பாதயாத்திரைக்கு இடையே திடீர் டெல்லி பயணம்.. அண்ணாமலையை நேரில் அழைத்த ஜேபி நட்டா.. பாஜகவில் பரபர!
மதுரை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நாளை திடீர் பயணமாக டெல்லி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக தலைவர் ஜேபி நட்டா அழைப்பின் பேரில், 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரைக்கு இடையே அவசர பயணமாக டெல்லி செல்ல இருக்கிறார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் 168 நாட்களுக்கு பாதயாத்திரை நடத்த திட்டமிட்டு, தற்போது நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த ஜூலை 28ஆம் தேதி "என் மண், என் மக்கள்" என்ற பெயரில் இந்த பாதயாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இந்த பாதையாத்திரை ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்கி சிவகங்கைக்கு சென்று அதன் பின்னர் மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்குச் செல்லும் என கூறப்பட்டிருந்தது. அதன்படி இன்று மதுரை மாவட்டத்தில் அண்ணாமலையின் பாதையாத்திரை நடைபெற்றது.
அண்ணாமலை பாதயாத்திரையின்போது ஏராளமான பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர். அண்ணாமலை பாதயாத்திரை செல்லும் இடங்களில் கூட்டம் திரண்டு வருகிறது. மக்கள் மத்தியில் வேனில் இருந்தபடி திமுக அரசை காட்டமாக விமர்சித்துப் பேசி வருகிறார் அண்ணாமலை.
இந்நிலையில், அண்ணாமலை நாளை திடீர் பயணமாக டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை மேற்கொண்டு வரும் அண்ணாமலை, நாளை மதுரையில் நடைபெறவிருந்த பொதுக்கூட்டத்தை ரத்து செய்துவிட்டு டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா அழைப்பின் பேரில் அண்ணாமலை டெல்லிக்கு நாளை மதியம் அவசர பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. பாதயாத்திரைக்கு இடையே அண்ணாமலை டெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளது பாஜகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் டெல்லியில் நடைபெற்ற என்.டி.ஏ கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றிருந்தார். இதன் மூலம் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டது. எனினும், தமிழ்நாட்டில் பாஜக - அதிமுக இடையே வார்த்தைப் போர் முற்றியுள்ளது.
அண்ணாமலை எல்லாம் எங்களுக்கு ஜஸ்ட் லைக் தட் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசிய நிலையில், அண்ணாமலை அவருக்கு காட்டமாக பதிலடி கொடுத்திருந்தார். அதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எதிர்வினை ஆற்றி இருந்தார். இதனால் பாஜக - அதிமுக இடையே மீண்டும் மோதல் போக்கு உருவானது. இந்நிலையில் தான் அண்ணாமலை டெல்லிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications