அமெரிக்க பிளாக் ஹாக் ஹெலிகாப்டரில் தொங்கவிடப்பட்ட சடலம்.. தாலிபான்கள் அட்டூழியம்.. பகீர் வீடியோ!!
காபூல்: கந்தகாரில் அமெரிக்காவின் பிளாக் ஹாக் ஹெலிகாப்டரில் மொழிபெயர்ப்பாளர் ஒருவரது சடலத்தைத் தொங்கவிட்டபடி தாலிபான்கள் பறந்த பகீர் காட்சிகள் ட்விட்டரில் வைரலாகியுள்ளது.
Recommended Video
கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கனில் அமெரிக்கா இருந்த வரை தாலிபான்களின் ஆதிக்கம் அதிகரிக்காமல் இருந்தது. ஆனால், என்று அமெரிக்க வீரர்கள் வெளியேற தொடங்கினார்களோ அன்றே ஆப்கன் படைகள் மீது தாலிபான்கள் தங்கள் தாக்குதலைத் தொடங்கினர்.
தாலிபான்கள் மிக வலுவாக இருந்ததால், மளமளவென பல்வேறு பகுதிகளைக் கைப்பற்றினர். முதலில் எல்லைகளைக் கைப்பற்றிய தாலிபான்கள், அதன் பிறகு ஊரக பகுதிகளையும், கடைசியாக நகர்ப் பகுதிகளையும் வரிசையாகக் கைப்பற்றினர். வெறும் ஒரு சில வாரங்களில் ஒட்டுமொத்த ஆப்கனை கைப்பற்றினர்.

தாலிபான்கள் உறுதி
ஆகஸ்ட் 31ஆம் தேதி தான் ஆப்கனில் இருந்து அமெரிக்கப் படைகள் முற்றிலுமாக வெளியேறியது. ஆனால் அதற்கு முன்னதாகவே கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதியே தலைநகர் காபூலை தாலிபான்கள் கைப்பற்றினர். ஆப்கன் அதிபராக இருந்த அஸ்ரப் காணி ஐக்கிய அமீரகத்தில் தஞ்சம் புகுந்தார். வெறும் ஒரு சில வாரங்களில் ஆப்கானிஸ்தானில் தலைகீழ் மாற்றம் நடந்துள்ளது. முந்தைய ஆட்சி போல இல்லாமல் இந்த முறை அனைவரையும் அரவணைத்து ஆட்சி நடத்தப்படும் எனத் தாலிபான்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டரில் தொங்கவிடப்பட்ட சடலம்
இருப்பினும்,தாலிபான்கள் சொல்வதைச் செய்வது போலத் தெரியவில்லை. நேற்று ஆகஸ்ட் 31ஆம் தேதி அமெரிக்காவின் கடைசி வீரரும் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறினார். இதையடுத்து தாலிபான்கள் துப்பாக்கி குண்டுகளை முழங்கி ஆரவாரத்துடன் கொண்டாடித் தீர்த்தனர். இந்நிலையில், கந்தகார் நகரில் அமெரிக்க பிளாக் ஹாக் ஹெலிகாப்டரில் சடலம் ஒன்றைத் தொங்கவிட்டபடி தாலிபான்கள் பறந்த பகீர் வீடியோ இணையத்தில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

தலிப் டைமஸ்
தாலிபான்களின் அதிகாரப்பூர்வ ஆங்கில ட்விட்டர் பக்கமான தலிப் டைம்ஸில் இந்த வீடியோவை வெளியிடப்பட்டது. அதில் "நமது விமானப் படை. இந்த நாளில் இஸ்லாமிக் எமிரேட்ஸின் விமானப்படை ஹெலிகாப்டரில் கந்தகார் நகரை ரோந்து செய்தபோது." எனப் பதிவிட்டுள்ளது. ஆப்கனாஸ்தானுக்கு தாலிபான்கள் இஸ்லாமிக் எமிரேட்ஸ் ஆப் ஆப்கானிஸ்தான் எனப் பெயரிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவுக்கு உதவியவர்?
ட்விட்டரில் வெளியாகியுள்ள இந்த வீடியோ பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அமெரிக்காவுக்கு உதவிய மொழிப்பெயர்ப்பாளர் ஒருவரைத் தாலிபான்கள் கொன்று, அவரது சடலத்தை இப்படி ஹெலிகாப்டரில் தொங்கவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அது கொல்லப்பட்ட ஒருவரின் சடலமா அல்லது வெறும் பொம்மையா என்பது குறித்து உறுதியாகத் தெரியவில்லை. அதேநேரம் தாலிபான்களின் இந்த செயலை பலரும் கடுமையாகக் கண்டித்துள்ளனர்.

அமெரிக்க எம்பி கண்டனம்
இது பற்றி அமெரிக்காவின் குடியரசுக் கட்சி எம்பி டெட் க்ரூஸ் தனது ட்விட்டரில், "ஆப்கனில் ஜோ பைடனால் நிகழ்ந்துள்ள பேரழிவின் ஒரு சாட்சி தான் இந்த வீடியோ. அமெரிக்க பிளாக் ஹாக் ஹெலிகாப்டரில் ஒருவரைத் தொங்கவிட்டு தாலிபான்கள் விமானத்தைப் பறக்கவிட்டுள்ளனர். துயரமான நிகழ்வு" எனப் பதிவிட்டுள்ளார். தாலிபான்களுக்கு எதிராகப் போராட அமெரிக்கா கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கன் ராணுவத்திற்குப் பல நவீன ஆயுதங்களை அளித்து வந்தது. ஆனால், அனைத்தும் ஒரு சில வாரங்களிலேயே இப்போது தாலிபான்கள் கைவசம் சென்றுவிட்டன. அமெரிக்காவின் இந்த பிளாக் ஹாக் ஹெலிகாப்டரும் தாலிபான்கள் வசம் இப்படி தான் சென்றுள்ளது.












Click it and Unblock the Notifications