குயின் எலிசபெத் உடலுக்கு பாதுகாப்பு.. திடீரென்று மயங்கி விழுந்த காவலாளி.. ஒரே பரபரப்பு.. என்னாச்சி
லண்டன்: லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கில் மகாராணி எலிசபெத்தின் உடல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலாளி திடீரென்று மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரிட்டன் மகாராணியாக இருந்தவர் 2ம் எலிசபெத். இவர் 1952ம் ஆண்டில் தனது 21வயது வயதில் அரியணை ஏறிய நிலையில் 70 ஆண்டு காலமாக பிரிட்டன் மகாராணியாக செயல்பட்டு வந்தார்.
வயது முதிர்வு காரணமாக அவர் சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். அரசு விழா, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் தவிர்த்து வந்தார்.

காலமான மகாராணி
இந்நிலையில் தான் நீண்டகாலத்துக்கு பிறகு சமீபத்தில் பிரிட்டன் பிரதமராக தேர்வான லிஸ் ட்ரஸை மட்டும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பு நடந்த 2 நாட்களுக்கு பிறகு கடந்த 8 ம் தேதி இரவில் உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவையொட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியாவில் ஒருநாள் துக்க தினம் அனுசரிக்கப்பட்டது.

பொதுமக்கள் அஞ்சலி
மகாராணி 2ம் எலிசபெத்துக்கு செப்டம்பர் 19ம் தேதி இறுதி சடங்குகள் நடத்தப்பட உள்ளது. 96 வயதில் மறைந்துள்ள பிரிட்டன் மகாராணிக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது இறுதி சடங்குகள் லண்டனில் நடைபெற உள்ளது. இதற்காக அவரது உடல் நேற்று பக்கிங்காம் அரண்மனைக்கு கொண்டு வரப்பட்டது. அதன்பிறகு அங்கிருந்து வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலுக்கு மகாராணி 2ம் எலிசபெத்தின் உடல் கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மயங்கி விழுந்த காவலாளி
இந்நிலையில் தான் வெஸ்ட்மின்ஸ்டரில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் அடங்கிய பெட்டியை சுற்றி காவல் காக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் வரிசையாக வந்து மவுன அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதற்கிடையே தான் மகாராணியின் உடல் வைக்கப்பட்டுள்ள பெட்டியை சுற்றி நின்ற ஒரு காவலாளி திடீரென்று மயங்கி விழுந்தார். உடல் வைப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள போடியத்தில் அவர் விழுந்தார்.

ஓடிவந்த காவலர்கள்
இதையடுத்து அங்கு நின்ற 3 காவலர்கள் ஓடிவந்து மயங்கிய காவலாளியை உடனடியாக மீட்டு மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் காவல் பணியில் ஆட்கள் மாறும் நிகழ்வின்போது அவர் மயங்கியதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே காவலாளி மயங்கி நிலையில் நேரலை நிகழ்ச்சி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications