• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

செப். 11 தாக்குதல்: சிறு கத்திகள் மூலம் அமெரிக்க விமானங்கள் அல்-காய்தா தீவிரவாதிகளால் கடத்தப்பட்டது எப்படி?

By BBC News தமிழ்
|
விமானம்
Getty Images
விமானம்

(உலக வல்லரசுகளில் முன்னோடி என்ற அடையாளத்துடன் விளங்கி வந்த அமெரிக்காவின் அடித்தளத்தையே அசைத்துப் பார்க்கும் ஒரு சம்பவம் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி நடந்தது. அந்த சம்பவத்தின் சுவடுகளை திரும்பிப் பார்க்கும் வகையில் தினமும் ஒரு நினைவை தொடராகப் பதிவு செய்கிறது பிபிசி தமிழ். அதில் இரண்டாவது கட்டுரை இது.)

அமெரிக்கா உலகின் மிகப் பெரிய வல்லரசு எனக் கருதப்படுகிறது. ராணுவத்துக்காக மட்டும் இந்த நாடு ஓராண்டுக்குச் செய்யும் செலவு 60 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல். வைத்திருக்கும் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்துக்கும் அதிகம். 15 லட்சத்துக்கும் அதிகமான படை வீரர்கள் உலகமெங்கும் பரவியிருக்கிறார்கள்.

தங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று கருதிய பல நாடுகளுக்குள் புகுந்து அமெரிக்கா நீண்ட போர்களை நடத்தியிருக்கிறது. வலுவான உளவாளிகள் உலகின் பல பகுதிகளிலும் பதுங்கியிருக்கிறார்கள். படை விமானங்கள், நவீன போர்க்கப்பல்கள், நீர் மூழ்கிகள் என சிறந்த ஆயுதங்கள் இருக்கின்றன.

இவ்வளவு வலிமை வாய்ந்த நாட்டை அதிரச் செய்த நாள் செப்டம்பர் 11. நூறு ஆண்டுகள் ஆனாலும் மறைந்தபோகாத வடுக்களை தந்துவிட்டுச் சென்ற நாள். விமானத்தை ஆயுதமாகவும் அதில் நிரப்பப்பட்ட எரிபொருளை வெடிபொருளாகவும் பயன்படுத்த முடியும் என்பதை உலகம் புரிந்து கொண்ட நாள்.

மொத்தம் நான்கு விமானங்கள் கடத்தப்பட்டன. அவற்றில் இரண்டு விமானங்கள் நியூயார்க்கின் வர்த்தக மைய வளாகத்தில் இருந்த இரு கட்டடங்களில் மோதின. முதல் விமானம் வானில் கடத்தப்பட்டபோதே பல விமானங்கள் கடத்தப்பட்டன.

"எங்களிடம் சில விமானங்கள் இருக்கின்றன"

"எங்களிடம் சில விமானங்கள் இருக்கின்றன. யாரும் நகர நேர்ந்தால் ஆபத்தைச் சந்திக்க நேரிடும்". அமெரிக்க ஏர்லைன்ஸ் 11 விமானத்தைக் கடத்திய பயங்கரவாதியான அட்டா பயணிகளை எச்சரிக்கும்போது கூறிய சொற்கள் இவை. இதனை தரைக்கட்டுப்பாட்டு அறையில் இருந்த அமெரிக்க அதிகாரிகள் தெளிவாகக் கேட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் அதன் பொருளை உள்வாங்கிக் கொள்ளவில்லை. அதற்கு நேரமும் இல்லை.

செப்டம்பர் 11-ஆம் தேதியன்று மொத்தம் 4 விமானங்கள் கடத்தப்பட்டன. அதன் பொருள்தான் இது என்று புரிந்து கொள்வதற்குள்ளாக பெரும் சேதத்தை அமெரிக்கா சந்தித்து விட்டது. அட்டா தலைமையிலான 5 பேர் கடத்திச் சென்ற அமெரிக்கன் ஏர்லைன்ஸ் 11 விமானம் உலக வர்த்தக மைய வளாகத்தின் வடக்குக் கோபுரத்தில் மோதியபோது.

அந்த விமானம் கிளம்பிய அதே விமான நிலையத்தின் மற்றொரு முனையத்தில் இருந்து புறப்பட்ட இன்னொரு விமானமும் நியூயார்க்கை நோக்கி வந்து கொண்டிருந்தது.

இந்த விமானத்தின் பெயர் யுனைட்டட் ஏர்லைன்ஸ் 175. பாஸ்டனில் அது புறப்பட்ட நேரம் காலை 8.14 மணி. அந்த நேரத்தில்தான் முதல் விமானம் வானில் கடத்தப்பட்டிருந்தது. மார்வன் அல் சேஹ்கி தலைமையில் ஃபயேஸ் பேனிஹம்மத், மொஹாந்த் அல்-சேஹ்ரி, அகமது அல்-காம்தி, ஹம்சா அல்-ஹாம்தி என மொத்தம் 5 பேர் யுனைட்டட் ஏர்லைன்ஸ் 175 விமானத்துக்குள் இருந்தனர். இந்த விமானமும் லாஸ் ஏஞ்சலஸ் நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

இவர்கள் விமானத்தில் ஏறுவதற்கு முன்னரே சில தடைகளை எதிர்கொண்டனர். இவர்களில் சிலருக்கு சரியாக ஆங்கிலம் பேச வரவில்லை. இதனால் டிக்கெட் வழங்கும் பணியாளரின் கேள்விகளைப் புரிந்துகொண்டு பதில் சொல்ல இயலவில்லை. பின்னர் மிக மெதுவாகக் கேள்விகளைக் கேட்டு பதில்களைப் பெற்றிருக்கிறார்.

முதல் விமானத்தைக் கடத்திய அட்டா உள்ளிட்டோரைப் போல CAPPS கணினி பரிசோதனை அமைப்பில் இரண்டாவது விமானத்தைக் கடத்திய யாரும் சிக்கவில்லை. அதனால் மிக எளிதாக அவர்களால் விமானத்துக்குள் செல்ல முடிந்தது.

இவர்களில் இருவர் ஐக்கிய அரபு எமிரேட்டை சேர்ந்தவர்கள், மூவர் சௌதி அரேபியாவில் இருந்து வந்தவர்கள். கத்திகள், தடிகள் போன்றவைதான் இவர்கள் கடத்தலுக்குப் பயன்படுத்திய ஆயுதங்கள். அதனால்தான் விமான நிலைய பாதுகாப்பு சோதனையை இவர்களால் எளிதாகக் கடந்துவர முடிந்தது.

யுனைட்டட் ஏர்லைன்ஸ் 175 விமானம் சரியாக 8 மணிக்கு புறப்பட வேண்டும். விமானத்தில் 7 பணியாளர்களுடன் 56 பயணிகள் இருந்தனர். சிறிது தாமதமாக 8.14 மணிக்கு லோகன் விமான நிலையத்தை விட்டு விண்ணில் பறக்கத் தொடங்கியது. 8.33 மணிக்கு திட்டமிட்டபடி 31 ஆயிரம் அடி உயரத்துக்குச் சென்றது. வழக்கம் போல விமானப் பணியாளர்கள் தங்களது சேவைகளைத் தொடங்கினர்.

8.42 மணிக்கு வேறொரு விமானத்தில் இருந்து சந்தேகப்படும்படியான தகவல் பரிமாற்றத்தைக் கேட்டதாக தரைக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு விமானிகள் தெரிவித்தனர். அதுதான் ஏற்கெனவே கடத்தப்பட்டிருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் 11 விமானத்தில் இருந்து வந்ததாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

8.42 மணிக்குப் பிறகு யுனைட்டட் 175 விமானத்தின் விமானிகளிடம் இருந்து எந்தத் தகவலும் தரைக் கட்டுப்பாட்டு அறைக்கு வரவில்லை. அந்த நேரத்தில் கடத்தல்காரர்கள் தங்களிடம் இருந்த கத்திகளைக் கொண்டு பயணிகளைத் தாக்கத் தொடங்கியிருந்தனர்.

8.47 மணிக்கு விமானத்தில் சந்தேகப்படும்படியான நடவடிக்கை இருக்கலாம் என்பது தரைக் கட்டுப்பாட்டு மைய அதிகாரிகளுக்குப் புரிந்தது. நிர்ணயிக்கப்பட்ட பாதையில் இருந்து விமானம் திரும்பியதுடன், அதிகாரிகளின் உத்தரவுகளையும் ஏற்கவில்லை.

விமானத்தில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு

8.52 மணிக்கு, கனெக்டிகட்டில் இருந்த லீ ஹேன்சன் என்பவருக்கு அவரது மகன் பீட்டரிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது பீட்டர் கடத்தப்பட்டிருந்த யுனைட்டட் ஏர்லைன்ஸ் 175 விமானத்தில் இருந்தார்.

"விமானி அறையை அவர்கள் கைப்பற்றிவிட்டார்கள் என்று நினைக்கிறேன். ஒரு பணியாளரைக் குத்தி விட்டார்கள். முன்னால் இருக்கும் வேறு சிலர் கொல்லப்பட்டிருக்கலாம். இன்னும் விசித்திரமான நடவடிக்கைகள் தென்படுகின்றன. உடனே யுனைட்டட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு அழையுங்கள். இது பாஸ்டனில் இருந்து லாஸ் ஏஞ்சலஸ் செல்லும் விமானம் 175 என்று அவர்களிடம் கூறுங்கள்" என்று பீட்டர் அப்போது தனது தந்தையிடம் தெரிவித்தார்.

லீ ஹான்சன் உடனடியாக காவல்துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு தனது மகன் கூறியதைத் தெரிவித்தார்.

அதேபோல் 8.52 மணிக்கு ஓர் ஆண் விமானப் பணியாளர் ஒருவர் சான் பிரான்ஸிசிஸ்கோவில் உள்ள யுனைட்டட் ஏர்லைன்ஸ் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு விமானிகள் கொல்லப்பட்டதையும், விமானம் கடத்தப்பட்டிருப்பதையும் விளக்கினார். கடத்தல்காரர்கள்தான் விமானத்தை இயக்கிக் கொண்டிருந்தார்கள் என்பது அப்போது தரையில் இருந்த அதிகாரிகளுக்குப் புரிந்தது.

8.59 மணிக்கு பிரியன் ஸ்வீனி என்றொரு மற்றொரு பயணி தனது மனைவிக்கு தொடர்பு கொள்ள முயன்றார். கிடைக்கவில்லை. பின்னர் தனது தாயை தொலைபேசியில் அழைத்து விமானம் கடத்தப்பட்டிருப்பதாகக் கூறினார். விமானிகள் அறையை உடைத்து விமானத்தை பயங்கரவாதிகள் பிடியில் இருந்து விடுவிக்க முடியுமா என்று பயணிகள் அனைவரும் சிந்தித்து வருவதாகவும் அவர் கூறினார்.

9 மணிக்கு பீட்டர் தனது தந்தை லீ ஹேன்சனுக்கு இரண்டாவது முறையாக போனில் பேசியபோது பதற்றம் அதிகமாகியிருந்தது. "அவர்கள் கத்திகளை வைத்திருக்கிறார்கள். வெடிகுண்டு வைத்திருப்பதாகக் கூறுகிறார்கள். சிகோவிலோ வேறு எங்கோ கட்டடத்தின் மீது மோதுவதற்கு திட்டமிட்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். கவலைப்படாதீர்கள் அப்பா, அப்படி ஏதாவது நடந்தால், மிக விரைவாக முடிந்துவிடும்" என்று கூறினார்.

அந்த அழைப்பு பாதியிலேயே துண்டிக்கப்பட்டது. அதற்குச் சற்று முன்னதாக ஒரு பெண் அலறும் சத்தத்தை லீ ஹேன்சன் தொலைபேசி வழியாகக் கேட்டார். அப்போது தொலைக்காட்சியில் உலக வர்த்தக மையத்தின் மற்றொரு கட்டடத்தில் இரண்டாவது விமானம் மோதிய காட்சிகள் காட்டப்பட்டுக் கொண்டிருந்தன.

கடத்தல்காரர்கள் பெரும்பாலும் கத்திகளையும், கூரான முனைகளைக் கொண்ட ஆயுதங்களையும் வைத்திருந்தார்கள் என்பதை பல தொலைபேசி அழைப்புகளில் கேட்க முடிந்தது. வெடிகுண்டு வைத்திருப்பதாக அவர்கள் மிரட்டினாலும், அவர்களிடம் வெடிகுண்டுகள் ஏதும் இருந்திருக்க வாய்ப்பில்லை என்றே தெரியவந்தது. 9/11 விசாரணை அறிக்கையிலும் விமானம் மோதிய இடத்தில் எந்த வெடிபொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது. விமானத்தில் வெடிகுண்டு இருந்ததாகக் மிரட்டியதில் உண்மையில்லை என்று விசாரணை அறிக்கை தெரிவித்திருக்கிறது.

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் 11 விமானத்தைப் போல் அல்லாமல் யுனைட்டட் ஏர்லைன்ஸ் 175 விமானம் முற்றிலும் வேறு பாதையில் நியூயார்க் நகருக்கு இயக்கப்பட்டது. டிரான்ஸ்பான்டர்கள் அணைக்கப்படவில்லை. இதனால் ரேடார்களின் இதனை மிக எளிதாகக் கண்காணிக்க முடிந்தது. நியூ ஜெர்சி, ஸ்டேடன் தீவு, நியூயார்க் விரிகுடாவை கடந்து எம்பையர் ஸ்டேட் கட்டடத்தை நோக்கிச் சென்ற விமானம் கடைசி நேரத்தில் மிக நேர்த்தியாக வளைந்து வர்த்தக மையத்தை நோக்கி விரைந்தது.

வடக்குக் கோபுரத்தில் விமானம் மோதிய பாதிப்பு அடங்காத நிலையில் தெற்குக் கோபுரத்தில் இந்த விமானம் பாய்ந்தது. அப்போது மணி 9.03. மொத்தம் 38 ஆயிரம் லிட்டர் எரிபொருள், 5 கடத்தல்காரர்கள், இரு விமானிகள், 7 பணியாளர்கள், 51 பயணிகள், 80 வயதுப் பாட்டி, இரண்டரை வயதுக் குழந்தை என உயிர்களோடு எரிபொருளையும் கலந்து வெடிபொருளானது விமானம்.

ஏற்கெனவே மரண ஓலங்களைக் கேட்டுக் கொண்டிருந்த வர்த்தக மைய வளாகத்தில், ஆயிரக் கணக்கானோர் குழுமியிருந்தார்கள். கேமராக்கள் படம்பிடித்துக் கொண்டிருந்தன. அவர்களது கண்முன்னே தெற்குக் கோபுரத்துக்குள் புகுந்த விமானத்தின் பாகங்கள், மறுபுறம் வெளியே வந்தன. தொலைக்காட்சிகள் அதை நேரலையாக ஒளிபரப்பின.

கட்டடம் முழுவதும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. சுமார் 50 நிமிடங்களுக்குப் பிறகு கட்டடம் தரைமட்டமானது. இரு தாக்குதல்களிலும் சேர்த்து சுமார் 2,600 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் முன்னூறுக்கும் மேற்பட்டோர் மீட்புப் படை வீரர்கள்.

மீட்புப் பணிகள் நடந்து கொண்டிருந்தபோது, இன்னொரு தாக்குதல் நடக்கக்கூடும் என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டிருந்தது.

ஏனென்றால், ராணுவமும் உளவுப் படைகளும் கண்டுபிடிக்க முடியாத சதித்திட்டத்தை பயங்கரவாதிகள் வகுத்திருந்தார்கள். எத்தனையோ நாடுகளுக்குச் சென்று போர் நடத்திய அமெரிக்காவை, அதன் சொந்த மண்ணில் ஏமாற்றும் அளவுக்கு அவர்களது திட்டம் இருந்தது.

அதனால் அமெரிக்காவின் அப்போதைய அச்சம் நியாயமானதுதான். அப்போது அடுத்த விமானம் தலைநகரை நோக்கி விரைந்து கொண்டிருந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

BBC Tamil
English summary
September 11 attack: How did American choppers kidnapped by Al Qaeda?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X