புதியதாக உருமாறும் கொரோனா வைரஸ்.. இன்னொரு அலை வருமா? உலக சுகாதார மையம் என்ன சொல்கிறது?
ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று கடும் பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது தடுப்பூசி காரணமாக உலக நாடுகள் தொற்றிலிருந்து மெல்ல மீண்டு வருகின்றன.
இந்நிலையில் ஒமிக்ரான் வகையில் புதிய வைரஸ் உருவாகியுள்ளதாகவும் இது மக்களிடையே வேகமாக பரவும் என்றும் உலக சுகாதார மையத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.
ஆனால் இதற்கு இந்திய விஞ்ஞானிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதுபோன்று வைரஸ் எதுவும் உருவாகவில்லையென்று அவர்கள் கூறியுள்ளனர்.

பாதிப்பு
கடந்த 2019ல் தொடங்கிய கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதிலும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளிடையே இந்த தொற்று ஏற்படுத்திய பாதிப்புகளின் தாக்கம் இன்றளவும் நீடித்து வருகிறது. இந்த தொற்றால் தற்போது வரை சுமார் 65.8 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கையில் உலக வல்லரசான அமெரிக்கா முதல் இடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் இருக்கிறது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானியான சௌமியா சுவாமிநாதன், "ஒமிக்ரான் வகையில் மற்றொரு வைரஸ் உருவாகியுள்ளது. இது வேகமாக பரவும் தன்மை கொண்டது" என்று கூறியுள்ளார்.

புதிய வைரஸ்
அதாவது, "ஒமிக்கிரானில் 300க்கும் அதிகமான துணை வகைகள் உள்ளன. இதில் XBB எனப்படும் துணை வகை வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டது. இது முந்தை வைரஸிலிருந்து மாறுபட்டிருப்பதால் நோயெதிரப்பு திறன் அதிகமாக இருந்தாலும் மனிதர்களை தாக்கும் தன்மை கொண்டதாகும். அதாவது தடுப்பூசி எடுத்துக்கொண்டிருந்தாலும் இதிலிருந்து தப்பிக்க முடியாது. அதேபோல BA.5 மற்றும் BA.1 எனப்படும் மற்றொரு கொரோனா தொற்று வைரஸையும் கண்காணித்து வருகிறோம். இந்த வைரசும் வேகமாக பரவக்கூடியது" என விஞ்ஞானி சௌமியா கூறியுள்ளார். இதனை தடுப்பதற்கு கண்காணிப்பு மற்றும் தனிமைப்படுத்துதல் மட்டுமே தீர்வு என்றும் அவர் கூறியுள்ளார்.

எமர்ஜென்சி
பல நாடுகளில் தொற்று பாதிப்பை கண்காணிப்பது குறைந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர், இதைத் தவிர நமக்கு வேறு வழி இல்லையென்றும், மரபணு முறையில் பரிசோதனையை மீண்டும் அதிகரிக்க வேண்டியுள்ளது என்றும் கூறியுள்ளார். கோரோனா தொற்று பாதிப்பை பொறுத்த அளவில் நாம் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இப்போதும் அதே அவரசநிலையில்தான் இருக்கிறோம் என்று WHO தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியிருந்ததையும் விஞ்ஞானி சௌமியா குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "இன்று வரையிலும் உலகம் முழுவதும் ஒவ்வொருவாரமும் 8,000 முதல் 9,000 இறப்புகள் கொரோனா தொற்றால் ஏற்படுகின்றன. இந்நிலையில் தொற்று பாதிப்பு முடிந்துவிட்டது என எப்படி கூறமுடியும்?

மறுப்பு
இன்னமும் நாம் எமர்ஜென்சியில்தான் இருக்கிறோம். ஆனால் ஒரே நல்ல விஷயம் என்னவெனில் தற்போது இந்த தொற்றை எதிர்கொள்ள நம்மிடையே நிறைய மருத்துவ உபகரணங்கள் இருக்கின்றன. அதேபோல தடுப்பூசியும் அதிக அளவில் இருக்கிறது." என்று கூறியுள்ளார். ஆனால் இந்த புதிய வைரஸ்கள் பரவியதற்கான எந்த ஆதாரங்களும் தற்போது வரைக கிடைக்கவில்லை என இந்திய விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். கொரோனா தொற்று உயிரிழப்புகளை மட்டுமல்லாது பொருளாதார ரீதியிலும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் வூஹான் மாகாணத்திலிருந்துதான் இந்த தொற்று பரவியதாக கூறப்பட்ட நிலையில் தற்போது வரை அந்நாட்டில் வெறும் 5,226 பேர்தான் உயிரிழந்துள்ளனர். அந்த அளவுக்கு அந்நாட்டில் கட்டுப்பாடுகள் தற்போது வரை நீடிக்கின்றன. ஆனால் இந்தியாவில் இந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 5.29 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications