செங்கலை காட்டியவர் ஏன் இங்கே வரவே இல்ல? - மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் உதயநிதியை சீண்டிய உதயகுமார் !
மதுரை : மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தொடங்க தாமதம் ஏன் என திமுக அரசை கேள்வி எழுப்பியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்.
பாஜக தேசிய தலைவர் நட்டா, மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 95% முடிந்துவிட்டதாக கூறியதைத் தொடர்ந்து மதுரை எய்ம்ஸ் விவகாரம் மீண்டும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.
இந்நிலையில், தேர்தலின்போது செங்கலைக் காட்டியவர் அதன்பிறகு ஏன் இங்கே வரவில்லை என உதயநிதி ஸ்டாலினை சீண்டியுள்ளார் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்.
எப்போது எய்ம்ஸ் வரும் என்று காத்திருக்கும் மக்களை ஏமாற்றாமல் திமுக அரசு நடவடிக்கையைத் தொடர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் ஆர்பி உதயகுமார்.

மதுரை எய்ம்ஸ் - ஆமை வேகம்
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு 2015ஆம் ஆண்டு அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து அதற்கான இடம் தோப்பூரில் தேர்வு செய்யப்பட்டு 2019ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன்பிறகு கட்டுமானப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வந்தன. தற்போதைய நிலையில், சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் தமிழகம் வந்த பாஜக-வின் தேசிய தலைவர் ஜேபி நட்டா மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான பணிகள் 95 சதவிகிதம் நிறைவடைந்ததாக தெரிவித்தார். இதனால் மதுரை எய்ம்ஸ் விவகாரம் மீண்டும் தமிழகத்தில் பேசுபொருளானது.

ஆர்பி உதயகுமார்
இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக செங்கலை காட்டி பிரச்சாரம் செய்த உதயநிதி எங்கே என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்று தமிழக அரசியல் வரலாற்றில் ஜெயலலிதாவும் எடப்பாடியாரும் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தினார்கள். அதனை தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2015 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டது, அதனைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு பாரத பிரதமர் மூலம் எடப்பாடியார் அடிக்கல் நாட்ட வைத்தார்.

தென் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு
தமிழகத்தில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகள் இருந்தாலும், எய்ம்ஸ் மருத்துவமனை என்பது தமிழகத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. கட்டுமான பணி என்றைக்கு தொடங்கும் என்று தென் மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளார்கள். பல்வேறு விவாதம் நடைபெற்று வருகிறது, இதற்கு தேவையான நிலம் வருவாய்த்துறை சார்பில் எடப்பாடியார் வழிகாட்டுதலோடு 222 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, சுற்றுச்சுவர், புதிய சாலை போன்ற பணிகள் நடைபெற்று தயார் நிலையில் உள்ளது.

செங்கலை காட்டியவர் எங்கே?
இப்போது என்ன கேள்வி எழுகிறது என்றால், நிலம் இங்கே.. செங்கலைக் காட்டியவர் எங்கே என்று தென் மாவட்ட மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். செங்கலை காட்டி விளம்பரம் தேடியவர் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஆவார். இந்த ஒன்றரை ஆண்டு காலம் செங்கலை காட்டியவரும், மக்களிடம் இருந்து செங்கோலை பெற்றவரும் அந்த செங்கலை பற்றி பேச வாய் திறக்க மறுப்பது ஏன்? இன்று தென் மாவட்ட மக்கள் கேள்வி கேட்கிறார்கள். அவர் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்துகிறாரா அல்லது அவர் சார்ந்த கலை துறையில் கவனம் செலுத்துகிறாரா?

செங்கல் - செங்கோல்
ரெட் ஜெயன்ட் மூவிசை உலக அளவில் எடுத்துச் செல்ல பாடுபடுகிறாரா இல்லை, எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வர கவனம் செலுத்துகிறாரா என்று பல விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இன்றைக்கு ஒரு முறை கூட செங்கலை காட்டியவரும் இங்கு வரவில்லை, செங்கோலை தாங்கியவரும் ஒருமுறை கூட ஆய்வு செய்ய வரவில்லை என்று தென் மாவட்ட மக்கள் ஏங்கி கொண்டுள்ளார்கள். மத்திய அரசுக்கு நீங்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.

எப்போது தொடங்கும்?
இன்றைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட ஜைக்கா நிறுவனம் 1,500 கோடியை ஒதுக்கி, 26.3.2021யில் கையெழுத்து இட்டுள்ளது. மொத்த மதிப்பீடு 1,977 கோடியில் ஜைக்கா நிறுவனம் 1,500 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. மீதியை வரும் அக்டோபர் 26 ஆம் தேதிக்குள் வழங்குவதாக கூறப்பட்டுள்ளது. இதில் ஜைக்கா 82% மத்திய அரசும் 12% தர முடிவுக்கு வந்துள்ளது. நிதி பிரச்சனையில் ஓரளவில் நல்ல செய்தி நமக்கு கிடைத்திருக்கிறது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது, சாலை கொடுக்கப்பட்டுள்ளது, சுவர் எழுப்பப்பட்டுள்ளது, அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது, ஜைக்கா நிறுவனம் 1500 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது நல்ல செய்தி வந்தாலும் கூட, கட்டிட பணி எப்போது தொடங்கும் என்ற நல்ல செய்தி எப்போது என்பது தென் மாவட்ட மக்கள் கோரிக்கையாக உள்ளது.

சொன்னது என்னாச்சு
ஆகவே செங்கலை காட்டிய உதயநிதி கட்டிடம் கட்ட செங்கலை எப்போது எடுத்து வைப்பார் என்று மக்கள் கேள்வி எழுப்புள்ளனர். ஒன்றரை ஆண்டுகளில் நீங்கள் எத்தனை மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வாங்கினீர்கள்? எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இந்த ஒன்றரை ஆண்டுகளில் கட்டிடம் கட்ட ஒரு செங்கலை கூட எடுத்து வைக்கவில்லை என்று அதிருப்தி மக்களிடத்தில் எழுந்துள்ளது. எப்போது எய்ம்ஸ் வரும் என்று காத்திருக்கும் மக்களை ஏமாற்றாமல் திமுக அரசு நடவடிக்கை தொடர வேண்டும். இதுவும் நீட் கதை போல் சென்று விடக்கூடாது. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட்க்கு என்று சொன்னீர்களே? சொன்னது என்ன ஆச்சு? காற்றிலே பறந்து போனது, இதற்கு பதில் சொல்வதை விட செயல் வடிவத்தில் நீங்கள் செய்ய மக்கள் காத்துள்ளார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications