கரண்ட மகுடம், காதுகளில் குண்டலங்கள்..சதுர்புஜ துர்க்கை..மதுரையில் 1200 ஆண்டுகால கொற்றவை சிற்பம்
மதுரை: அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கொற்றவை சிற்பம் ஒன்று மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பம் சுமார் 1200 ஆண்டுகள் பழமையானது என்று வரலாற்றுத்துறை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கொற்றவை 4 கைகளுடனும் இருப்பதால் சதுர் புஜ துர்க்கை என்று அழைக்கப்படுவதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே கணவாய் கருப்பசாமி கோவில் ஒன்று உள்ளது. அதன் எதிரே இருக்கும் ஊரணி கரையில் மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரியின் முதுகலை வரலாற்றுத்துறை தலைவரும், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளருமான முனைவர் முனீஸ்வரன் தலைமையில் பேராசிரியர் லட்சுமண மூர்த்தி அஸ்வத்தாமன், ஆய்வாளர் அனந்த குமரன் ஆகியோர் கணவாய் பகுதியில் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சுமார் 1200 ஆண்டுகள் பழமையான கொற்றவை சிற்பம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கொற்றவையானவர் பழையோள், பாய்கலைப்பாவை, ஐயை, பைந்தொடிப்பாவை, ஆய்கலைப்பாவை, சூலி, நீலி, காடுகிழாள், கானமற் செல்வி என்று பல்வேறு பெயர்களில் அறியப்படுகிறாள். சிலப்பதிகாரத்தில் கொற்றவையின் கோயில், 'ஐயை கோட்டம்' என்று அழைக்கப்பட்டுள்ளது. பல்லவர்கள் காலத்தில், கொற்றவை வழிபாடு மிகச்சிறப்பாக இருந்துள்ளது. அவர்களின் கீழ் ஆட்சிசெய்த வாணர்கள், மலையமான்கள் பல்லவர்களின் கலைப் பாணியைப் பின்பற்றி கொற்றவையின் தோற்றத்தை வடிவமைத்துள்ளனர்.
கொற்றவை சிற்பங்கள் தமிழகத்தில் பல இடங்களில் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம் பெரியநெசலூர் என்ற கிராமத்தில், 1100 ஆண்டுகளுக்கு முற்பட்ட மலையமான் கால கொற்றவை சிலையையும் சில கல்வெட்டுகளையும் கண்டுபிடித்தனர். இந்த நிலையில் மதுரை அருகே செக்கானூரணியில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கொற்றவை சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
செக்கானூரணியில் இருந்து மேலக்கால் செல்லும் சாலையில் கணவாய் கருப்பசாமி கோயில் எதிரே ஊரணி கரையில் புதைந்த நிலையில் இருந்த சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 4 அடி உயரம், 2 அடி அகலம் கொண்ட பலகை கல்லில் 4 கரங்களுடன் புடைப்பு சிற்பமாக கொற்றவை சிலை செதுக்கப்பட்டுள்ளது. தலையில் கரண்ட மகுடம், காதுகளில் குண்டலங்கள், கழுத்தில் ஆரம், கைகளில் பிரயோக சக்கரம், சங்கு ஏந்தி அபய முத்திரையுடன் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த கொற்றவை 4 கைகளுடனும் இருப்பதால் சதுர் புஜ துர்க்கை என்று அழைக்கப்படுவதாகவும், இதேபோல விருதுநகர் அருகே பள்ளிமடத்தில் 2ம் வர்ண குல பாண்டியர்கள் காலத்தில் கொற்றவை சிற்பம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தொல்லியல் ஆய்வாளர் முனீஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்த சிற்பம் கி.பி. 9ம் நூற்றாண்டில் முற்கால பாண்டியர்கள் காலத்தை சேர்ந்ததாக இருக்கும் என்றும் அவர் கணித்துள்ளார்.
இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உதவிப் பேராசிரியர் முனீஸ்வரன், செக்கானூரணி இருந்து மேலக்கால் செல்லும் சாலையில் கணவாய் கருப்பசாமி கோவில் எதிரே ஊரணி கரையில் புதைந்த நிலையில் கொற்றவை சிற்பம் கண்டறியப்பட்டது. இச்சிற்பத்தில் 4 அடி உயரம் 2 அடி அகலம் கொண்ட பலகைக்கல்லில் நான்கு கரங்களுடன் புடைப்புச் சிற்பமாக காட்சி தருகிறாள் கொற்றவை. தலையில் கரண்ட மகுடம் அலங்கரிக்க, வட்ட வடிவிலானை முகம் தேய்மானத்தோடு காணப்படுகின்றன. இரு காதுகளில் பத்ர குண்டலங்கள் கழுத்தில் ஆரம் போன்ற அணிகலன், கைகளில் கைவளைகள் அனிந்து கம்பீரமாக நின்றவாறு காட்சி தருகிறாள். கீழ் பகுதி மண்ணில் புதைந்து காணப்படுகிறது.
தன் கரங்களில் பிரயோகச் சக்கரம், சங்கு, ஏந்தியயும் வலது கரத்தில் அபய முத்திரையும் செதுக்கப்பட்டுள்ளது. ஆரம்ப காலத்தில் மிக பிரமாண்டமாக எட்டு கைகளுடன் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்ட கொற்றவை காலப்போக்கில் நான்கு கைகயோடு எளிமையான முறையில் செதுக்கப்பட்டுள்ளது. நான்கு கைககள் கொண்டு இருப்பதால் சதுர் புஜ துர்க்கை என்றும் அழைக்கப்படுகின்றது.
விருதுநகர் மாவட்டம் பள்ளிமடத்தில் இச்சிற்பத்தை போன்ற கொற்றவை சிற்பம் உள்ளது. அந்த சிற்பம் இரண்டாம் வரகுண பாண்டியர்கள் காலத்தைச் சேர்ந்தவை. தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள கொற்றவை சிறபத்தின் உருவத்தை பார்க்கும்போது, கி.பி 9ம் நூற்றாண்டில் பிற்காலத்தில் முற்கால பாண்டியர்கள் காலத்தைச் சேர்ந்தாக இருக்கும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications