பிசிசிஐ பாரபட்சமா? ரிஷப் பண்டுக்கு சான்ஸ்.. சஞ்சு சாம்சன் புறக்கணிப்பு! கொந்தளிக்கும் ரசிகர்கள்
ஆக்லாந்து: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 வது ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டதற்கு இந்திய கிரிக்கெட் அணி ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்து கடுமையாக சாடி வருகிறார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்திடம் அரையிறுதியில் தோல்வியடைந்த இந்திய அணியின் வீரர்கள் தேர்வு, தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக தேர்வுக்குழுவை மொத்தமாக கலைத்தது பிசிசிஐ. இந்த தொடர் முடிந்த கையோடு நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகளை கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடிய இந்திய அணி வெற்றி பெற்றது.

ஒருநாள் தொடர்
இதன் தொடர்ச்சியாக தவான் தலைமையிலான 2 ஆம் தர இந்திய அணி
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. ரோகித் சர்மா தலைமையிலான முதல் தர இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. வங்கதேச தொடரில் சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இடம்பெறாததற்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன.

சஞ்சு சாம்சன்
அதே நேரம் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இரு வீரர்களும் இடம்பிடித்தனர். கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 36 ரன்களை எடுத்தார். அந்த போட்டியில் இந்திய அணி 306 ரன்களை குவித்தது. ஆனாலும் அதில் இந்திய அணி தோல்வியை தழுவியது.

மீண்டும் நீக்கம்
இந்த தோல்விக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டது. குறிப்பாக பந்துவீச்சாளர்களின் சொதப்பல் ஆட்டம், ரிஷப் பண்டின் தொடர் ஃபார்ம் அவுட் ஆகியவையும் இதற்கு காரணம். ஆனால், இன்று தொடங்கி இருக்கும் 2வது போட்டியில் சஞ்சு சாம்சன் அணியில் இடம்பெறவில்லை. தான் வழக்கமாக விளையாடும் இடத்தில் இறங்காமல் லோயர் ஆர்டரில் விளையாடியும் சஞ்சு சாம்சனால் ஓரளவு ரன்களை எடுக்க முடிந்தது.

குற்றச்சாட்டு
ஆனால், அவரை இந்த போட்டியில் இருந்து நீக்கிவிட்டு தீபக் ஹூடாவையும், தீபக் சஹாரையும் அணியில் சேர்த்துள்ளார்கள். இதனை தற்போது ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். ஃபார்ம் அவுட்டில் இருக்கும் ரிஷப் பண்டை நீக்காமல் ஒரே போட்டியில் விளையாட வைத்துவிட்டு சஞ்சு சாம்சனை நீக்கியதில் உள்நோக்கம் இருப்பதாக பலர் குற்றம்சாட்டி உள்ளனர்.

டிரெண்டாகும் ஹேஷ்டேக்
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக ட்விட்டரில் #justiceforsanjusamson என்ற ஹேஷ்டேக்கையும் பலர் டிரெண்ட் செய்து அவருக்கு ஆதரவாக பதிவிட்டு வருகிறார்கள். பிசிசிஐ தங்களுக்கு நெருக்கமான வீரர்களை தேர்வு செய்வதாகவும், சாதி அடிப்படையில் வீரர்கள் தேர்வு இருப்பதாகவும் கூறி கடந்த வியாழன் அன்று சாதிவெறி பிசிசிஐ என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் டிரெண்ட் செய்தார்கள்.

கிரிக்கெட் விமர்சகர் அய்யப்பன்
இதுகுறித்து பிரபல கிரிக்கெட் விமர்சகர் அய்யப்பன் முகநூலில் வெளியிட்டு இருக்கும் பதிவில், "வேர்ல்ட்கப் மோசமா தோத்துட்டோம்ல இனிமேலாவது பண்ண தப்பை உணர்ந்து T20 கிரிக்கெட்டை அட்டாகிங் மோட்ல ஆடனும்!
சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுப்போம்மா!! அதான் இசான் கிசான் , ரிசப் பன்ட் இருக்கானுகள்ல , சாம்சனை பெஞ்ச் பண்ணிட்டு ஓன்டே சீரிஸ்ல வாய்ப்பு கொடுப்போம்ன்னு சொல்லிடுவோம்.

அமர வைக்கப்படும் சாம்சன்
ஓன்டே சிரிஸ்ல தொடர்ந்து அவனை ஆட வைப்போம்மோ! அதான் 6வது பவுலர் ஆப்சன் இல்லாமல் தான போன மேட்ச் தோத்தோம்! நமக்கு தான் பைலேட்டர்ல தோத்தாலே பிடிக்காதே! உடனே சேப் மோட்டுக்கு போயிடுவோம்மே! வேற பிளேயர்களை வெளிய உக்கார வைக்க வேண்டாம் கைக்கு வாக்கா சாம்சனே இருக்கான் அவனையே இந்த மேட்ச்லயும் உக்கார வச்சுடுவோம்.

திருந்துவார்களா?
வேர்ல்ட்கப் மோசமா தோத்துட்டோம்ல இனிமேலாவது நல்லா இன்டென்ட்டோட ஆடனும், பைலேட்டரல் சீரிஸ் தோத்துடுவோம். அதனால் சேப் சோனில் ஆடனும். இந்த மைண்ட்செட்டை விட்டு வெளிய வராதவரை ஐசிசி கப் உங்களுக்கு கனவுதான்டா பிசிசிஐ வாயனுகளா!!" என்று விமர்சித்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications