மதுரைக்கு வரும் உதயநிதி ஸ்டாலின்.. நீட் தேர்வு ரத்து ரகசியத்தை வெளியிடுவாரா? அதிமுக மாஜி கேள்வி!
நீட் தேர்வு ரத்து ரகசியத்தை உதயநிதி ஸ்டாலின் மதுரையில் வெளியிடுவாரா என்று ஆர்பி உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை: மதுரையில் நடக்க உள்ள நலத்திட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வு ரத்து ரகசியத்தை வெளியிடுவாரா என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கான நடவடிக்கைகளில் உதயநிதி ஸ்டாலினின் பங்களிப்பு என்ன என்பது பற்றி மக்களிடம் சொல்ல முடியுமா என்றும் சவால் விடுத்துள்ளார்.
மதுரையில் இன்று அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவுக்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு உதவித்தொகையை வழங்குகிறார்.
இதற்காக மதுரை சுற்றுச்சாலையில் வண்டியூர் அருகே மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணியும், பல்லாயிரம் பேர் அமரும் வகையில் இருக்கை வசதியையும் ஏற்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மதுரை வரும் உதயநிதி
இந்த நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த 75 ஆயிரம் பேருக்கு ரூ.180 கோடி கடனுதவியை அமைச்சர் உதயநிதி வழங்க உள்ளார். மேலும் பல்வேறு திட்டங்களில் பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்காக மதுரைக்கு வரும் உதயநிதி ஸ்டாலினுக்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் அளிக்க திமுகவினர் திட்டமிட்டு வருகின்றனர்.

நீட் ரத்து ரகசியம்
இந்த நிலையில் மதுரை வரும் உதயநிதி ஸ்டாலினுக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். குறிப்பாக நீட் தேர்வு ரத்து ரகசியத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிடுவாரா அல்லது கல்வி கடன் ரத்து என்று அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதி பற்றிய மகிழ்ச்சியான தகவலை வெளியிடுவாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

எய்ம்ஸ் மருத்துவமனை
அதேபோல், கடந்த சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருப்பது குறித்து உதயநிதி ஸ்டாலின் ஏதேனும் மகிழ்ச்சிகரமான அறிவிப்பு வெளியிடுவதற்கு ஏதேனும் வாய்ப்பு உள்ளதா? ஒரு செங்கலை காட்டி எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி பேசினாரே, அதனை நினைவு கூர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கான நடவடிக்கைகளில் அவரின் பங்களிப்பை மக்களிடத்தில் விளக்கி சொல்ல முன்வருவாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக திட்டங்கள் முடக்கம்
மதுரை வரும் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க உள்ள நலத்திட்ட நிகழ்ச்சிக்காக மிகப் பிரம்மாண்ட அளவிலான ஏற்பாடு செய்யப்பட்டு வருவது மக்களை முகம் சுளிக்க வைக்கும் அளவில் நடைபெற்று வருகிறது. அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. அதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளிப்பாரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications