For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகத் தமிழரின் சிந்தனையை உசுப்பி எழுப்பிய கபாலி ரஜினி!

Google Oneindia Tamil News

- டாக்டர் சித்ரா மகேஷ்

டல்லாஸ்(யு.எஸ்): ரஜினிகாந்தின் கபாலியை உலகெங்கிலிருந்தும் தமிழ் ஆர்வலர்கள், பற்றாளர்கள் கபாலியை உச்சி மோர்ந்து பாராட்டி வருகிறார்கள். உலக அளவில் எந்த இந்தியப் படத்துக்கும் கிடைக்காத வசூலும் கொட்டிக் கொண்டிருக்கிறது.

அமெரிக்காவில் வசிக்கும் எழுத்தாளரும், கவிஞருமான முனைவர். சித்ரா மகேஷ் தனது கபாலி அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். ஒன்இந்தியாவுக்காக அவர் எழுதியுள்ள கட்டுரை இது.

Rajini provokes world Tamils through Kabali - Dr Chitra

அவரது கபாலி அனுபவம்:

"பெரும் திரை உலக விமர்சகர்கள், ரசிகர்கள், ஆய்வாளர்கள், கபாலி திரைப்படத்தைப் பார்த்தவர்கள் எனப் பலரும் பேசிப்பேசி, எழுதி எழுதி குவித்து விட்டதோடு, இவை அனைத்தையும் கேட்டும், படித்தும் இன்னும் வேறு என்ன புதிதாகக் கபாலி பற்றித் தெரியவரும் என்ற நிலையில்....

நானும் கபாலி பார்த்தேன் என்பதோடு நிற்க மனமில்லை! இதோ என்னுடைய கருத்தையும் கபாலியின் வரலாற்றில் இணைக்கப்போகிறேன்

ரஜினி அவர்களின் நடிப்பிற்கோ, வேறு எந்த நடிகரின் நடிப்பிற்கோ தனிப்பட்ட ரசிகை அல்ல நான்!

Rajini provokes world Tamils through Kabali - Dr Chitra

ஆனால் 'இது எப்படி இருக்கு?' வசனம் சொல்லிப் பாத்ததது, குரு சிஷ்யன் பட நகைச்சுவையைத் திரும்பத் திரும்ப ரசித்தது, 'ஒரு குரங்கு வேணும் மாமா?' பாட்டை இன்று என் மகள்வரை எடுத்துச் சென்றது என்பது போலச் சின்னப் பங்கு மட்டுமே தலைவரின் படங்களுக்கும் எனக்குமான அறிமுகம்.

திரைப்படங்களில் அல்லாமல் 'அப்பா' இதுதான் ரஜினி அவர்களின் மீது மதிப்பைக் கூட்டியது. அவரைப் பற்றிக் கவிதை எழுத வாய்ப்புக் கிடைத்த போது நடிப்பை விட்டு முற்றிலும் ஒரு குடும்பத் தலைவனாக, அப்பாவாக மட்டுமே என்னால் சிந்திக்க முடிந்தது. ஆனால் கபாலிக்குப் பின்.... ஏதோ இருக்கிறது இந்த மனிதரிடம் என்று எண்ணம் நீங்காமல் இருக்கிறது மனதில்.

கண் பேசும் கதை..

தொடர்ந்து அனைவரும் சொல்வது போல் இந்த மனிதரின் கண், பார்வை இரண்டிலும் ஏதோ ஒன்று இருக்கத்தான் செய்கிறது.

குமுதவல்லியைப் பற்றிப் பேசும் போதெல்லாம் அந்தக் கண்கள் கதை சொல்கிறது நமக்கு. 'கோட்' பற்றிய கிண்டல்களுக்குப் படத்தில் பதில் சொல்லும் விதம் கிண்டலுக்குப் பதில் கிண்டல்.. தனி ரஜினி ஸ்டைல்!

கபாலி கதாபாத்திரத்திற்குத் தேவையான அளவே ரஜினி எனும் சூப்பர் ஸ்டாரின் வெளிச்சம் காட்டப்பட்டுள்ளது. தேவையான இடத்தில் அளவான ஸ்டைல் அதிக சிறப்பு. எனக்குத் தோன்றியது, இந்த ரஜினி புதுசு திரை உலகத்திற்கும், ரஜினி ரசிகர்களுக்கும்!

Rajini provokes world Tamils through Kabali - Dr Chitra

துணைக் கதாபாத்திரங்களின் பங்கும், அவர்கள் மூலம் சொல்லப்பட்ட கதையும், அவர்களின் வசனங்களும் தெளிவான பார்வையோடு இடம் பெற்றுள்ளது. அவர்களோடு கபாலியின் தொடர்பு இயல்பாகவே காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.

தினேஷ் - கபாலியின் கண் அசைவிற்குக் கூட அர்த்தம் புரிந்தவராக சிறப்பாக அசத்தி இருக்கிறார். குறிப்பாகச் 'சரிண்ணே', 'சரிண்ணே' என்று தலை அசைத்தல்.

ஜான் விஜய் - உடனிருந்து உயிர் கொடுக்கும் நண்பனாக, தம்பியாக எதார்த்தமான நடிப்பில்.... அருமை.

தன்ஷிகா - அப்பாவோடான அன்பு பரிமாற்றத்திலும், அவர் மீது காட்டும் அக்கறையிலும், பாதுகாப்புத் தரும் போதும் கபாலி வாரிசு என நிரூபிக்கிறார்.

மற்றும் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள அனைவரின் நடிப்பும், அவர்களின் திறமைக்கு அழகான வாய்ப்பாகவே அமைந்துள்ளது.

உரிமைக்குரல் கொடுத்த சூப்பர் ஸ்டார்

பாடல்கள்: நீண்ட நாள்களுக்குப் பிறகு ஒரு பெண் கவிஞர் பாடல்களால் ரசிகர் மனதில் இசையாய்ப் பதிந்து இருக்கிறார்.

தமிழை முறையாகப் படித்து வந்தவர் என்பது அவரது வார்த்தைப் பயன்பாடுகளில் தெரிகிறது. வாழ்த்தும் வரவேற்பும் தோழி!

Rajini provokes world Tamils through Kabali - Dr Chitra

பிண்ணனி இசை ஆடம்பரமோ, ஆர்ப்பாட்டமோ இல்லாது கதையோடு மட்டுமே பயணித்தது மிகப்பொருத்தம் கபாலிக்கு.

சமூகத்தின் நிலைப்பாடு, முன்னேற்றம், வறுமை, பெண் கொடுமை என முழுவதும் தமிழன் சார்ந்த, தமிழனுக்கான உரிமைக் குரலாக இடம்பெறும் வசனங்கள் அழுத்தமானவை.

ஒரு ஆழ்ந்த படிப்பாளன், தீர்க்கமான சிந்தனையாளன் ஒருவனாலேயே ஆழப்பதியும்படியான வசனத்தைத் தரமுடியும். சான்றாக,

'காலம் மாறிட்டே இருக்குது, ஆனால் பிர்ச்சினைகள் அப்படியே தான் இருக்குது'

'பறக்கிற ஒவ்வொரு பறவைக்குள்ளேயும் ஒரு விதை இருக்கும். அந்த விதைக்குள்ள ஒரு காடே இருக்குது...'

இன்னும் பல வசனங்கள் அர்த்தம் நிறைந்தவை. சமுதாயச் சீர்த்திருத்தம் கொண்டவை..

இந்த வசனங்களுக்கு உயிர் கொடுத்து உலக அளவில் விவாதத்தை உருவாக்கி இருப்பவர் சூப்பர் ஸ்டார் மட்டுமே! வேறு யார் பேசியிருந்தாலும் இவை வெறும் போதனைகளாக மட்டுமே போயிருக்கும். படமும் வந்த சுவடு வெளியே தெரியாமல் போன இன்னொரு நல்ல படமாகியிருக்கும்.

ரஜினி அவர்கள் உச்சரித்ததால், இந்த வசனங்கள் உலகத் தமிழர்களின் சிந்தனைகளை உசுப்பி எழுப்பியுள்ளன.

ரஜினி இல்லையேல் கபாலி ஏது?

எல்லாப் படமும் இயக்குநர் படமே... ஆனால் சில படங்களின் பெரும் வெற்றிக்குப்பின் ஒரு கதை இருக்கும். அதுபோல் தான் இது ரஞ்சித்தின் படம் தான். முழுக்க முழுக்க இயக்குநர் படம்தான்!

ஆனால் ரஜினியைத் தவிர இந்தப் படத்திற்கு வேறு யாரும் பொருந்தியிருப்பார்களா? நிச்சயம் இல்லை என்று சொல்லமுடியும்

Rajini provokes world Tamils through Kabali - Dr Chitra

இந்த அளவு மாபெரும் வசூலையும், வெற்றியையும், உலகத் தமிழர்களிடம் மட்டுமல்ல, தமிழரல்லாதோர் மத்தியிலும் தாக்கத்தையும் ரஜினி ஒருவரால்
மட்டுமே சாத்தியம்,

சூப்பர் ஸ்டாரின் படம் என்று நினைத்து வருபவர்களுக்கு சூப்பர் ஸ்டார் + ரஞ்சித் காம்பினேஷனில் ஒரு புதுவித விருந்து.

தலைவரைப் பின்பற்றி தங்கள் வாழ்வையும் உயர்த்திக் கொண்டவர்கள் பெரும்பாலான ரஜினி ரசிகர்கள்.

மிகவும் விருப்பத்துடன் நடித்து ' புரட்சிகரமான படம்' என்று சான்றும் கொடுத்துள்ள 'கபாலி' மூலம் ரஜினிஅவர்கள், தன் ரசிகர்களைச் சமூகச் சீர்த்திருத்தச் சிந்தனைகளுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

தமிழர்கள் வாழ்வு மலரட்டும்.. வாழிய செந்தமிழ்...!

English summary
Dr Chithra Mhesh, an US Tamil scholar praised Kabali and Rajinikanth for giving a thought provoked movie.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X