“ராஜநாகம் சார்.. என்னை கடிச்சதால செத்து போச்சு”.. பாம்புடன் வந்து மருத்துவர்களை அலற வைத்த போதை நபர்!
உத்தரப்பிரதேசத்தில் தன்னை கடித்த ராஜநாகத்தை அடித்துக் கொன்று, அதன் சடலத்துடன் மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களை அலற வைத்துள்ளார் ஒருவர்.
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் தன்னைக் கடித்த பாம்பு இறந்து விட்டதாகக் கூறி, ராஜநாகத்தின் சடலத்துடன் மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களை அலற வைத்துள்ளார் மது போதையில் இருந்த நபர் ஒருவர்.
பாம்புக் கடிபட்டவர்கள் உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொண்டால், அவர்கள் உயிர் பிழைக்கும் வாய்ப்புகள் அதிகம். ஆனால் என்ன பாம்பு கடித்தது என்பதை கையோடு எடுத்துச் சென்றால், மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்ற நம்பிக்கையில், பல இடங்களில் கடித்த பாம்பை தேடுவதற்கே நேரத்தை அதிகம் செலவிடுகின்றனர். கூடவே, கடித்த பாம்பை கையோடு எடுத்துச் சென்று மருத்துவர்களையும் பயத்தில் அலற வைத்து விடுகின்றனர்.
உத்தரப்பிரதேசத்தில் நடந்த சம்பவமும் அப்படிப்பட்டதுதான்.

பாம்புடன் வந்த நோயாளி
சம்பவத்தன்று உத்தரப்பிரதேச மாநிலம், குஷிநகரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு மது போதையில் இருந்த நபர் ஒருவர் கையில் ஒரு பாலீதீன் கவருடன் சென்றுள்ளார். அந்த கவரில் ராஜநாகம் ஒன்று இருப்பதை தெரிந்து கொண்ட மருத்துவ ஊழியர்கள் பயத்தில் கத்தியிருக்கிறார்கள். அவர்களைப் பதற்றமடைய வேண்டாம் எனவும், அந்த பாம்பு இறந்து விட்டது என்பதையும் போதையிலும் நன்றாக தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கிறார் அந்நபர்.

இருமுறை கடித்தது
கூடவே, உடனடியாக தனக்கு பாம்பு கடிக்கான சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும் என்றும், தன்னை அந்த ராஜநாகம் இருமுறை கடித்து விட்டது என்றும் அந்நபர் திரும்பத் திரும்ப கூறியிருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள், அவரை சோதித்துப் பார்த்திருக்கிறார்கள். அப்போது அவர் கூறியது உண்மைதான் என்பது தெரிய வந்துள்ளது.

மிதிபட்ட ராஜநாகம்
பாம்பு கடிக்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த போது, அவர் தன்னை பாம்பு கடித்த கதையைக் கூறியிருக்கிறார். அதன் மூலம், பாம்பு கடிபட்ட நபரின் பெயர் சலாவுதீன் மன்சூரி (35) என்பது தெரிய வந்தது. சம்பவத்தன்று, அவர் பத்ரௌனா ரயில் நிலையம் வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அவர் மது போதையில் இருந்ததால், தெரியாமல் பாதையில் கிடந்த ராஜநாகத்தை மிதித்துள்ளார்.

பாம்பு மீது தாக்குதல்
மிதிபட்ட வேகத்தில் அந்த ராஜநாகம் அவரைக் காலில் கடித்து விட்டது. பாம்பு கடித்ததை உணர்ந்த அந்நபர், உடனடியாக குனிந்து அப்பாம்பை தனது வெறும் கைகளால் பிடித்துள்ளார். கூடவே, "நீ கடித்ததால் நான் எப்படியும் இறந்துவிடுவேன். நீ மட்டும் வாழலாம் எனக் கனவு காணாதே... உன்னையும் வாழ விட மாட்டேன்" என வசனம் பேசிக் கொண்டே, அதனை தாக்கியுள்ளார்.

திரும்பக் கடித்த பாம்பு
அப்போது அந்த ராஜநாகம் அவரைக் கையிலும் கடித்துள்ளது. ஆனாலும், தனது தாக்குதலை நிறுத்தாமல் தொடர்ந்து அந்த பாம்பை அடித்தே கொன்று விட்டார் மன்சூரி. நடந்த சம்பவத்தை வீட்டிற்குப் போய் தனது சகோதரனிடம் தெரிவித்துள்ளார் அவர். பதறிப் போன அவர்தான் மன்சூரியை மருத்துவமனைக்கு போகச் சொல்லி இருக்கிறார். அதற்குப் பிறகுதான் மேற்கூறிய சம்பவங்கள் நடந்துள்ளது.

விஷமான பாம்பு
ராஜ நாகம் உலகின் மிகப்பெரிய விஷப் பாம்புகளில் ஒன்று. 18 அடி நீளம் வரை வளரும் திறன்கொண்டது. அதன் விஷம் 15 முதல் 20 மனிதர்களைக் கொல்லுவதற்குப் போதுமானது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஆனால், அந்தப் பாம்பு இருமுறைக் கடித்தும் மன்சூரிக்கு ஒன்றும் ஆகவில்லை என்பதுதான் மருத்துவர்கள் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

ஆச்சர்யம் ஆனால் உண்மை
இந்தச் சம்பவம் தொடர்பாக, மன்சூரிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், "ராஜநாகம் இரண்டு முறை கடித்தும் அவரின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பது மகிழ்ச்சியளிக்கிறது. பாம்பு கடித்து இறந்தவர்களைத்தான் பார்த்திருக்கிறோம். முதன்முறையாக மனிதனைக் கடித்த பாம்பு இறந்ததை இப்போதுதான் கேள்விப்படுகிறோம்" என வேடிக்கையாகத் தெரிவித்துள்ளார். ஒருவேளை விஷமே விஷத்தை முறித்துவிட்டது போல..












Click it and Unblock the Notifications