"பாருங்க.. உக்ரைன் எல்லையில் படையை குறைச்சிட்டோம்..!" வீடியோ வெளியிட்ட ரஷ்யா! நம்பாத நேட்டோ நாடுகள்
மாஸ்கோ: உக்ரைன் எல்லையில் இருந்து ரஷ்யப் படைகள் வெளியேறுவதாக ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.
உக்ரைன்- ரஷ்யா பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், உக்ரைன் எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்டிருந்த படையினரில் சிலரை நேற்று ரஷ்யா திரும்பப் பெற்றது. இந்நிலையில் ரஷ்யப் படைகள் இன்று வெளியேறியுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் நாடுகள் இடையே அதிகரித்து வரும் போர்ச்சூழலால், இரு நாடுகளும் எல்லையில் ராணுவத்தை நிறுத்தி வைத்துள்ளன. இது நாளுக்கு நாள் உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ரஷ்யா
உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியதால் இருநாடுகளுக்கு இடையே 2014 முதல் எல்லை பிரச்னை உள்ளது. தற்போது நாட்டோ அமைப்பில் உக்ரைன் சேர முயற்சிக்கிறது. இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக உள்ளதால் ரஷ்யா கோபமடைந்துள்ளது.

படைகள்
இந்நிலையில், உக்ரைன் எல்லையில் படைகளைக் குவித்தது ரஷ்யா. பதற்றம் அதிகரித்ததால், உக்ரைனும் படையைக் குவித்தது. இதையடுத்து கடந்த ஆண்டு இறுதியில் இரு நாட்டுப்படைகளும் எல்லையில் குறைந்த அளவு படைகளைத் திரும்பப்பெற்றது. இந்நிலையில், மீண்டும் இரு நாட்டுப் படைகளும் எல்லையில்
வீரர்களைக் குவித்தது.

உக்ரைன்
இந்நிலையில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியது. ரஷ்யாவுக்கு ஆதரவாக சீனா களம் இறங்கியது. இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பை தெரிவித்தது. இதனால் ஐரோப்பாவுக்கு பாதிப்பு என்று அமெரிக்கா தெரிவித்தது. இந்நிலையில் குறைந்த அளவிலான படைகளைத் திரும்பப் பெற்றது ரஷ்யா. ஒரு லட்சத்துக்கு அதிகமான படைகள் இன்னும் உக்ரைன் கிரிமியா பகுதியில் இருப்பதால், அமெரிக்கா ரஷ்யாவை எச்சரித்தது.

திரும்பப் பெற்றது
இந்நிலையில், இன்று காலை உக்ரைன் கிரியாமா பகுதியில் இருந்து படைகள் வெளியேறும் வீடியோவை ரஷ்யாவின் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ளது. பீரங்கிகள் மற்றும் ராணுவ வீரர்கள் ரயில்வே ப்ரிட்ஜைக் கடந்து போகும் வீடியோ வெளியாகியுள்ளது. இவை நிரந்தர தளத்துக்குத் திரும்புவதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக தயார்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

நேட்டோ சந்தேகம்
"பல தசாப்தங்களாக ஐரோப்பாவில் நாம் எதிர்கொண்டுள்ள மிகக் கடுமையான பாதுகாப்பு நெருக்கடி" என்று ரஷ்யாவின் படை குவிப்பை பற்றி நேட்டோ வர்ணித்துள்ளது. நேட்டோ நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் புதன்கிழமையான இன்று, பிரஸ்ஸல்ஸில் சந்திக்க உள்ளனர். புதன்கிழமை கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், "ரஷ்ய ராணுவம் திரும்ப செல்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும்" என்றார். "இதுவரை, எல்லையில் படை குறைப்பை நாங்கள் பார்க்கவில்லை. ரஷ்யா தொடர்ந்து ராணுவ குவிப்பை அதிகரித்து வருகிறது," என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications