வீட்ல விசேஷம் எதுவும் உண்டா? புதுமண தம்பதிகளை நச்சரிக்கும் சீனா.. காரணத்தை கேட்டா ஆடிப்போய்டுவீங்க!
பீஜிங்: சீனாவில் மக்கள் தொகை விகிதம் குறைந்து வருவதால், அந்நாட்டில் உள்ள புதுமண தம்பதிகளின் விவரங்களை சேகரித்து அவர்களிடம் 'வீட்டில் ஏதும் விசேஷம் உண்டா' என்று சொல்லாமல் சொல்லும் வகையில் அதிகாரிகள் கேட்டு வருகின்றனர்.
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா தான் உள்ளது. உலக பரப்பளவில் 3-வது இடம் வகிக்கிறது.
சீனாவில் கடந்த 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி ஒட்டு மொத்த மக்கள் தொகை 141.24 கோடியாக இருந்தது.

ஒரு குழந்தை மட்டுமே பெற..
சீனாவில் மக்கள் தொகை மிதமிஞ்சி சென்றதால் அங்கு தம்பதிகள் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற விதி இருந்தது. அதையடுத்து 2 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்கும் வகையில் 2016 ஆம் ஆண்டு விதியில் திருத்தம் கொண்டு வந்தது. எனினும், பிறப்பு விகிதம் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. இதனால் பதறிப்போன சீனா கடந்த ஆண்டு 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தியது.

பிறப்பு விகிதம் சரிவு
மேலும் தம்பதிகள் 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சலுகைகளையும் சீனா அறிவித்ததாக சொல்லப்படுகிறது. பிறப்பு விகிதம் சரிந்து கொண்டே சென்றால் மக்கள் தொகை 2025- ஆம் ஆண்டிற்குள் குறையும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டதால் இந்த பெரிய மாற்றத்தை சீனா கொண்டு வந்தது.

எப்போது குழந்தை பிறக்கும்
இந்த நிலையில் தற்போது சீனாவில் புதிதாக திருமணம் செய்தவர்களிடம் 'உங்களுக்கு எப்போது குழந்தை பிறக்கும்' என்று அதிகாரிகள் கேட்டு வருவதாக அங்குள்ள மக்கள் தெரிவித்து வருகின்றனர். சீன அதிபர் ஜி ஜின்பிங் ஒரு கூட்டத்தில் பேசும்போது, "சீனாவில் மக்கள் தொகையை அதிகரிக்க குறிப்பாக பிறப்பு விகிதத்தினை அதிகரிக்க புதிதாக ஒரு கொள்கை அமைக்கப்படும்" என்று கூறினார்.

கர்ப்பமாக இருக்கிறீர்களா? என்று கேட்டனர்
அதன்படி தான் தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சீன பெண் ஒருவர் தனது சமூக வலைத்தள பதிவில், ''எனக்கு சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. சமீபத்தில் உள்ளூர் அதிகாரிகள் என்னை தொடர்பு கொண்டனர். அவர்கள் என்னிடம், நீங்கள் இப்போது கர்ப்பமாக இருக்கிறீர்களா? என்று கேட்டனர்'' என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவை அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட சில நொடிகளிலேயே அவருக்கு பதில் தெரிவித்து அதிக கருத்துக்கள் வரத்தொடங்கின.

ஏன் நீங்கள் இன்னும்..
அந்த பதில்கள் பெரும்பாலும் என்னிடமும் இதே போல உள்ளூர் அதிகாரிகள் கேள்விகள் கேட்டனர் என்றுதான்... அதிலும் ஒரு பெண், எனக்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் திருமணம் நடந்தது. ஆனால் ஏன் நீங்கள் இன்னும் கர்ப்பமாகவில்லை என்று என்னிடம் அதிகாரிகள் கேட்டதாக பதிவிட்டுள்ளார். இவ்வாறு பலரும் அந்த பதிவில் பதிவிட்டு வந்ததால் அந்த சமூக வலைத்தள பதிவு நீக்கப்பட்டது.

ஒரு ஆண்டுக்குள் குழந்தை பெறவேண்டும்
எனினும் இன்னொரு பெண் இது தொடர்பாக கூறுகையில், "சுகாதார மைய பெண் அதிகாரிகள் என்னை தொடர்புகொண்டனர். அப்போது அவர்கள் திருமணம் முடிந்த ஒரு ஆண்டுக்குள் பெண்கள் கர்ப்பமாகியிருக்க வேண்டும் என அரசு விரும்புவதாக தெரிவித்தனர்" என்று கூறினார். சீனாவில் இன்னும் சில ஆண்டுகளில் மக்கள்தொகை குறைந்துவிடும் என்ற அச்சத்தில் தற்போது குழந்தைகள் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க இவ்வாறு செய்துவருவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications