For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியாவில் தனி மனித சுதந்திரம், உரிமைகள், வேற்றுமைகள் மதிக்கப்படுகின்றன: லண்டனில் பிரதமர் மோடி

By Mathi
Google Oneindia Tamil News

லண்டன்: இந்தியாவில் தனி மனித சுதந்திரம், உரிமைகள் மதிக்கப்படுகின்றன; வேற்றுமைகளை நாங்கள் கொண்டாடி ஒற்றுமையாக இருக்கிறோம் என்று லண்டன் நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

3 நாட்கள் பயணமாக இங்கிலாந்து சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று பேசியதாவது:

Narendra Modi addresses British parliament

நவீன இந்தியாவை உருவாக்கிய பிரதமர்களான ஜஹவர்லால் நேரு தொடங்கி மன்மோகன்சிங் வரை இங்கிலாந்தின் ஜனநாயக விழுமிய கதவுகளின் வழியே பயணித்தார்கள். இருநாடுகளுக்கும் மிகவும் நெருக்கமான உறவு இருந்து வருகிறது.

இந்தியாவில் முதலீடு செய்துள்ள நாடுகளில் சிங்கப்பூர், மொரிஷியஸைத் தொடர்ந்து 3வது பெரிய நாடாக இங்கிலாந்து இருக்கிறது. இங்கிலாந்தில் வெளிநாட்டு நேரடி முதலீட்டங்களில் 3வது இடத்தில் இந்தியா.

இதர ஐரோப்பிய ஒன்றியத்தை ஒப்பிடுகையில் பிரிட்டனில்தான் இந்தியர்கள் அதிக முதலீடு செய்துள்ளனர். இதற்கான சூழ்நிலை இங்கிலாந்தில் உகந்ததாக இருக்கிறது. இந்தியாவின் டாடா நிறுவனம் இந்த நாட்டின் மிகப் பெரிய தனியார் நிறுவனமாக இருந்து வருகிறது.

இந்திய மாணவர்களின் சிறப்புத் தேர்வாக இங்கிலாந்து இருக்கிறது. தகவல் தொழில்நுட்ப பயிற்சிக்காக 1000 பிரிட்டிஷ் மாணவர்களை இந்தியாவுக்கு அழைத்துள்ளது இந்திய நிறுவனம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அறிவியல், தொழில்நுட்பத் துறையில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுகிறோம்.

நமது குழந்தைகள் பாதுகாப்பாக வீடு திரும்புவதற்காக நமது நாடுகளின் பாதுகாப்புத் துறை இணைந்து செயல்படுகிறது; சைபர் ஸ்பேஸ் அச்சுறுத்தல்களில் இருந்தும் நமது குழந்தைகளைப் பாதுகாக இணைந்து செயல்படுகிறோம். நடப்பாண்டில் மட்டும் இந்தியா- இங்கிலாந்து ராணுவம் 3 கூட்டு பயிற்சிகளை மேற்கொண்டிருக்கிறது.

சர்வதேச அரங்குகளில் இந்தியாவை உயரிய இடத்துக்கு கொண்டு செல்வதற்கான ஆதரவை இங்கிலாந்து வழங்கி வருகிறது. நமது இருநாடுகளும் ஜனநாயக நாடுகள்; வலிமையான பொருளாதாரத்தைக் கொண்டவை.

உலக நாடுகளின் புதிய நம்பிக்கையாக இந்தியா இருந்து வருகிறது. இந்தியாவில் 125 கோடி மக்கள் உள்ளனர். இவர்களில் 80 கோடிப் பேர் 35 வயதுக்குட்பட்டவர்கள்.

எங்களது அரசாங்கத்தில் வெளிப்படைத் தன்மையும் பொறுப்பேற்றலும் இருக்கிறது. முடிவுகள் எடுப்பதில் மிக திடமாக இருக்கிறோம். எங்கள் தேசம் செல்போன்களால் இணைக்கப்பட்டுள்ளது. மக்களுக்கும் அரசுக்கும் இடையேயான பரிமாற்றத்துக்கு டிஜிட்டல் இந்தியா திட்டத்தை உருவாக்கியுள்ளோம்.

உலக நாடுகள் முழுவதும் இருந்து இந்தியாவுக்கு முதலீடு வந்து குவிகிறது. கோடிக்கணக்கானோருக்கான வங்கிக் கணக்குகளை உருவாக்கிக் கொடுத்துள்ளோம். எங்களது வளர்ச்சி என்பது ஆண்டுதோறும் 7.5% அருகே இருக்கிறது.

அனைத்து தரப்பு மக்களின் தனிமனித சுதந்திரம், உரிமைகளை மதிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.. நாங்கள் வேற்றுமையை கொண்டாடுகிறவர்களாக இருக்கிறோம். நம்பிக்கைகளை மதித்து சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்டியுள்ளோம். இதுதான் எங்களது அரசியல் சாசனம்... எதிர்காலத்துக்கான அடிப்படையும் கூட...

நாங்கள் அதிக முதலீடுகளை எதிர்பார்க்கிறோம்... சேவை துறையில் நாங்கள் புதிய கதவுகளை திறந்து வைத்துள்ளோம். பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத் துறையில் இருநாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும். மரபுசாரா மற்றும் அணுசக்தித் துறையில் இருநாடுகளும் கைகோர்த்து செயல்பட வேண்டும்.

டிஜிட்டல் உலகத்தின் எதிர்கால வாய்ப்புகளை இருநாடுகளும் உணர வேண்டும். நமது இளைஞர்கள் பரஸ்பரம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்.

ஐ.நா. சபை, காமன்வெல்த், ஜி-20 நாடுகள் மூலமாக நமது நாடுகளிடையேயான உறவை பலப்படுத்த வேண்டும். தற்போதைய உலக ஒழுங்கானது நிலைத்தன்மை அற்றதாக இருக்கிறது. அச்சுறுத்தல்கள் எந்த நேரத்திலும் நமது நாட்டின் கதவுகளைத் தட்டக் கூடியதாக இருக்கிறது.

இந்த சவால்களையும் அகதிகள் விவகாரத்தையும் எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. பயங்கரவாதமும் அதி தீவிரவாதமும் மிகப் பெரிய அச்சுறுத்தல்களாக இருக்கின்றன. பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுவதில் உலக நாடுகள் ஒற்றை குரலில் உரத்து பேச வேண்டும்.

சர்வதேச பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளுக்கான வழிமுறைகளை எந்தவித தாமதமும் இல்லாமல் ஐ.நா. மூலமாக மேற்கொள்ள வேண்டும். இத்தகைய பயங்கரவாதிகள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். அதேபோல் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கிற நாடுகளையும் நாம் தனிமைப்படுத்தி ஒதுக்க வேண்டும்.

அமைதியான, நிலையான அரசுகளைக் கொண்ட இந்திய பெருங்கடல் பிராந்தியம்தான் சர்வதேச வர்த்தகத்துக்கு தேவை. எதிர்காலத்தில் ஆசிய- பசிபிக் பிராந்தியம் நாம் அனைவருக்கும் முக்கியமானதாக இருக்கும். மேற்கு ஆசியா மற்றும் வளைகுடா நாடுகளில் நமது நாடுகளின் பங்களிப்பு மிக அதிகம்.

ஆப்கானிஸ்தானில் அச்சுறுத்தல் அற்ற ஒரு தேசம் உருவாக வேண்டும் என விரும்புகிறோம். ஆப்பிரிக்காவைப் பொறுத்தவரை பல சவால்களைக் கொண்டிருக்கிறது. இந்தியா தற்போதுதான் ஆப்பிரிக்கா உச்சி மாநாட்டை நடத்தி உள்ளது. மொத்தம் 55 நாடுகளின் 42 தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

மரபுசாரா எரிசக்தி மூலம் 175 கிலோவாட் மின் உற்பத்தியை 2022ஆம் ஆண்டுக்குள் எட்ட வேண்டும் என்பது இந்தியாவின் இலக்கு. அதேபோல் சூரிய மின்சக்தி உற்பத்திக்கான சர்வதேச கூட்டணி ஒன்று அமைய வேண்டும்.

நமது இருநாடுகளும் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும்; நமது நாடுகளின் முன்னேற்றத்துக்குத் தடையாக உள்ள முட்டுக்கட்டைகளைத் தகர்க்க வேண்டும்.

லண்டனில் அண்ணல் அம்பேத்கர் வாழ்ந்த இல்லம் இருக்கிறது. அம்பேத்கரின் 125வது பிறந்த ஆண்டை கொண்டாடி வருகிறோம்.. அவர் அரசியல் சாசனம் மற்றும் நமது நாடாளுமன்ற ஜனநாயக சிற்பி மட்டுமல்ல.. அடித்தட்டு ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக பாடுபட்டவர்... அனைத்து மக்களுக்கான சமூக நீதிக்காக போராடியவர்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

English summary
PM Modi addressed the British Parliament on Thursday as a part of the 3 day visit to UK focused on trade deals and connecting with the diaspora.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X