ஆப்கானில் தாலிபான் ஆட்சியை அங்கீகரித்தால் ஆபத்து.. இலங்கை அரசை அலர்ட் செய்யும் ரணில் விக்ரமசிங்கே
காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை இலங்கை அங்கீகரிக்கக் கூடாது என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
Recommended Video
ஆப்கானிஸ்தானுடன் உறவுகளை துண்டித்துக் கொள்ள வேண்டும் என்றும், அவர் இலங்கை அரசை கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்த மண்டலத்தில் தீவிரவாதம் தலை தூக்குவதற்கு நாமும் ஒரு காரணமாக இருக்கக் கூடாது என்று ரணில் விக்ரமசிங்கே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் முழுக்க தற்போது தலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. ஆயுதமேந்தி சண்டையிட்டு வந்தவர்கள் தாலிபான்கள். எனவே அவர்கள் ஆட்சிக்கு இலங்கை அங்கீகாரம் கொடுப்பது தங்களுக்கே பிற்காலத்தில் பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்று எச்சரிக்கை கலந்த தொனி விக்ரமசிங்கே அறிக்கையில் இருக்கிறது.

ரணில் விக்ரம சிங்க அறிக்கை
ரணில் விக்ரமசிங்க அறிக்கையில் கூறியிருப்பது இதுதான்: தாலிபான்கள் ஆட்சியில் ஆப்கானிஸ்தான் நாடு ஜிஹாதி போராளி குழுக்களின் மையமாக மாறி விடும் என்ற அச்சம் அனைத்து தரப்புக்கும் இருக்கிறது. மக்களை அவர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்குவதை எதிர்த்து கேள்வி கேட்க யாரும் இருக்க போவது கிடையாது. புனித குரான் கூறியிருப்பதை தவறாக அர்த்தப்படுத்திக் கொண்டு, தாலிபான்கள் செயல்படுகிறார்கள். எனவே, பாரம்பரியமான இஸ்லாமிய நாடுகளுக்கும், பிற நாடுகளுக்கும் இவர்களால் ஆபத்து தான் நேரும்.

புத்தர் சிலையை தகர்த்தனர்
தாலிபான்கள் ஆட்சியை அங்கீகரிப்பதற்கு நமக்கு எந்த ஒரு நியாயபூர்வமான காரணங்களும் கிடையாது. ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கை நாட்டு தூதரகம் மூடப்பட வேண்டும். வேறு நாட்டில் அதை அமைக்க வேண்டும் . ஆப்கானிஸ்தானில் இருந்த மிகப்பழமையான பாமியன் புத்தர் சிலையை தாலிபான்கள் அழித்துவிட்டனர். இந்த மண்டலத்தில் தீவிரவாதம் தனது தலையை உயர்த்துவதற்கு உதவுவதில் நாமும் ஒருவராக இருக்க போகிறோமா என்பது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.

இலங்கை வாய் திறக்கவில்லை
2001ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தான், தாலிபான்கள் வசம் இருந்தபோது அங்கிருந்த மிகப்பெரிய பழமையான பாமியன் புத்தர் சிலை தலிபான்களால் நொறுக்கி வீழ்த்தப்பட்டது. உருவ வழிபாடு தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று கூறி பழமையான இந்த புத்தர் சிலை சேதப்படுத்தப்பட்டது. இதற்கு அப்போது உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்திருந்தன. இதைத்தான் ரணில் விக்கிரமசிங்க தனது அறிக்கையில் சொல்லியிருக்கிறார். அதேநேரம் ஆப்கானிஸ்தானில் நடைபெற்றுவரும் நிகழ்வுகள் பற்றி இலங்கை அரசு தரப்பில் இதுவரை எந்த ஒரு அதிகாரபூர்வமான நிலைப்பாடும் அறிவிக்கப்படவில்லை. அதேநேரம், இலங்கை நாட்டை சேர்ந்த சுமார் 200 பேர் ஆப்கானிஸ்தானில் சிக்கி இருப்பதாக சமீபத்தில் அந்த நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

விடுதலை புலிகள்
தமிழீழ விடுதலைப் புலிகள், தனி ஈழம் கேட்டு ஆயுதப் போராட்டம் நடத்திய மண் இலங்கை. ஆனால் அதை ஏற்க மறுத்து அவர்களுக்கு எதிராக சர்வதேச நாடுகளின் உதவியோடு போர் புரிந்து வீழ்த்தி உள்ளது இலங்கை அரசு . இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு இலங்கை அங்கீகாரம் செய்தால் நாளை இலங்கை ஆயுத போராட்டத்தை அங்கீகாரம் செய்தது போல வரலாற்றில் பதிவாகி விடும் என்ற எச்சரிக்கை உணர்வு ரணில் விக்கிரமசிங்க அறிக்கையில் எதிரொலிக்கிறது. ஒருபக்கம் சீன அரசு தலிபான்களுடன் இணக்கமான உறவை பேணி வரும் நிலையில். சீனாவுடன் நட்புறவுடன் இருக்கும் இலங்கை, இந்த விஷயத்தில் அதே போன்ற நிலைப்பாட்டை எடுக்க முடியாது என்பதுதான் யதார்த்த நிலை.












Click it and Unblock the Notifications