் தரவரிசையில் செரீனா 183-வது இடத்துக்கு தள்ளப்பட்டபோதிலும் விம்பிள்டனில் பழைய செயல்திறனை கருத்தில் கொண்டு டைட்டிலை வெல்லக்கூடிய வீரர்களில் ஒருவராக கருதப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளார்.

  செரீனாவைத் தவிர பெண்கள் பிரிவில் முப்பது வயதுக்குட்பட்ட வீராங்கனைகளில் பலரும் ஒற்றையர் பிரிவில் கவனிக்கத்தக்கவர்களாக இருக்கின்றனர்.

  கடந்த வருடம் சாம்பியன் பட்டம் வென்ற கார்பின் முகுராஜா இம்முறை டைட்டிலை வெல்பவர்கள் என கருதப்படும் பட்டியலில் முதல் ஆளாக இருக்கிறார். பிரெஞ்சு ஓபனில் வென்ற சிமோனா ஹலீப், 2011 மற்றும் 2014 தொடர்களில் விம்பிள்டன் வென்ற பெட்ரா க்விடோவா, முன்னாள் உலக நம்பர் 1 வீராங்கனை கரோலினா வோஜ்நியாக்கி மற்றும் வளர்ந்து வரும் அமெரிக்க வீராங்கனை ஸ்லோன் ஸ்டீஃபன்ஸ் ஆகியோர் இவ்வருட விம்பிள்டன் பட்டத்தை வெல்லும் முனைப்பில் இருக்கக்கூடிய முக்கியமான போட்டியாளர்கள்.

  5. அதிர்ச்சி வைத்தியம் தரக்கூடிய வீரர் வீராங்கனைகள்

  ஃபெடெரர் மற்றும் நடால்
  AFP
  ஃபெடெரர் மற்றும் நடால்

  வீனஸ் வில்லியம்ஸ் 38 வயதிலும் டென்னிஸ் விளையாடுவது ஆச்சர்யம் தரக்கூடியது. கடந்த வருடம் இரண்டு கிராண்ட்ஸ்லாம் தொடரில் அவர் இறுதிப்போட்டி வரை வந்தது அற்புதமானது.

  தனது டென்னிஸ் ராக்கெட்டில் மீண்டும் அதுபோன்ற அற்புதங்களை வீனஸ் வில்லியம்ஸால் நிகழ்த்த முடியுமா? உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை மற்றும் ஐந்து கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள வீனஸ் இவ்வருடம் ஆஸ்திரேலிய மற்றும் பிரெஞ்சு ஓபனில் முதல் சுற்றோடு வெளியேறினார்.

  மேலும் மரியா ஷரபோவா எப்படி?

  ஊக்கமருந்து காரணமாக தடை செய்யப்பட்டு மீண்டும் விளையாட வந்த பிறகு தனது வெற்றிப் பாதையில் திரும்ப இந்த ரஷ்ய வீராங்கனை தொடர்ந்து முயற்சிக்கிறார். இதுவரை மூன்று கிராண்ட் ஸ்லாம் தொடரில் விளையாடிவிட்டு அவரால் இன்னும் ஒருமுறை கூட அரை இறுதி போட்டிக்கு கூட தகுதி பெற முடியவில்லை.

  ஆண்கள் பிரிவில் நோவாக் ஜோகோவிக் முழங்கை எலும்பு அறுவை சிகிச்சைக்கு பின்னர் இன்னமும் தடுமாற்றத்தில் இருக்கிறார். மற்றொரு பக்கம் ஆண்டி முர்ரே இடுப்பு அறுவை சிகிச்சை காரணமாக ஆஸ்திரேலிய மற்றும் பிரெஞ்சு ஓபனில் பங்கேற்காததால் ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் 156 வது இடத்தில் இருக்கிறார்.

  ஆனால் இந்த சாம்பியன்களில் யாரையும் நிராகரிக்கமுடியாது. ஏனெனில் அவர்கள் சொல்படி, புற்கள் பச்சை நிறம் கொண்டது. அது புத்துயிர் பெறுவதற்கான வலிமையை தரவல்லது.

  பிற செய்திகள்:


  BBC Tamil
  English summary
  இத்தொடரை கவனிப்பதற்கு டென்னிஸ் ரசிகர்களுக்கு எந்தவொரு ஊக்கப்படுத்துதலும் தேவை இல்லைதான். ஆனால் புல் தரையில் நடக்கும் இப்போட்டித் தொடரில் அப்படி என்னதான் சிறப்பு இருக்கிறது?

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற