For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

162 பேருடன் காணாமல் போன ஏர் ஏசியா விமானம் நொறுங்கியதா? தேடும் பணி தீவிரம்!

By Shankar
Google Oneindia Tamil News

சிங்கப்பூர்: 162 பேருடன் மாயமான ஏர் ஏசியா விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானம் நேற்று காலை திடீர் என்று மாயமானது. அந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கி இருக்கலாம் என அஞ்சப்படுவதால், தேடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

மலேசியாவைச் சேர்ந்த ‘ஏர் ஆசியா' நிறுவனத்தின் ‘ஏ320-200' ஏர் பஸ் விமானம், இந்தோனேஷியாவில் உள்ள சுரபயா என்ற இடத்தில் இருந்து சிங்கப்பூரை நோக்கி உள்ளூர் நேரப்படி நேற்று காலை 5.20 மணிக்கு புறப்பட்டு சென்றது.

Search and Rescue Operation Resume for Missing AirAsia Jet

இந்த விமானத்தில், பிரான்சு, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளை சேர்ந்த தலா ஒரு பயணி, 3 தென்கொரிய பயணிகள் உள்பட மொத்தம் 155 பயணிகள், 7 சிப்பந்திகள் என மொத்தம் 162 பேர் பயணம் செய்தனர். 162 பேரில் 156 பேர் இந்தோனேஷியாவைச் சேர்ந்தவர்கள். 16 பேர் குழந்தைகள். இந்தியர்கள் யாரும் பயணம் செய்யவில்லை.

இந்த விமானம், நேற்று காலை 8.30 மணிக்கு சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தை சென்று அடைந்திருக்க வேண்டும்.

ஆனால், புறப்பட்டு சென்ற 42 நிமிடங்களில் அது மாயமானது. அதாவது காலை 7.24 மணிக்கு (இந்திய நேரம் அதிகாலை 4.54 மணி), இந்த விமானம், விமான கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை திடீரென இழந்தது. இந்தோனேஷிய விமான தகவல் பிராந்தியத்தில்- சிங்கப்பூருக்கு 200 கடல் மைல் தொலைவில், சிங்கப்பூர்-ஜகார்த்தா விமான தகவல் பிராந்தியத்தில் பறந்து கொண்டிருந்தபோது, தகவல் தொடர்பை இழந்ததாக சிங்கப்பூர் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் அறிவித்தது.

‘‘கியூ இசட் 8501 என்னும் விமானம், இன்று (நேற்று) காலை 7.24 மணிக்கு விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்து விட்டது என்பதை ஏர்ஆசியா இந்தோனேஷியா உறுதி செய்வதில் வருத்தம் அடைகிறது'' என ஏர் ஏசியா நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

ஏர் ஆசியா விடுத்துள்ள செய்திக் குறிப்பில், ‘‘அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள், சிப்பந்திகள் கதி என்னவாயிற்று என்பது குறித்து தற்போது துரதிர்ஷ்டவசமாக எந்த தகவலும் எங்களிடம் இல்லை. இதுகுறித்த தகவல் கிடைக்கிறபோது, அனைத்து தரப்பினருக்கும் தெரிவிக்கிறோம். மேலும், விமானத்தை தேடும் பணிகளும், மீட்பு பணிகளும் நடந்து வருகின்றன. மீட்பு பணியில் ஏர் ஆசியா முழுமையான ஒத்துழைப்பினை, உதவியினை வழங்கி வருகிறது'' என கூறப்பட்டுள்ளது.

மாயமான ஏர் ஆசியா விமானம், தொடர்பினை இழப்பதற்கு முன்பாக, வழக்கமான தடத்திலிருந்து மாறிச்செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாக இந்தோனேஷிய போக்குவரத்து துறை அமைச்சக அதிகாரி ஹாதி முஸ்தபா தெரிவித்தார்.

மோசமான வானிலை காரணமாக, திட்டமிட்ட பாதையிலிருந்து விலகிச்செல்ல அனுமதிக்குமாறு விமானி கேட்டுக்கொண்டதாக ஏர் ஆசியாவும் தெரிவித்துள்ளது. மேகமூட்டத்தை தவிர்ப்பதற்காக விமானத்தை 32 ஆயிரம் அடி உயரத்திலிருந்து 38 ஆயிரம் அடி உயரத்துக்கு கொண்டு செல்லவும் விமானி அனுமதி கேட்டுள்ளார். நேற்று அந்த தடத்தில் 50000 அடி உயரம் வரை மேகக் கூட்டங்கள் இருந்தது.

சுமத்ரா தீவின் அருகே கிழக்கு பெலிடிங் ரீஜன்சி பகுதியில் உள்ள கடலில், காணாமல் போன விமானம் விழுந்து நொறுங்கி விட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன. விமானம் விழுந்து நொறுங்கிய இடம் உறுதிப்படுத்தப்படவில்லை என ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில் அந்த விமானத்தில் உள்ள எரிபொருள், தீர்ந்து பல மணி நேரம் ஆகி இருக்கும் என தகவல்கள் கூறுவதால், அது விபத்துக்குள்ளாகி இருக்கக்கூடும் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

காணாமல் போன விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதில் இந்தோனேஷியா 5 கப்பல்களையும், 15 விமானப் படை வீரர்களுடன் ஒரு கண்காணிப்பு விமானத்தையும் ஈடுபடுத்தி உள்ளது.

விமானத்தின் தேடுதல், மீட்பு பணிகளில் உதவுவதற்காக இந்தியா 3 கப்பல்களையும், ஒரு விமானத்தையும் தயார் நிலையில் வைத்துள்ளது. 3 கப்பல்களில் ஒன்று, வங்க கடலிலும், 2 கப்பல்கள் அந்தமானிலும் நிறுத்தப்பட்டுள்ளன. இவற்றுடன் பி-81 என்னும் கடல் கண்காணிப்பு விமானமும் தயார் நிலையில் உள்ளது.

தேடுதல் பணியில் உதவ தயாராக இருப்பதாக மலேசியாவும் அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவும் இந்த தேடும் பணியில் களமிறங்கியுள்ளது. மோசமான வானிலை காரணமாக நேற்று மாலை நிறுத்தப்பட்ட தேடும் பணி, இப்போது மீண்டும் தொடங்கியுள்ளது.

நிலைமையை நேரில் ஆராய்வதற்காக ஏர் ஆசியா குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி டோனி பெர்னாண்டஸ், இந்தோனேஷியாவுக்கு விரைந்தார்.

காணாமல் போய் விட்ட விமானத்தை ஓட்டிச்சென்ற விமானி கேப்டன் இர்வாண்டோ, 6 ஆயிரத்து 100 மணி நேரம் விமானம் ஓட்டிய அனுபவசாலி என தகவல்கள் கூறுகின்றன.

3 - வது விமானம்

ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் 8-ந் தேதி, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச்.370, தெற்கு சீனக்கடலுக்கு மேலே சுமார் 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, மாயமானது. இதில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த பெண் சந்திரிகா சர்மா உள்பட 239 பேரின் கதி என்ன என்பது இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த விமானத்தின் எந்த பாகமும் கிடைக்கவில்லை.

மேலும், 298 பேருடன் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம்- எம்.எச்.17, உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள ஷக்தர்ஸ்க் என்ற இடத்தில் கடந்த ஜூலை மாதம் 17-ந் தேதி சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் அந்த விமானத்தில் பயணம் செய்த 298 பேரும் கொல்லப்பட்டனர்.

இப்போது அந்த வரிசையில், மீண்டும் மலேசியாவை சேர்ந்த ஏர் ஆசியா விமானம் மாயமாகி இருப்பது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

English summary
Malaysia and Australia have joined the massive search and rescue operation for an AirAsia Indonesia jet that lost contact with air traffic control over the Java Sea during a flight to Singapore shortly after the pilots requested a change of flight plan because of weather.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X