75 ஆண்டு கால வரலாற்றில்.. பாகிஸ்தான் பிரதமர்களாக இருந்தவர்கள் யார்? ராணுவ ஆட்சி முதல் இம்ரான் வரை!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடந்த 75 ஆண்டுகால வரலாற்றில் ஒரு பிரதமர் கூட முழுமையாக தங்களது பதவிக்காலத்தை முடித்ததில்லை.
Recommended Video
பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் நிர்வாக திறமையின்மையினால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதையடுத்து பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அதன் மீதான வாக்கெடுப்பு தள்ளிக் கொண்டே போன நிலையில் நள்ளிரவு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இம்ரான் கான் ஆட்சி கவிழ்ந்தது. நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் வெளியேற்றப்பட்ட முதல் பிரதமர் இம்ரான் கான்.

2018 இல் ராணுவத்தின் ஆதரவு
இம்ரான் கான் கடந்த 2018ஆம் ஆண்டு ராணுவத்தின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்தவர். ஆனால் கொரோனாவால் பொருளாதார வீழ்ச்சி, பாகிஸ்தானை ஊழலற்ற நாடாக மாற்றுவேன் என வாக்குறுதியை நிறைவேற்றாதது உள்ளிட்டவைகளால் இம்ரான் கான் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டது.

75 ஆண்டு கால வரலாற்றில்
பாகிஸ்தானின் 75 ஆண்டு கால வரலாற்றில் இதுவரை ஒரு பிரதமர் கூட முழுமையாக தங்களது 5 ஆண்டு கால பதவியை முடித்ததில்லை. இது வரை ஆட்சி செய்தவர்களில் 3 பிரதமர்கள் மட்டுமே 4 ஆண்டு பதவிக்காலத்தை முடித்துள்ளார்கள். அது போல் இதுவரை தேர்வு செய்யப்பட்ட சட்டசபைகளில் இரு சட்டசபைகள் மட்டுமே 5 ஆண்டுகளை நிறைவடைந்தது.

யார் ஆட்சி
கடந்த 1977ஆம் ஆண்டு முதல் 1988 ஆம் ஆண்டு வரை ஜெனரல் ஜியா தலைமையில் பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி நடைபெற்றது. அவர் விமான விபத்தில் இறந்ததை அடுத்து 1988 ஆம் ஆண்டு பெனசீர் பூட்டோ பிரதமராக பதவியேற்றார். அவர் இரு ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்தார். இதையடுத்து 1990 ஆம் ஆண்டு நவாஸ் ஷெரீப் தலைமையிலான ஆட்சி அமைந்தது.

ராணுவ ஆட்சி
அவரது ஆட்சியும் 3 ஆண்டுகளே நீடித்தது. இதையடுத்து மீண்டும் பிரதமரானார் பெனசீர் பூட்டோ. இவரது ஆட்சிக்காலம் 1993 ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டு வரை நீடித்தது. பின்னர் மீண்டும் நவாஸ் ஷெரீப் ஆட்சிக்கு வந்தார். அவர் 1997 முதல் 1997 வரை ஆட்சியில் இருந்தார். இதையடுத்து 1999- 2007 ஆம் ஆண்டு வரை ஜெனரல் பர்வேஸ் முஷாரப் தலைமையில் ராணுவ ஆட்சி நடந்தது.

4 ஆண்டுகள் பதவியிலிருந்த இம்ரான்
இவருக்கு அடுத்து 2008 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை யூசுப் ராஜா கிலானியும் 2012 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை ராஜா அஷ்ரப்பும் ஆட்சி செய்தனர். 2013 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை நவாஸ் ஷெரீப்பும் 2017ஆம் ஆண்டு முதல் 2018ஆம் வரை ஷாஹித் காகன் அப்பாசியும் ஆட்சியில் இருந்தனர். இவர்களுக்கு அடுத்து 2018 ஆம் ஆண்டு இம்ரான் கான் பிரதமரானார். தற்போது அவரும் 4 ஆண்டுகளிலேயே ஆட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.












Click it and Unblock the Notifications