செய்வதெல்லாம் பாஜக.. சொந்தம் கொண்டாடுவது ஸ்டாலின்.. காட்டமாக விமர்சித்த மத்திய அமைச்சர்! ஓஹோ ரைட்டு!
கிருஷ்ணகிரி : மத்திய அரசு தமிழகத்துக்கு செய்யும் நல்ல திட்டங்களுக்கு, ஸ்டாலின் உரிமை கொண்டாடி அதற்கான பலனை அனுபவிக்க முயற்சி செய்கிறார் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் வந்த மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார்.
அதன்பிறகு, பாஜக கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று, 2024 தேர்தல் பணிகள், பூத் கமிட்டி நியமனங்கள் பற்றி கேட்டறிந்து ஆலோசனை கூறியுள்ளார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கிரிராஜ் சிங், ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல வகைகளில் கூட்டாட்சி அமைப்பை சிதைத்து நாசமாக்குகிறது எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

கிருஷ்ணகிரியில் மத்திய அமைச்சர்
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறை சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்து ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு மத்திய ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி முன்னிலை வகித்தார். இந்த ஆய்வுக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சித்துறை, வழங்கல் மற்றும் நுகர்வோர் துறை உட்பட பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

அமைச்சர் அட்வைஸ்
மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் உரிய பயனாளிகளுக்கு சென்றடைய வேண்டும். இதே போல் கட்டுமான பணிகள் விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விட வேண்டும். மேலும், பசுமை கிராம மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களிலும் மரக்கன்றுகளை நடுதல், கிராமப்புற நூலகங்கள், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மேம்படுத்தும் வகையில் அங்கன்வாடி மையங்களில் முருங்கை மரக்கன்றுகளை நட வேண்டும் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் அறிவுறுத்தினார்.

பாஜக கூட்டத்தில்
பின்னர், மாலையில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக சார்பில், ஓசூரில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டல் பங்கேற்றார் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் 2024 லோக்சபா தேர்தலுக்கான பணிகள், பூத் கமிட்டி நியமனங்கள் பற்றி கேட்டறிந்து ஆலோசனைகளை கூறியுள்ளார் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங். மாவட்டத்தில் கட்சியின் நிலை பற்றிய விவரங்களையும் நிர்வாகிகளிடம் அவர் கேட்டறிந்தார்.

மோடி படம் இல்லை
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கிரிராஜ் சிங், "நான் பார்த்தவரையில் தமிழக அரசு அலுவலகங்களில், பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர்களின் படங்கள் வைக்கப்படாமல் உள்ளன. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தொடர்ந்து, பல வகைகளில் கூட்டாட்சி அமைப்பை சிதைத்து நாசமாக்குகிறது. தமிழக மக்கள், தி.மு.கவுக்கு உரிய தண்டனையை விரைவில் வழங்க வேண்டும்.

காங்கிரஸை விட பல மடங்கு அதிகம்
பாஜக தலைமையிலான மத்திய அரசு கடந்த 8 ஆண்டுகளில் தமிழக மக்களுக்கான பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி, பல்லாயிரம் கோடி நிதி வழங்கியுள்ளது. காங்கிரஸ் கூட்டணி அரசு வழங்கியதை விட பல மடங்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணி அரசு தமிழகத்திற்கு ஆண்டுக்கு 28 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியது, ஆனால், பாஜக அரசு 1.2 லட்சம் கோடி நிதி வழங்கியுள்ளது.

ஸ்டாலின் சொந்தம் கொண்டாட முயற்சிக்கிறார்
தமிழகத்தின் உள்கட்டமைப்புக்காக, 874-க்கும் மேற்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிப்பதாக, திமுக மற்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவது ஏற்புடையதல்ல. மத்திய அரசு தமிழகத்துக்கு செய்யும் நல்ல திட்டங்களுக்கு, ஸ்டாலின் உரிமை கொண்டாடி அதற்கான பலனை அனுபவிக்க முயற்சி செய்கிறார். பாஜக தலைமையிலான மத்திய அரசு, ஒரு போதும் தமிழக மக்களை புறக்கணிக்காது" எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்து அமைச்சர்கள்
பாஜக, தமிழகத்தில் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தி லோக்சபா தேர்தலில் கணிசமான இடங்களைக் கைப்பற்ற முயன்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மத்திய அமைச்சர்கள் அதிகளவில் தமிழ்நாட்டுக்கு வருகை தந்தபடி உள்ளனர். அந்தவகையிலேயே மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கும் தமிழ்நாட்டுக்கு வந்து பாஜகவினரோடு ஆலோசனை நடத்தியுள்ளார். மேலும், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு நிறைய திட்டங்களை செயல்படுத்துவதாகவும், திமுக அரசு பலனைப் பெறுவதாகவும் விமர்சித்துக் காட்டமாகப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications