For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உழவர் காப்போம் உழவு காப்போம்.. நியூஜெர்சி தமிழர்களுக்கு ’மொய்விருந்து’ அழைப்பு!

By Shankar
Google Oneindia Tamil News

ட்ரெண்டன்(யு.எஸ்): தமிழக விவசாயிகளுக்காக போராட்டங்கள் நடத்தி வந்த அமெரிக்கத் தமிழர்கள், தாமாக முன்வந்து களப்பணியிலும் இறங்கி விட்டார்கள்.

ஏரி புணரமைப்பு, விவசாயிகளுக்கு நிவாரண உதவி, இயற்கை விவசாய பயிலரங்கம் என பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த வண்ணம் உள்ளனர்.

நியூஜெர்சி மாநிலத்தில் வசிக்கும் தமிழர்கள், மொய்விருந்து நடத்தி தமிழக விவசாயிகளுக்கு உதவி செய்ய முன்வந்தார்கள். அது குறித்து அறிக்கை மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

Moi Virundhu in USA to save Tamil farmers

ஆங்கிலேயர் போன பிறகும் அடிமையா?

"காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும்" என்றான் அந்த முண்டாசுக் கவி பாரதி அன்று, நம் நாடு ஆங்கிலேயர்க்கு அடிமையாக இருந்த போது.

இன்றோ பாரதி கனவு நனவாகியும், காணி நிலமிருந்தும் சுதந்திரத் தமிழ் நாட்டில் தண்ணீர்ப் பஞ்சத்தால் குறு நில விவசாயி இயற்கையுடனும், படைத்த ஆண்டவனிடமும், ஆளும் அரசாங்கத்திடமும், மன்றாடி போராடி மாய்ந்து கொண்டிருக்கிறான்.

வறட்சியினால் விவசாயக் குடும்பங்கள் பஞ்சத்தில் வாடுகின்றன.
நீர் வளத்தில் செழித்த வேளாண்மை நிலங்கள் அனைத்தும் நீரில்லாமையாலும், அயல் நாட்டு விதைகளின் இறக்குமதியாலும்,

போதுமான உரங்களும், சத்துகளும் இல்லாததாலும், தரிசு நிலமாக மாற, விவசாயிகளின் தற்கொலைகளும், மாரடைப்பு, ரத்த அழுத்த இறப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

கடன் வாங்கி விதை விதைத்த விவசாயிகள், போட்ட விதை முளைக்காமல் மனம் உடைகின்றனர். வாங்கிய கடனைக் கட்ட வழியின்றி திணறுகின்றனர். பெரும்பாலும் மழையில்லாமல் தவிக்கின்றனர்.

என்றாவது மழை பெய்தாலும், அந்த நீரை சேகரிக்க வழியின்றி வலியுறுகின்றனர். ஆறுகள், ஏரிகள், குளங்கள் எல்லாம் வற்றிப் போக, முளைத்த பயிர் வறட்சியினால் கருகிப் போக, உயிர் உடைந்து வாழ வழியின்றி இறக்கின்றனர்.

பல நாட்கள் நிலத்தை வேர்வை சிந்தி உழுது, பயிர் செய்து பராமரிப்பவரின், பிள்ளைகள் பட்டினியில் வாடுகின்றனர். பள்ளி செல்ல வழியின்றி சிதைகின்றனர். எத்தனையோ விவசாயக் குடும்பங்கள் தலைவனை இழந்து துடிக்கின்றனர்.

ஆளும் அரசாங்கமோ குறுநில விவசாயிகள் வேளாண்மைக்கு வாங்கிய வங்கிக் கடன்களை மன்னிக்க மறுக்கிறது. தனியாரிடம் வாங்கிய கடன் தொல்லைகளால் விவசாயக் குடும்பங்கள் நலிந்து போகின்றன.

நமக்கு அன்னமிட்டு வளர்த்த பூமியில் நம் விவசாயிகள், அழிவதை கண்டும் காணாதது போல, நாம் மட்டும் வயிறு முட்ட உண்டு, மகிழ்ந்து, நிம்மதியாக உறங்க இயலுமா? இயலவே இயலாது. ஏதோ நம்மால் முடிந்த சிறு உதவிகளை நாம் நம் தாய் மண்ணுக்கு செய்வது நம் அனைவரின் தலையாயக் கடமை அல்லவா?

"ஒன்று கூடினால் உண்டு வாழ்வு"

வாருங்கள் ஒன்று கூடுவோம்
நமக்கு அன்னமிடும் விவசாயிகளைக் காப்போம்
நம் தமிழ் மண்ணில் விவசாயத்தை மீட்போம்

Moi Virundhu in USA to save Tamil farmers

இவ்வாறு அந்த அறிக்கையில், நியூஜெர்சி வட்டார தமிழர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

கிராமியத் திருவிழா

மொய்விருந்து மே 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, வெஸ்ட் விண்ட்சர் அருகில் 31 Allens Road ல் காலை 11 மணி முதல் நடைபெற உள்ளது

மொய்விருந்துடன் கிராமியத் திருவிழாவாகவும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பல்லாங்குழி, தாயம், கோலிக்குண்டு, பாண்டி, ஆடு புலி ஆட்டம், கோ கோ, கொல கொலயா முந்திரிக்கா, பம்பரம், கண்ணாமூச்சி , உறியடித்தல், பின்னல் கோலாட்டம் என பாரம்பரிய விளையாட்டுகள் உண்டு.

முளைப்பாரி, அம்மன் ஊர்வலம், கும்மி என கிராமிய விழா அம்சங்கள் அனைத்தும் இடம் பெறுகின்றன

பறையிசை, ஒயிலாட்டம், கிராமியப் பாடல்கள் என நாட்டுப்புற கலைகள் ஒருபுறம் இடம் பெற, இன்னொரு பக்கம் டீக்கடை, சுக்கு மல்லி காப்பி, கம்மங்கூழு, பணியாரம் மற்றும் பெட்டிக்கடை களை கட்ட உள்ளது.

நீர் மோர், பானாக்காரமும் உண்டு. பலூன் கடையுடன், பீடாக்கடையும் இருக்கு.

மொய் விருந்தில் வசூலாகும் தொகையைக் கொண்டு தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குடும்பங்களுக்கு நாட்டுப் பசு மாடுகள் வழங்க உள்ளார்கள்.

மேற்கொண்டு கிடைக்கப் பெறும் தொகையைக் கொண்டு தனியாரிடம் கடன் வாங்கி அவஸ்தைப்படும் விவசாயிகளின் கடனை திருப்பிச் செலுத்தவும் உள்ளார்கள்.

சுமார் 200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். உணவு சமைக்கும் பணிகளையும் இந்த குழுவினரே செய்ய உள்ளார்கள்.

மொய் விருந்தில் பற்றிய தகவல்கள், நன்கொடை செலுத்தும் முறை உள்ளிட்ட மேலதிக தகவல்களை www.moivirunthu.org என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

English summary
New Jersey based Tamils are organizing traditonal MoiVirundhu, to raise money for supporting Tamil Nadu farmers. They are sponsoring native cow affected families and also planning to pay off private loans for few farmers..
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X