முஸ்லிம் பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்தியது பாஜக அரசுதான்: உபி தேர்தல் பிரசாரத்தில் மோடி பேச்சு
லக்னோ: முத்தலாக் தடை சட்டம் முஸ்லிம் பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சியின் கீழ் முஸ்லிம் பெண்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள், அங்கு பள்ளி, கல்லூரி செல்லும் முஸ்லிம் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று பிரதமர் மோடி பேசியிருக்கிறார்.
உத்தரப்பிரதேசத்தில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று கான்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.

பிரதமர் மோடி
''2017- ஆம் ஆண்டுக்கு முன்பாக உத்தரபிரதேசத்தில் ரேஷன் கார்டு மோசடி ஒவ்வொரு நாளும் நடைபெற்றது. லட்சக்கணக்கான போலி ரேஷன் கார்டுகளை அவர்கள் உருவாக்கினார்கள். இந்த போலி ரேஷன் கார்டு திட்டத்தை இரட்டை என் ஜின் கொண்ட அரசாங்கம் தடுத்து நிறுத்தியது. முஸ்லிம் பெண்களை முத்தலாக்கிலிருந்து விடுவித்தது பாஜக அரசு. முஸ்லிம் பெண்கள் பாஜக அரசை வெளிப்படையாக ஆதரிக்கத் தொடங்கியபோது, எதிர் அணியினர் கவலையடைந்தனர். பாஜக ஒவ்வொரு முஸ்லிம் பெண்ணுடனும் நிற்கிறது'' என்று பிரதமர் மோடி பேசினார்.

முஸ்லிம் பெண்கள்
''உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சியின் கீழ் தான் முஸ்லீம் பெண்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள். பள்ளி, கல்லூரி செல்லும் முஸ்லிம் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முத்தலாக் தடை சட்டம் முஸ்லீம் பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளது. முஸ்லிம் பெண்கள் தெருக்களில் செல்லும்போது, ஈவ் டீசிங் செய்யப்படுகிறார்கள். அதனால் நிறைய சிரமங்களை எதிர்கொள்கின்றனர். எங்கள் அரசாங்கத்தால் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட பிறகு அவர்கள் இப்போது பாதுகாப்போடு இருக்கிறார்கள்'' என்று பேசியுள்ளார் பிரதமர்

ஹிஜாப்
கர்நாடக மாநிலத்தில் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வருவதற்கு கல்லூரி நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்ததால், சர்வதேச பிரச்சனையானது ஹிஜாப் விவகாரம். கல்லூரிக்கு சீருடை மட்டுமே அணிந்து வர வேண்டும் என்று பாஜகவினர் தெரிவித்தனர். இந்த நிலையில், ஹிஜாப் விவகாரம் பெரிதான நிலையில், பிரதமர் மோடி பாஜக ஆட்சியில் முஸ்லிம் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

பிரசாரம்
முஸ்லிம் பெண்களுக்கு பாஜக பாதுகாப்பாக இருப்பதாக பாஜக தொடர் பிரசாரம் செய்து வருகிறது. குறிப்பாக உத்தரப்பிரதேசம் தேர்தலில் அமித்ஷா முதல் பிரதமர் வரை அனைவரும் முஸ்லிம் பெண்கள் குறித்து பேசி வருகின்றனர். சஹரான்பூரில் பாஜக பிரசாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், ''முஸ்லிம் பெண்கள் ஒடுக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய உத்தரப் பிரதேசத்தில் பாஜக தலைமையிலான அரசு அவசியம்'' என்று கடந்த சில தினங்களுக்கு முன் பேசி இருந்தார்.












Click it and Unblock the Notifications