
300 அடி அகலம்.. 60 அடி ஆழம்.. திடீரென தோன்றிய ராட்சத பள்ளம்.. என்ன காரணம்.. திகைப்பில் மக்கள்!
மெக்சிகோ: மெக்சிகோவின் பியூப்லா மாகாணத்தின் சாண்டா மாரியா என்ற பகுதியில் உள்ள விளைநிலத்தில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். அந்த பள்ளம் சுமார் 300 அகலத்திலும், 60 அடி ஆழம் கொண்டதாகவும் வட்ட வடிவில் காணப்படுகிறது.
நீங்கள் பார்க்கும் இந்த பள்ளம், வானத்தில் இருந்து பறந்து வந்து விண்கலம் மோதியதன் காரணமாக உருவான பள்ளம் போல தோற்றமளிக்கிறது அல்லவா? இந்த பிரம்மாண்டமான பள்ளம் மெக்சிகோவின் பியூப்லா மாகாணத்தின் சாண்டா மாரியாவில் ஏற்பட்டுள்ளது.
இந்த பள்ளம் திடீரென விளைநிலங்களில் உருவாகி அருகிலுள்ள வீடுகளையும் உள்ளே இழுத்து வாரிசுருடடுமோ என்று அச்சுறுத்தும் வகையில் காணப்படுகிறது.

வளர்ந்த பள்ளம்
பியூப்லா மாகாணத்தின் சாண்டா மாரியாவில் சுமார் 300 அடி அகலத்திலும், 60 அடி ஆழத்திலும் உள்ள பள்ளம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. கடந்த வாரம் சிறிய அளவில் தோன்றிய பள்ளம், நாளாக நாளாக பெரிய குளம் போல் மாறியது. இந்த விஷயத்தை கேள்விப்பட்டு மெக்ஸிகோ அரசாங்க அதிகாரிகள் அந்த இடத்தைப் பார்வையிட்டனர்.

அருகில் போக வேண்டாம்
அப்போது அவர்கள் ஆய்வு செய்த போது நிலத்தடி நீரால் குளம் போல் காட்சிய அளிக்கும் பள்ளம் சுமார் 60 அடி ஆழம் வரை இருப்பதாக மதிப்பிட்டுள்ளனர். பள்ளத்தின் அருகே செல்ல வேண்டாம் என்று உள்ளூர் மக்களை எச்சரித்துள்ளனர்.

காயமில்லை
இந்த பள்ளம் சனிக்கிழமையன்று தோன்றியபோது, அது சில மீட்டர் அளவு மட்டுமே இருந்தது, ஆனால் அதன் பின்னர் கிட்டத்தட்ட 70,000 சதுர அடி விவசாய நிலத்தை விழுங்கி விஸ்வரூபம் எடுத்தது. இதுவரை யாரும் காயமடையவில்லை. அருகிலுள்ள வீட்டில் வசித்து வந்த குடும்பம் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக அமெரிக்கா செய்தி நிறுவனமான நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது.

அருகில் சென்று பார்த்தேன்
அந்த பள்ளத்தின் அருகே உள்ள வீடுகளில் குடியிருப்பவர்களில் ஒருவரான மாக்தலேனா, சனிக்கிழமை காலை 6 மணிக்கு, இடி இடிப்பது போன்ற சத்தம் கேட்டது. ஆனால் பூமியில் பள்ளம் ஏற்பட்டதால் ஏற்பட்ட சத்தம் என்று நாங்கள் நினைக்கவில்லை, பின்னர் என் மாமியாரும் அந்த சத்தத்தை உணர்ந்தார்கள், நான் நேராக அந்த இடத்திற்கு சென்று பார்த்தேன். அங்கு திடிரென பெரிய பள்ளம் உருவாகி தண்ணீர் கொப்பளித்துக்கொண்டிருப்பதை பார்த்து நான் பீதியடைந்தேன்.

வீடுகள் பாதுகாப்பில்லை
இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு ஆய்வு செய்த அதிகாரிகள் நீண்ட காலத்திற்கு உங்கள் வீடு பாதுகாப்பாக இருக்க வாய்ப்பில்லை என்று கூறினார்கள். இதை கேட்டு நான் உடைந்து போனேன். நிறைய முயற்சி செய்து பல தியாகங்கள் செய்து வீட்டைக் கட்டினோம். ஆனால் இப்படியாகிவிட்டது என்றார்.

எப்படி உருவானது பள்ளம்
அந்த பகுதி உள்ளூர்வாசிகள் விவசாய நிலத்தின் அடியில் ஒரு பெரிய குளம் இருந்தது என்று அவர்கள் நம்புகிறார்கள் அதை "ஜாகே" என்று தங்கள் மொழியில் அழைக்கிறார்கள்.
இந்நிலையில் பள்ளத்திற்கான காரணம் குறித்து அமெரிக்க வியியல் ஆய்வு (யு.எஸ்.ஜி.எஸ்) மையம் கூறுகையில், நிலத்தடி நீர் பூமிக்கு அடியில் செல்லும்போது நில மேற்பரப்பிற்கு அடியில் பாறை அரிப்பு உட்பட பல காரணங்களால் இதுபோன்ற பள்ளங்கள் நிகழலாம். பாறை அரிப்பு திடீரென பூமிக்கு அடியில் வெற்றிடத்தை உருவாக்குவதால் பள்ளம் ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளது.