ஒரு வழியாக தடுப்பூசி எடுத்துக்கொண்ட புதின், ஆனால்... சஸ்பென்ஸ் வைக்கும் ரஷ்யா.. வேற லெவல் காரணம்
மாஸ்கோ: ரஷ்யா அதிபர் புதின் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் இருப்பினும் அவர் எந்த தடுப்பூசியை எடுத்துக்கொண்டார் என்பதை அறிவிக்க ரஷ்ய அரசு மறுத்துவிட்டது.
கடந்த ஆண்டு கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தபோது, பல்வேறு நாடுகளும் கொரோனா தடுப்பூசி குறித்த ஆய்வுப் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வந்தன. அப்போது கடந்த ஆகஸ்ட் மாதம் யாரும் எதிர்பார்க்காத வகையில் தடுப்பூசிக்கு அவசரக்கால ஒப்புதல் வழங்கியது ரஷ்யா.
புது சூறாவளி.. 'அதிர' வைக்கும் 'ஜோல்னா' பை வேட்பாளர்.. டிடிவிக்கு எகிறும் 'பிபி'
ரஷ்யாவின் முதல் விண்கலத்தின் பெயரான ஸ்புட்னிக் என்பதைக் குறிக்கும் வகையில், இந்தத் தடுப்பூசிக்கும் ஸ்புட்னிக் வி என்று பெயர் வைக்கப்பட்டது. இருப்பினும், அப்போது மருத்துவ சோதனை முடிவுகள் வெளியாகாமல் இருந்ததால் பல்வேறு நாடுகளும் தடுப்பூசிகளைக் குறித்து கேள்வி எழுப்பின.

தடுப்பூசி எடுத்துக்கொண்ட புதின்
மேலும், ரஷ்யா அதிபர் விளாடிமர் புதின் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ளாமல் இருந்தது பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியிருந்தது. இதனால் ரஷ்ய மக்களுக்கு கொரோனா தடுப்பூசி குறித்து பெரியளவில் நம்பிக்கை ஏற்படவில்லை. இந்நிலையில், அதிபர் புதின் நேற்று கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் , அவர் எந்த கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டார் என்பது குறித்த தகவலை அந்நாட்டு அரசு தெரிவிக்கவில்லை.

சொல்ல மாட்டோம்
இது குறித்து ரஷ்ய செய்தி்ததொட்பாளர் ஒருவர் கூறுகையில், வேண்டும் என்றே தான் அதிபர் என்ன தடுப்பூசி எடுத்துக்கொண்டார் என்பது குறித்து நாங்கள் அறிவிக்கவில்லை. ஏனென்றால், நாங்கள் உருவாக்கும் மூன்றும் தடுப்பூசியும் பாதுகாப்பானது, அதிக பலன் அளிக்கக்கூடியது. அதிபர் எடுத்துக்கொண்ட தடுப்பூசி பெயரைக் குறிப்பிட்டால், ஏதோ அதுமட்டும் பாதுகாப்பானது என்ற தோற்றம் உருவாகும். இதனால் தடுப்பூசியின் பெயரைத் தெரிவிக்க முடியாது என்றார்.

மூன்று தடுப்பூசிகள்
ரஷ்யா ஸ்புட்னிக் வி தவிர எபிவாகோரோனா மற்றும் கோவிவாக் என்ற தடுப்பூசிகளையும் உருவாக்கியுள்ளன. எபிவாகோரோனா மற்றும் கோவிவாக் தடுப்பூசிகளுக்குச் சமீபத்தில் தான் அவசரக்கால ஒப்புதல் வழங்கப்பட்டது. இருப்பினும், அந்த தடுப்பூசிகள் மருத்துவ சோதனை முடிவுகள் எதுவும் தற்போது வரை வெளியிடப்படவில்லை.

பொதுமக்கள் சந்தேகம்
பல்வேறு நாட்டின் தலைவர்களும் பொதுமக்களிடையே நம்பிக்கையை அதிகப்படுத்த மக்கள் முன்னிலையில் கேமராவில் தடுப்பூசிகளை எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், புதின் அப்படி கேமராவில் தடுப்பூசி எடுத்துக்கொண்டாரா என்பது குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை. அதேநேரம் தான் தடுப்பூசி எடுத்துக்கொள்வதை வீடியோ எடுக்க புதின் விரும்பவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இது அவர் உண்மையாகத் தடுப்பூசி எடுத்துக்கொண்டாரா என்ற சந்தேகத்தையும் மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

தடுப்பூசி செலுத்தும் பணிகள்
வெளிநாடுகளில் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு அதிக தேவை நிலவுகிறது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் ஸ்புட்னிக் வி தடுப்பூசி உற்பத்திக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருந்தாலும், ரஷ்யாவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மந்தமாகவே நடைபெற்று வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி ஒன்பது மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், ரஷ்யாவில் தற்போது வரை வெறும் 43 லட்சம் பேருக்கு மட்டும் தடுப்பூசியின் இரண்டு டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது.