For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கையின் மனித உரிமை மீறல் மீதான புதிய தீர்மானம்: ஐநாவில் இன்று வாக்கெடுப்பு

By Shankar
Google Oneindia Tamil News

ஜெனீவா: இலங்கையில் இறுதி யுத்தத்தின்போது நடந்த போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தும் புதிய தீர்மானம் இன்று வாக்கெடுப்புக்கு விடப்படுகிறது.

இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு போரின் இறுதிக் கட்டத்தில் மனித இனம் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத பேரவலத்தை தமிழர்கள் அனுபவித்தனர்.

ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர். மே 17-ம் தேதி மட்டும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களை ஒரு சின்ன நிலப்பரப்புக்குள் அடைத்து மிகக் கொடூரமாக கொன்றழித்தது சிங்கள ராணுவம். உலகில் வேறு எங்குமே, எந்தக் காலகட்டத்திலும் நடந்திராத இனப்படுகொலை இது என தமிழர்கள் மனம் குமுறி, கண்ணீர் விட்டாலும், சர்வதேச நாடுகள் சாவகாசமாகத்தான் இந்த விஷயத்தைக் கையில் எடுத்தன.

Latest UNHRC draft resolution calls for probe into Sri Lanka violations

உள்நாட்டுப்போர் முடிந்து 5 ஆண்டுகளாகியும் தமிழ் மக்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. பெரும்பாலான மக்கள் முள்வேலிகளுக்கு மத்தியில் வாழும் நிலைதான் உள்ளது. நல்லிணக்க நடவடிக்கையும் குறிப்பிடத் தகுந்த அளவுக்கு எடுக்கப்படவில்லை. சிங்கள மக்களுடன் தமிழ் மக்கள் சம மதிப்பு, சம நீதியுடன் வாழும் நிலை வரவில்லை. தமிழ்ப் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை தொடர்கிறது.

இந்த நிலையில் இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக நம்பத் தகுந்த, சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஜெனீவாவில் கூடியுள்ள ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் தாக்கல் செய்துள்ளன.

இந்த தீர்மானத்தை இலங்கை அதிபர் ராஜபக்சே ஏற்கனவே நிராகரித்து விட்டார்.

இலங்கை பிரச்சினையில் ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில், ஐ.நா. தூதர் நவி பிள்ளை நேற்று அறிக்கை அளித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், "இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்து கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்போது நடந்த போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்களின் தீவிரத்தை நாம் நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும். நடந்த வன்முறைகள் குறித்து அரசு பல்வேறு வழி வகைகள் மூலம் விசாரணை நடத்தினாலும், பாதிக்கப்பட்ட மக்களிடமும், சாட்சிகளிடமும் நம்பிக்கை ஏற்படுத்துகிற அளவுக்கு அவை சுதந்திரமானவையாக இல்லை," என குற்றம் சாட்டினார்.

நம்பத்தகுந்த சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அமெரிக்க தீர்மானம் இன்று 47 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா.மனித உரிமை கவுன்சிலின் பரிசீலனைக்கு வருகிறது. விவாதத்துக்கு பின்னர் இன்று ஓட்டெடுப்புக்கு விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா மவுனம்

அதே நேரத்தில் இதில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து எந்த தகவலும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

இதற்கிடையே ஐ.நா.வுக்கான இலங்கை தூதர் ரவிநாத ஆர்யசிங்கா, இலங்கை போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்ற நவிபிள்ளையின் வேண்டுகோளை நிராகரித்தார். இது குறித்து அவர் கூறுகையில், "இது முன்கூட்டியே திட்டமிட்டு உருவாக்கப்பட்ட தீர்மானம். அரசியல் நோக்கம் கொண்டது. இலங்கை அரசு மீது தவறான அபிப்பிராயத்துடன் உருவாக்கப்பட்ட ஒருதலைப்பட்சமான தீர்மானம்," என்றார்.

தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர் சம்பந்தன், இலங்கை போர்க் குற்றங்கள் தொடர்பாக சுதந்திரமான, பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வரவேற்றுள்ளார். ஆனால் தமிழர் அமைப்புகள் பலவும் இது பலவீனமான, பயனற்ற தீர்மானம் என்று வர்ணித்துள்ளனர்.

English summary
The latest draft of the US-sponsored rights resolution tabled at the UNHRC against Sri Lanka over its alleged rights abuses during the war with the LTTE calls for a comprehensive and independent probe, media here said today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X