வேண்டாம் என எச்சரித்த ரிஷி சுனக்.. கேட்காத லிஸ் ட்ரஸ்.. பறிபோன பிரிட்டன் பிரதமர் பதவி.. முழுபின்னணி
லண்டன்: பிரிட்டன் பிரதமாக பொறுப்பேற்று 45 நாட்கள் மட்டுமே செயல்பட்ட நிலையில் லிஸ் ட்ரஸ் ராஜினாமா செய்துள்ளார். இவர் ராஜினாமா செய்ததன் பின்னணியில் உள்ள முக்கிய காரணம் வெளியாகி உள்ளது.
பிரிட்டன் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார். கொரோனா விதிகளை மீறியது, ஊழல், முறைகேடு புகாரால் அவர் தனது பதவியை இழந்தார்.
இதையடுத்து கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் மற்றும் பிரிட்டன் பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் முடிவுகள் செப்டம்பர் 5ல் இறுதிக்கட்ட தேர்தல் நடந்தது.

பொருளாதார சவால்
இதில் அந்நாட்டின் முன்னாள் நிதி அமைச்சரான இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ் ஆகியோர் களத்தில் இருந்தனர். இதில் லிஸ் ட்ரஸ் வெற்றி பெற்றார். ரிஷி சுனக் தோல்வியடைந்தார். இதையடுத்து அவர் முறைப்படி லிஸ் ட்ரஸ் பிரதமராக பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார். இவர் முன்பு பெரும் சவால் இருந்தது. அதாவது கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிப்பது தான் அந்த சவாலாகும்.

வரி குறைப்பு நடவடிக்கை
இதனை சீர்செய்யும் வகையில் தேர்தல் வேளையில் அறிவித்த வாக்குறுதிப்படி மினி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை நிதி அமைச்சராக இருந்த குவாசி குவார்டெங் கடந்த மாதம் 23ல் தாக்கல் செய்தார். இதன்மூலம் பெரு நிறுவனங்கள், முதலீட்டு சந்தைகளின் வரிகள் குறைக்கப்பட்டன. இதன்மூலம் நாட்டின் உற்பத்தி அதிகரித்து பொருளாதாரம் வளரும் என அவர் நினைத்தார். ஆனால் இந்த நடவடிக்கை மிகவும் மோசமானதாக மாறியது.

பொருளாதார மந்த நிலை
அதாவது நாட்டின் பொருளாதார நெருக்கடி என்பது பொருளாதார மந்த நிலையை நோக்கி சென்றது. அதோடு பிரிட்டனின் உள்ளூர் கரன்சியான பவுண்ட்டின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்தது. அதோடு கடன் வாங்கும் விகிதங்கள் என்பது அதிகரித்தன. மொத்தம் ஜிபிபி 45 பில்லியன் மதிப்புக்கு வரிக்குறைப்புகள் செய்யப்பட்டன. ஆனால் அதனை ஈடுசெய்யும் வகையில் புதிய வருவாய் திட்டங்கள் இல்லை. இது விமர்சனங்களை கிளப்பியது.

கட்சிக்குள் அதிருப்தி
அதோடு இக்கட்டான நிலையில் லிஸ் ட்ரஸ் சிக்கினார். நிதி அமைச்சராக இருந்த குவாசி குவார்டெங்கை பிரதமர் லிஸ் டிரஸ் நீக்கினார். இவருக்கு மாற்றாக முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெர்மி ஹன்டை புதிய நிதியமைச்சராக நியமனம் செய்யப்பட்டார். இருப்பினும் கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் அதிருப்தி ஏற்பட்டது. தவறான நபரை பிரதமராக தேர்வு செய்துவிட்டதாக அக்கட்சியின் எம்பிக்கள் பத்திரிகைகளில் கருத்து தெரிவித்து வந்தனர்.

இன்று ராஜினாமா
இதனால் பிரிட்டன் அரசியலில் கடந்த ஒரு வாரமாக குழப்பமான சூழல் நிலவியது. லிஸ் ட்ரஸ் விரைவில் ராஜினாமா செய்வார் என்ற செய்திகள் வெளியாகி வந்தன. இதற்கிடையே தான் மினி பட்ஜெட்டில் கூறிய வரி குறைப்பு நடவடிக்கையை பிரதமர் லிஸ் ட்ரஸ் திரும்ப பெற்றார். இந்நிலையில் இன்று பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக லிஸ் ட்ரஸ் அறிவித்துள்ளார்.

ரிஷி சுனக் அடித்த எச்சரிக்கை மணி
முன்னதாக இத்தகைய வரி குறைப்பு கொள்கையை இந்திய வம்சவாளியை சேர்ந்த பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக் விமர்சனம் செய்து இருந்தார். இத்தகைய பொருளாதார கொள்கை தொடக்கத்தில் பலன் அளித்தாலும் கூட நாட்டின் நீண்டகால வளர்ச்சிக்கு பயன்தராது. இதனால் இதனை கைவிட வேண்டும் என எச்சரிக்கை மணி அடித்தார். மேலும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இதுபோன்ற வாக்குறுதிகள் ஆபத்தானது என ரிஷி சுனக் தேர்தல் வேளையில் கூறியிருந்தார். இந்நிலையில் அவர் கூறியது போல் வரி குறைப்பு செயலே லிஸ் ட்ரஸின் பிரதமர் பதவியை பறித்துள்ளது. இதற்கிடையே தான் பிரிட்டனின் அடுத்த பிரதமர் பதவிக்கான போட்டியில் ரிஷி சுனக்கும் ஒருவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications