For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகின் குட்டி நாட்டின் மக்கள் தொகை 11 பேர்!

By BBC News தமிழ்
|

உலகின் மாபெரும் பேரரசுகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். பல காலணி நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி, சூரியன் அஸ்தமிக்காத நாடு என்று அழைக்கப்பட்ட பிரிட்டன் சாம்ராஜியம், சீனாவில் இருந்து இந்துஸ்தான் வரை எல்லையை விரிவாக்கியிருந்த செங்கிஸ்தானின் மங்கோலிய பேரரசு. காபூலின் கந்தஹாரில் இருந்து கர்நாடகம் வரை பரவியிருந்த முகலாயர்களின் சாம்ராஜியம்.

ஆனால் உலகிலேயே மிகச் சிறிய ராஜியம் எது? அதன் அரசர் யார் என்று தெரியுமா? உலகின் சிறிய ராஜியத்தின் மக்களின் எண்ணிக்கை வெறும் 11 தான். இந்த ராஜா ஓர் உணவு விடுதியை நடத்துகிறார். சாதாரண கால்சட்டை அணிந்து, ரப்பர் செருப்பணிந்து வாழ்ந்துவரும் அரசரின் ஆட்சிக்கு உட்பட்டது தவோலாரா.

இத்தாலியின் சர்டானியா பிராந்தியத்தின் அருகில் மத்திய தரைகடல் பகுதியில் அமைந்துள்ள ஒரு குட்டித்தீவு தவோலாரா. இத்தாலியால் ஒரு நாடாக அங்கீகரிக்கப்பட்ட இந்தத் தீவின் ஒட்டுமொத்த பரப்பளவே ஐந்து சதுர கிலோமீட்டர்தான்.

ராஜாவின் பெயர் எந்தோனியோ பர்த்லியோனி. தவோலாராக்கு சென்றால் அரசரை பார்க்க அரசவைக்குச் செல்லவேண்டாம். எந்தவித முன்னனுமதியும் இன்றி அரசரை சுலபமாகவே பார்த்துவிடலாம். ஆடம்பரமில்லாமல் இயல்பாக தோற்றமளிக்கும் அரசரே தீவில் உள்ள ஒரேயொரு உணவு விடுதிக்கும் உரிமையாளர். சுற்றுலாப் பயணிகளுக்கு படகுச் சவாரி ஓட்டுபவரும் அவரே.

180வது நிறுவக தினத்தை கொண்டாடும் தவோலாரா ராஜ்ஜியம் மிகச் சிறிய தீவாக இருப்பதால் அதை நாடு என்று சொல்வது வேடிக்கையானதாக தோன்றலாம். ஆனால், அரசர் அந்தோனியோ பர்த்லியோனி தனது ராஜ்ஜியத்தைப் பற்றி பெருமைப்படுகிறார்.

இத்தாலியில் வசித்துவந்த அந்தோனியா பர்த்திலியோனியின் முப்பாட்டனார் குஸெப் பர்த்லியோனி சகோதரிகளான இருவரை திருமணம் செய்துகொண்டார். அப்போது இத்தாலி ஒரு தனி நாடல்ல. சர்டீனியாவில் ஒரு பாகமாக இருந்த இத்தாலியில் இரண்டு திருமணம் செய்து கொள்வது சட்டப்படி குற்றம். எனவே அவர் 1807 ஆம் ஆண்டில் இத்தாலியில் இருந்து இந்தத் தீவில் குடியேறினார்.

ஆடு வேட்டை

ஜெனோவா நகரில் வசித்து வந்த குஸெப் பர்த்லியோனிக்கு, இந்தத் தீவில் இருக்கும் மின்னும் பற்கள் கொண்ட ஆடுகளைப் பற்றி தெரிந்துக்கொண்டார். இந்த அரிய வகை ஆடுகள் உலகிலேயே இங்கு மட்டுமே வசிக்கக்கூடியவை. இந்த ஆடுகள் பற்றிய தகவல் இத்தாலி வரை சென்றது. சர்டீனியாவின் ராஜா கார்லோ அல்பர்ட்டோ இந்த ஆடுகளை பார்க்கவும், வேட்டையாடவும் தவோலாரா தீவுக்கு வருகைபுரிந்தார்.

1836ஆம் ஆண்டில் தீவுக்கு வந்தபோது தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட கார்லோ அல்பர்டோ, "நான் சார்டீனியோவின் ராஜா" என்று சொன்னாராம். அவரிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட குசெப்பின் மகன் பாவோலோ, "நான் தவோலாராவின் ராஜா" என்று கூறினார் என்று மூதாதையர்களின் தைரியத்தை பெருமையுடன் நினைவுகூர்கிறார் அந்தோனியோ.

மத்திய தரைக்கடல்

பாவோலோ, கார்லோ அல்பர்டோவுக்கு தீவு முழுவதையும் சுற்றிக் காண்பித்து, இந்த சிறப்பு ஆடுகளை வேட்டையாட உதவியும் செய்தார். தீவை மூன்று நாட்கள் சுற்றிப் பார்த்த அரசர் கார்லோ அல்பர்டோ நாடு திரும்பியதும், தவோலாரவை தனிநாடாக அறிவித்து சாசனம் எழுதிக்கொடுத்தார். அதைத்தொடர்ந்து, தன்னை புதிய ராஜ்ஜியத்தின் அரசராக பாவோலா அறிவித்துக்கொண்டார். புதிதாக உதித்த ராஜ்ஜியத்தின் மொத்தப் பிரஜைகள் 33 பேர் மட்டுமே.

அரசரான பாவோலோ இறப்பதற்கு முன்னதாக அரச கல்லறையை அமைத்தார். அங்கு தான் புதைக்கப்பட்ட பிறகு, கல்லறையின் மேற்புரத்தில் கிரீடம் ஒன்றை அமைக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டார். அரசராக வாழ்ந்தபோது, ஒருமுறை கூட மணிமகுடம் சூடாத பாவோலோ, கல்லறைக்குள் அடங்கிய பிறகு அதன்மேல் மகுடம் அமைக்கப்பட்டது என்பது சுவராசியமான தகவல்.

அமைதி ஒப்பந்தம்

இத்தாலியின் நிறுவனர் என்று அழைக்கப்படும் குசெப் கைரிபால்டி உட்பட பல நாட்டு அரசர்களுடன் தவோலாரா சமரசங்களை செய்து கொண்டது. சர்டீனியாவின் அரசராக இரண்டாம் விக்டோரியா இமானுவெல், தவோலாராவுடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டார்.

19ஆம் நூற்றாண்டில் பிரிட்டன் மகாராணி விக்டோரியா, உலக அரசர்கள் அனைவரின் புகைப்படங்களையும் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதற்காக உலகம் முழுவதும் பயணித்த கப்பல், தாவோலாராவிற்கும் சென்று அரசரின் புகைப்படத்தை பெற்றது. அன்றுமுதல் இன்றுவரை இங்கிலாந்தின் பக்கிம்ஹாம் அரண்மனையை அலங்கரிக்கும் புகைப்படங்களில் தவோலாரா அரசரின் புகைப்படமும் ஒன்று.

பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள டோங்கா நாடு 748 கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது
TORSTEN BLACKWOOD/AFP/GETTY IMAGES
பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள டோங்கா நாடு 748 கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது

நேட்டோ ராணுவத் தளம்

இன்றும் அதே புகைப்படம் அந்தோனியாவின் உணவு விடுதியை அலங்கரிக்கிறது. 1962-ல், நேட்டோவின் ராணுவத்தளமாக மாறிய பிறகு இந்த சிறிய ராஜ்ஜியத்தின் இறையாண்மை முடிவுக்கு வந்துவிட்டது. பல இடங்களுக்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இத்தாலி எப்போதுமே தவோலாராவை தனது நாட்டின் ஒருபகுதி என முறைப்படி குறிப்பிட்டதேயில்லை.

உலகின் எந்தவொரு நாடும் தவோலாராவை ஒரு நாடாக ஏற்றுக்கொள்ளவில்லை. தவோலாராவின் அரசர் அந்தோனியோவும் அவரது குடும்பத்தினரும் இத்தாலியில் இருந்து இந்த தீவுக்கு படகு சேவைகளை வழங்குகின்றனர். உலகில் இங்கு மட்டுமே காணக்கிடைக்கும் தனிச்சிறப்புத்தன்மை கொண்ட ஆடுகளையும், அழிவின் விளிம்பில் இருக்கும் ஒரு கழுகு இனத்தையும் பார்க்க பெருமளவிலான மக்கள் இங்கு ஆவலுடன் சுற்றுலாப் பயணம் மேற்கொள்கின்றனர்.

அரசரின் அலுவலகப்பணி
AFP/GETTY IMAGES
அரசரின் அலுவலகப்பணி

பரம்பரைத் தொழில்

தீவு நாடான தவோலாராவை சுற்றி இருக்கும் கடல்பகுதியில் பல்வேறு வகையிலான கடல்வாழ் உயிரனங்கள் சுற்றுலாப் பயணிகளை கவர்கின்றன. அந்தோனியோவும் அவரது மருமகனும் படகு போக்குவரத்தை நிர்வகிக்க, மற்றொரு உறவினர் மீன்பிடித் தொழிலிலும், இன்னும் ஒருவர் வேட்டைத் தொழிலிலும் ஈடுபட்டுள்ளனர்.

ராஜ்ஜிய பரிபாலனம் என்பது குடும்பத்தை நிர்வகிப்பது போல என்று அந்தோனியா சொல்கிறார். சுற்றுலா அதிகரித்து வருவதால் கணிசமான வருவாய் ஈட்டுவதாக கூறும் அந்நாட்டு அரசர், சாதாரண வாழ்க்கையே என்றும் சிறந்தது என்கிறார்.

உள்ளூர் மக்கள்
GIANLUIGI GUERCIA/AFP/GETTY IMAGES
உள்ளூர் மக்கள்

தினமும் காலையில் குடும்பத்தினரின் கல்லறைகளுக்கு சென்று மலர் தூவி வழிபடுவது அந்தோனியாவுக்கு பிடித்தமானது. ஆனால் அசல் பூக்களை எடுத்துச் சென்றால், ஆடுகள் மென்றுவிடுவதால், பிளாஸ்டிக் மலர்களையே கல்லறைகளில் வைத்து வழிபடுகிறார்.

தொழில்நுட்பரீதியில் பார்த்தால் அந்தோனியா மற்றும் குடும்பத்தினர் இத்தாலியின் குடிமக்கள். தனது ஆட்சிக்கு அங்கீகாரம் வழங்கும்படி, டியூக் ஆஃப் சவாயிடம் கோரிக்கை வைக்கலாமா என ஒரு காலகட்டத்தில் யோசித்த அந்தோனியா, பிறகு அதனை கைவிட்டுவிட்டார்.

தவலோராவின் அரசர் கேட்கிறார் "சிறிய நாடாக இருந்தாலும், எங்கள் முன் விரிந்திருக்கும் மிகப்பெரிய கடல் சாம்ராஜ்ஜியத்தின் கோட்டையாக தவோலாரா திகழ்கிறது. இதைவிடப் பெரிய பேறு வேறென்ன இருக்கமுடியும்?"

கார் மற்றும் பேருந்து
CHRIS JACKSON/GETTY IMAGES
கார் மற்றும் பேருந்து

தவோலாரா போன்ற மக்கள் வசிக்கும் வேறு சில சிறிய ராஜ்ஜியங்கள்

1. ரெடோண்டா, இங்கிலாந்தின் செளத்ஹாம்ப்டனில் அமைந்திருக்கும் இது, புகையிலைத் தடையில் இருந்து விலகியிருப்பதற்காக தன்னைத்தானே தனி ராஜ்ஜியமாக அறிவித்துக்கொண்டது.

2. பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள டோங்கா 748 கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. ஒரு லட்சத்து ஆறாயிரம் மக்கள் வசிக்கும் இந்த நாடு, 1773இல் பிரிட்டனின் கேப்டன் ஜேம்ஸ் குக்கால் கண்டுபிடிக்கப்பட்டது. கேப்டன் குக் இந்த தீவை நட்புத் தீவு என்று அழைத்தார். ஆனால், இங்கு வசித்தவர்களோ கேப்டன் குக்கை கொல்ல நினைத்தார்கள்.

3. போர்னியோத் தீவில் அமைந்துள்ள புரூணை ஐந்தாயிரத்து 765 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு மக்களிடம் எந்தவித வரியும் வசூலிக்கப்படுவதில்லை. புரூணை சுல்தான், உலகின் மிகப் பெரிய செல்வந்தர்களில் ஒருவர்.

4. ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஸ்வாசிலாந்து 17 ஆயிரத்து 360 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இந்த நாட்டின் அளப்பரிய இயற்கை அழகினால் இது மர்மங்கள் சூழ்ந்த நாடு என்று அழைக்கப்படுகிறது. ஸ்வாசிலாந்தின் மொத்த மக்கள்தொகை சுமார் 13 லட்சம்.

5. 30 ஆயிரம் கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்திருக்கும் லெசோதே, தென்னாப்பிரிக்காவால் சூழப்பட்டது. கடற்கரை மட்டத்தைவிட கீழே அமைந்திருக்கும் இந்த நாட்டின் மக்கள்தொகை சுமார் இருபது லட்சம்.

சீனாவின் புதிய பட்டுப்பாதை வெறும் அபிலாஷை திட்டமா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

BBC Tamil
English summary
World's smallest kingdom Tavolara has just 11 citizens. 83-year-old former fishermen is the ruler of the kingdom.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X